Skip to main content

அபி ஊர்

 


சென்னையில் நான் பார்த்திராத அபூர்வக் காட்சி அது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான நாள். ப்ரவுனியை சாயங்கால நடைக்கு அழைத்துச் செல்லும் சீதாபதி நகர் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் முனையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்றுவரை இயங்காத இஸ்திரி வண்டிக்குப் பக்கவாட்டில் இருக்கும சிமெண்ட் பலகை இருக்கையில் மூன்று மூதாட்டிகள் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்கள். யார் வீட்டுக்கும் சொந்தமில்லாமல், வேப்பமரத்தின் நிழலில் அமைந்திருக்கும் இருக்கை அது. மூன்று பாட்டிகளும் வெற்றிலை போட்டு சாயங்காலத்துக்குள் விரைந்து கொண்டிருக்கும் பொழுதில் சன்னமாக ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுகளில் பணிசெய்யும் மூதாட்டிகள் அவர்கள். இருக்கையின் ஓரத்தில் பையில் கரும்பு இருந்தது. அவர்கள் முகங்களில் இருந்த சுருக்க ரேகைகளும் மூக்குத்தியும் அசைபோடும் வாயும் வேப்பமரமும் சேர்ந்து அங்கு ஏற்படுத்தியிருந்த அமைதியும் அந்த இடத்தை விச்ராந்தியாக  ஆக்கியிருந்தது. அந்த மூன்று பெண்களும் வேப்பமரமும் அதிலிருந்து உதிர்ந்த இலைகள் படிந்த தெருவும் படர்ந்து கொண்டிருந்த மாலையும் நகரத்துக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதற்குப் பிறகு தற்செயலாகப் படிக்கத் தொடங்கிய அபி கவிதைகளில் ‘மாலை - ஊர்’ என்ற கவிதையைப் படித்தேன். ‘பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும் இடைச்சுவர் தகர்ந்து ஒன்றினுள் ஒன்றாகி ஊர் ஆகின்றன’ என்று அதில் எழுதியிருந்தார். எனக்கு ஏற்பட்ட உணர்வு தொடர்பில் கூடுதல் புரிதலை இந்தக் கண்டுபிடிப்பின் வழியாக ஏற்படுத்துகிறார். பொழுதின் நினைவு என்று சொல்லும்போது புரிவது போன்று இருப்பது நினைவின் பொழுது என்று சொல்லும்போது தோன்றிப் புரிந்து மயங்கிவிடுவதாக இருந்தது. அரூபம் திரையிட்டு விடுகிறது. பொழுதின் நினைவிலும் நினைவின் பொழுதிலும் இருக்கும் அந்த மூன்று பெண்கள் அந்த இடத்தை ஊராக்குகிறார்கள் போல. யாதும் ஊர் ஆவது அது. அபி கண்ட ஊர் அது. அந்த இடத்தை உற்றுப்பார்த்தால் அது எவருடைய ஊரும்தான்.  

விசுவாச வாலசைப்புகள் பின்தொடர என்று அபி எழுதும்போது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர் நாயென்று சொல்லவில்லை. வாலசைப்புகள் என்று சொல்கிறார். ஒரு வால் அசைப்பா அது. அதில் என்னுடைய ப்ரவுனியின் வாலசைப்பையும் காணமுடிகிறது அதில். 


மாலை - ஊர்

அபி


வேட்டைக்குப் போனவர்கள்

திரும்பி வருகிறார்கள்

மான் முயல்கள் வேறேதோ பிராணிகளைச் சுமந்து

விசுவாச வாலசைப்புகள் பின்தொடர

தாரை தப்பட்டை முழங்க

பந்தங்களின் வெளிச்சத்தில்

எவர் வெற்றியிலோ எவரெவர் சோர்வுகளோ

மழுங்கித் தெரிய.

000


மாலைநேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்திலேயே.

முடிவின்மையின் சேமிப்புக்கு

ஒருபுள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது

000

சிறுவர்கள் என்ற எங்களின் விளையாட்டினுள் நுழைந்து

வியர்வையைச் சீண்டிய

விநோதக் கனவு மயம்…

000

இருள் பூசப்பூச

மரங்களும் கூரைகளும் குட்டிச் சுவர்களும்

முகங்களும் அவற்றின் உரையாடல்களும்

கனத்து

யுகாந்திரங்களின் ரகசியம் அழுத்தி

மயங்குகின்றன

ஊர் மேடிட்டுக் கொள்கிறது

யாதும் ஊர் ஆகிறது

பகல்வேனிலின் சீற்றம்

அலறிப் புடைத்த ஆவேசம்

மூலைகளை மோதி அசைத்த காற்று

யாவும் ஊர் ஆகின்றன

பொழுதின் நினைவும்

நினைவின் பொழுதும்

இடைச்சுவர் தகர்ந்து

ஒன்றினுள் ஒன்றாக

ஊர் ஆகின்றன


பேசுவதற்கு என்ன இனி

தணிந்தடங்கிய யாவும் இதோ

ஊர் ஆகின்றன


உலக உருண்டை உருவிலகி 

ஊர் ஆகிறது

ஊர் 

தன் மிகச்சிறிய புள்ளியில். 

000

Comments