Skip to main content

வலியிலிருந்து கிடைக்கும் முத்து சுதந்திரம்




இந்தியாவின் தென்கோடியில் மன்னார் வளைகுடாப் பகுதியில் எடுக்கப்படும் சங்குகள், இந்தியாவில் இன்னொரு மூலையில் இருக்கும் வங்கத்தில் மட்டுமே விலைபோகிறது. வங்கக் கைவினைக் கலைஞர்கள்தான் தூத்துக்குடி சங்கில் நகைகள் செய்வதற்குப் பெயர்போனவர்கள். தென்தமிழகத்தின் மூலையில் ஆழ்கடலில் கிடைக்கும் சங்கு, தேசத்தின் இன்னொரு மூலையில் நகையாகும் விந்தைக்கு இணையான நாவல் படைப்புதான் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தை மையமாக வைத்து, பாரம்பரியம் மிக்க தூத்துக்குடி மீனவர்களின் தொன்மையான வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வங்க எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய, அந்நியத்தன்மை தெரியாமல் இந்தப் படைப்பில் பிரதிபலித்துள்ளார். நவீன வங்க நாவல்களின் செவ்வியல் தன்மை ஏறிய, தமிழ் நாவல்களிலேயே இடம்பெறாத அபூர்வ தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாவல் இது என்பதுதான் இதன் தனித்துவம்.

1959-ல் மீன்வளத் துறை அதிகாரியாக கல்கத்தாவிலிருந்து தூத்துக்குடிக்குப் பணிமாற்றத்துக்குள்ளான நூலாசிரியர் போதிசத்வ மைத்ரேய, ஆழ்கடலில் மீன்களைத் தேடுவதுதான் தன் பணி என்று முன்னுரையில் கூறுகிறார். இலக்கியம், சிற்பம், இசை, நாட்டியம் என்று தமிழ்ப் பண்பாட்டின் மரபான நுண்கலைச் செல்வங்களைப் பாதுகாத்து வைத்து, சமூக மாற்றத்தில் காலாவதியான தேவதாசி சமூகத்தைப் பற்றி நேர்மறையானதும் சற்றே விரிவானதுமான ஒரு படமும் இந்த நாவலில் கிடைக்கிறது.

இந்திய சுதந்திரம் என்னும் லட்சியக் கனவும், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரான கனவின் சிதைவும், ஆட்சி மாறிய பின்பும் வறுமையும் சுரண்டலும் ஏற்றத்தாழ்வும் மாறாத கோலங்கள்தான் இந்த நாவலின் களம். மீனவர் பண்பாட்டையும் அவர்களது தொல்குடி மரபின் உரத்தையும் உள்வாங்கி, அதே நேரத்தில் அந்தச் சமூகத்தில் நிகழும் அவலங்களை மாற்றத் துடிக்கிற பீட்டர்தான் முதன்மை நாயகன்; மீனவர் சமூகத்திலேயே பிறந்து நவீனக் கல்வி பெற்று லண்டனுக்குச் சென்று, தந்தையின் மரணத்தையொட்டி தூத்துக்குடிக்குத் திரும்பும் இன்னொரு லட்சியவாதி அந்தோணி. நாவலின் இன்னொரு பகுதியோ தஞ்சையில் நிலைகொள்வது. இசையிலும் நாட்டியத்திலும் தேர்ச்சிபெற்று, தேவதாசி சமூகத்தின் கடைசித் தலைமுறை நாட்டியக் கலைஞரான ரத்னாவைக் காதலித்துக் கைப்பிடித்து சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் கைதாகிக் காணாமல்போகும் ராமன், சுதந்திரப் போராட்டத் தியாகி வெங்கி அய்யர் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்கள்.

தினசரி வாழ்வாதாரமே ஆழ்கடலாக இருப்பதால் அதன் அபாயங்களும் அது விடுக்கும் மரண சவால்களும் வலிகளுமாக உடலிலும் மனத்திலும் வலுவேறியது பரதவ மக்களின் வாழ்க்கையும் பண்பாடும். அங்கே அன்பும் விரோதமும் காதலும் கடலின் ஆழத்தையும் உக்கிரத்தையும் கொண்டுள்ளதை இந்த நாவலின் ஆண், பெண் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றன. சோபியா, சூஸி, லிண்டா, மார்ஸி என வெவ்வேறு குணபாவங்களில் வரும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் அதிகம். தென்னகத்தில் காங்கிரஸ் தலைமையில் செயல்பட்ட சுதந்திரப் போராட்ட இயக்கம், தேவதாசி முறைக்கு எதிராக நடந்த செயல்பாடுகள், தூத்துக்குடி மீனவர்களின் தொல் வரலாறு எனப் பரந்த ஒரு விவாதக்களத்தைக் கொண்டுள்ள இந்த நாவலில், நேருவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கிருஷ்ண மேனனும் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறார்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும் பின்னர் காங்கிரஸ் ஆட்சியாளர்களுடனும் சேர்ந்து தங்கள் தொழிலை அனுசரித்து வளம்பெற்று செல்வந்தர்களான மீனவர்களுக்கிடையில் உள்ள வன்மம், போட்டி, ஏற்றத்தாழ்வுகளும்தான் கதை. பீட்டரின் தந்தையும் அந்தோணியின் தந்தையும் தோற்று தங்கள் குழந்தைகளிடம் லட்சியத்தை விதையாக விட்டுச் செல்பவர்கள். உயிரைப் பணயம் வைத்து தலைமுறை தலைமுறையாக ஆழ்கடலில் இறங்கி, சிப்பியும் சங்கும் எடுத்தும் மீன்களைப் பிடித்துவந்தும் வறுமையில் தொடரும் நிகழ்ச்சிகளை உக்கிரமாகத் தீண்டியுள்ளார் நாவலாசிரியர். ஏழைகளை ஏழைகளாக வைத்திருக்கவே அந்த மக்கள் இறுதி நம்பிக்கையாகத் தேவாலயமும் தேவாலயத்தை நிர்வகிக்கும் நிறுவனமும் இருக்கின்றன. ஏற்றத்தாழ்வைத் தக்கவைத்திருக்கும் தேவாலயத்திலிருந்து நீதிமிக்க கிறிஸ்துவை விடுவிப்பதற்கான லட்சியவாதிகளாக பீட்டரும் அந்தோணியும் சோபியாவும் இந்த நாவலில் தெரிகிறார்கள்.

வெள்ளையர்கள் போய்விட்டால் இந்த நாட்டின் அவலங்களெல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி ஏமாந்துபோன வெங்கி அய்யர் தனது கண் முன்னாலேயே அனைத்தும் சரிவதைப் பார்க்கிறார். பீட்டரும் சோபியாவும் தனிப்பட்ட அளவில் தங்கள் லட்சியத்தில் கொஞ்சம்போல வெற்றிபெறுகிறார்கள். லட்சியங்கள் வெற்றிபெறும்போது நாவல் ஏன் சரிந்துபோகிறது?

மன்னார்வளைகுடாப் பகுதியில் முத்தெடுப்பதற்குச் சிறுபிள்ளைகளைப் பழகவிடுவதற்காக ஆழ்கடலில் இறங்கும் பயிற்சி முறைகள், ஆழ்கடலில் அலையும் உயிர்களைப் பற்றிய விவரணைகள் படித்தவர்களுக்கு அழியாத சித்திரமாக நினைவில் இருக்கும். தஞ்சாவூரை மையமாகக் கொண்டு தேவதாசி மரபைச் சேர்ந்தவர்களின் அகவாழ்க்கையும், இசை, நாட்டியப் பயிற்சி சார்ந்த உரையாடல்களும் உயிர்த்தன்மையுடன் பதிவாகியுள்ளன. ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, ‘சோரட் உனது பெருகும் வெள்ளம்’, ‘தன்வெளிப்பாடு’ என வங்க நவீனச் செவ்வியல் நாவல்களின் தாக்கம் பெற்றது தமிழ் வாசகச் சூழல். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அந்தச் செவ்வியல்தன்மை இந்த நாவலில் பல இடங்களில் தென்பட்டாலும் முழுமை கூடாத அலைச்சல் அதிகம்.

இந்த உலகத்தில் கிடைக்கும் முத்துக்களிலேயே தூத்துக்குடியில் கிடைக்கும் அபூர்வ முத்துக்கள்தான் அளவில் பெரியவை. முத்து அளவில் பெரியதாகப் பிறக்க, அது பிறக்கும் சிப்பி, மிகுந்த வலியை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அந்த வலியிலிருந்து சுரக்கும் வேதிப்பொருளிலிருந்துதான் நல்ல, பெரிய முத்து கிடைக்கிறது. மனிதன் சுதந்திர மனப்பான்மையை அடைய அவன் சிப்பியைப் போல வேதனையை அனுபவிக்க வேண்டும். தேசமும் உண்மையான சுதந்திரத்தை அடைய, வெள்ளையர்கள் போனால் மட்டும் போதாது. சாதி, மதம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வு உணர்வுகளிலிருந்து விடுபடும் வலியை நாம் ஏற்கவே இல்லை என்கிறான் நாவலின் நாயகன் பீட்டர். நாவலின் மூலபடிமம் ஆக முத்து மாறுகிறது. சென்ற நூற்றாண்டின் பின்பகுதி சமூக நிலைமைகளைப் பின்னணியாகக் கொண்டு பீட்டர் விமர்சிக்கும் அதே துயர நிலைமைகள் நீடித்திருப்பதோடு அவை வலிமையும் பெற்றிருக்கின்றன. அந்த அடிப்படையில் அமரர் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கும் இந்த நாவல் இப்போதும் பொருத்தமானது. அச்சுப்பிழை இல்லாமல், தரத்திலும் உயர்ந்த, குறைந்த விலையிலும் வாங்கக் கூடியதாக அறியப்பட்ட ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ புத்தகங்களின் தர வீழ்ச்சியை உணராமல் இந்தப் புத்தகத்தைப் படிப்பது சாத்தியமில்லை.

Comments