ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெண்களும் நாடெங்கும் திரண்டு மாதக்கணக்கில் நடத்திய அமைதிப் போராட்டங்கள், அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஜனநாயக நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் இந்து மதவாதிகள் இஸ்லாமிய மக்கள் மீது தலைநகரிலேயே ஏவிய கலவரம், ஊடகங்கள் கண்திறந்து மௌனித்திருக்க அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருந்த மத்திய அரசின் பாரபட்சம் என நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டேயிருந்த வருடம் 2020. இத்தகைய சூழ்நிலையில் சென்ற ஆண்டின் முடிவில் பிறப்பிக்கப்பட்ட மூன்று வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் புகைப்படங்களாகவும் படித்தும் பார்த்தும் எனது கொதிப்பு உயர்ந்துகொண்டிருந்தது, உயர்ந்து கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆளும் மத்திய அரசின் எதேச்சதிகாரம், மக்களின் ஒரு பிரிவினரிடத்தில் காட்டும் பாரபட்சம், ஏவிவிடும் ஜனநாயக விரோதச் செயல்களையே பெரும்பான்மை ஊடகங்களும் பிரதிபலித்து ஆதரிக்கும் நிலையில் இதுபோன்ற நெருக்கடியான நிலையை சுதந்திரமாகவும் படைப்பூக்கத்தோடும் எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணப் பத்திரிகையாக ‘தி டெலிகிராப்’ இக்காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானது. செய்திகளையும் புகைப்படங்களையும் தலைப்பையும் அது ஒவ்வொரு நாள் காலையிலும் வெளியிடும் முறை உற்சாகத்தையும் பத்திரிகையாளனாக மகிழ்ச்சியையும் தருவது.
பெருந்தொற்று காலத்தில் மோடி, தன் வீட்டில் மயில்களுடன் குலாவிக் கொண்டிருந்த புகைப்படங்களை வெளியிட்டு, தலைப்புச் செய்தியிலேயே மோடி, மயில்களுடன் இணைந்து எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பெருந்தொற்று காலத்தில், ஒருவர் தன்னைக் கோதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரோ? என்று கேட்டிருந்தது. பருவநிலை ரீதியாக விதவிதமான சாகுபடி முறைகள், உற்பத்திப் பொருட்கள், வித்தியாசமான விற்பனை முறைமைகளையும் கொண்ட ஒரு தேசத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் அவசரகதியில் திணிக்கப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக குடும்பத்தோடு தலைநகரின் எல்லைகளில் நின்று ஒரு மாத காலத்துக்கும் மேலாகப் போராடும் குடியானவர்கள் பிரதமரின் இல்லத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் போராடுகிறார்கள். மயில்களை வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரிக்க முடியும் அவரால் தன்னைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒரு பிரிவினரைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்க இன்னமும் முடியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும் அந்தரங்க உரிமை முதல் ஒரு தேசத்தில் வாழும் குடியுரிமை வரை பல்வேறு உரிமைகளுக்காக வெவ்வேறு முனைகளில் மக்கள் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதன் பின்னணியில் மோசமான பருவநிலை, பெருந்தொற்றுச் சூழலில், எல்லா ஜனநாயகப் போராட்டங்களையும் உரிமை கோரல்களையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் எதிர்கொள்ளும் ஒரு பேயரசை எதிர்த்து, திடமாக ஒரு மாத காலத்துக்கும் மேலாக தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வில் ஒரு பார்வையாளனாகவாவது பங்குகொள்ள வேண்டுமென்று நினைத்தேன். இந்தி தெரியாதது, தனியாக தலைநகருக்கு முதல் முறையாகச் செல்வது எல்லாம் அச்சத்தைத் தந்தாலும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்று ரயிலேறத் துணிந்தேன்.
கருத்தியல்களின் பெயரால், தன்முனைப்பின் பெயரால், தற்பிரேமையின் பெயரால், அல்ப வேறுபாடுகளின் பெயரால் எதிர்ப்பும் தார்மிகமும் தொடர்ந்து பல்வேறு முனைகளிலிருந்து சிதைக்கப்படும் மழுங்கடிக்கப்படும் காலம் நம்முடையது. இதுதொடர்பிலும் பல்வேறு காரணங்களாலும் சோர்விலிருந்த எனக்கு, தங்கள் தன்னிறைவின் மீது ஏவிய, சகல பலங்களையும் கொண்ட அரசு அதிகாரத்துக்கு எதிராகத் திரண்டு போராடும் குடியானவர்களுடன் சில மணிநேரங்களாவது கலந்து கரைந்து எனக்கு வலுவேற்றிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் அமிர்தலிங்கத்தின் எண்ணைக் கொடுத்து குறைந்த செலவில் விடுதியறை கிடைப்பதற்கு கவின்மலர் உதவி செய்தார்.
நான் டெல்லி சென்று இறங்கிய நாளன்று அமிர்தலிங்கம், டில்லியிலிருந்து ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், போராட்டம் நடக்கும் இடங்களையும், விடுதி இருந்த பாகர்கஞ்சிலிருந்து அவை இருக்கும் தொலைவையும் எனக்குத் தாளில் எழுதித் தந்தார். இந்த மூன்று வேளாண்மைச் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஏழை மக்களைப் பசியில்லாமல் வைத்திருக்கும் வெற்றிகரமான பொது வினியோக முறை முற்றிலும் சிதைந்துவிடும் என்பதையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
தடித்த பனிச்சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. ஆனால், நீரில் இறங்குவது போலத்தான்; ஜெர்கினின் பக்கவாட்டுப் பைகளில் கைகளைத் திணித்துவிட்டு, தெருவில் இறங்கித் துளாவித் திளைத்து இயங்கத் தொடங்கிவிட்டால் படிப்படியாக அந்தக் குளிரே உடல் தசைகளை மேலும் மேலும் அசைப்பதற்கான ஆற்றலையும் மதுரத்தையும் தரத் தொடங்குகிறது.
நான் விடுதி எடுத்துத் தங்கியிருந்த பாகர்கஞ்ச் பகுதியின் நேரு பஜாரில் பாலும் தோசை மாவு விற்கும் கடையும் சீக்கிரமே விழிக்கிறது. கிருஷ்ண மந்திர் என்றழைக்கப்படும் ஆலயத்தின் கதவு திறக்கப்படுகிறது. அடுத்து ஒரு பலசரக்குக் கடை. தெருவில் நாய்கள், பஜார் தெருவில் கிடைக்கும் துணிகள், நுரைப்பஞ்சு அட்டைகள், குப்பைகளைக் கொண்டு படுத்திருக்கின்றன. சென்னையில் காணப்படும் தெருநாய்களைவிட இரண்டு மடங்கு தடிமன் கொண்டு போஷாக்காகத் தெரிகின்றன. காலை வேலைக்குக் கிளம்புபவர்களாக இருக்கலாம். பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். குளிரைக் குறைப்பதற்காக இந்தியன் கிறிஸ்டியன் சிமெட்ரி கல்லறைத் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் நெருப்பை எரியவிட்டு அதன் வெப்பத்தில் ஏழை முதியவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். பால் வாங்க வந்த எஜமானர்களுடன் குளிருக்குக் கதகதப்பாக ஸ்வெட்டர் அணிந்து கம்பீரமாக நம்மை வேடிக்கை பார்த்தபடி செல்லும் வளர்ப்பு நாய்களையும் காலையிலேயே பார்க்க முடிகிறது. அதிகாலை டெல்லிக் குளிர் தந்த உற்சாகத்திலேயே குளித்து, வாடகைக் கார் பிடித்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளின் போராட்ட மையமான சிங்கூ பார்டருக்குப் போய் இறங்கினேன். டெல்லியில் நான் போன பாதையில் பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் யோகி ஆதியநாத்தும் மோடியும் வண்ணப்படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்திரத் துப்பாக்கிகள், கண்ணீர் புகைத் துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கில் ஆயுதப்படைப் போலீசார், முள்சுருள் வேலிகள் அமைத்து, பெரிய பெரிய சிமெண்ட் பாளங்களைப் போட்டுத் தடுத்திருக்கும் இடத்தைப் பார்க்கும்போதே அதுதான் போராட்டம் நடக்கும் எல்லை என்று தெரிந்துவிடும். பக்கவாட்டில் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கூ எல்லையைப் பொருத்தவரைக்கும் பக்கவாட்டு வழியாக பஞ்சாப் விவசாயிகள் போராடும் இடத்தைச் சில எட்டுகளில் அடைந்துவிட முடிகிறது. நான் சென்ற நேரம் காலை 9. 30 என்பதால், மெதுவாக மக்கள் விழித்தெழுந்து காலைக் கடன்கள், ஆசுவாச நடைகளை ஆங்காங்கு மேற்கொண்டு நடந்துகொண்டிருந்த டர்பன் மனிதர்களுடனேயே போராட்டக் களத்துக்குள் நுழைந்தேன். களத்தின் தொடக்கத்திலேயே ஒரு பெரிய மேடையில் ஆர்மோனியத்தோடு கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தனர். அதுதான் போராட்டம் தொடர்பிலான அறிவிப்புகள், உரைகள், பிரார்த்தனைகள், பத்திரிகை அறிக்கைகள் அனைத்தும் நடக்கும் மேடையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கு வந்திருக்கும் குடியானவர்கள் மேடைக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த பச்சை விரிப்பில் அமர்ந்து போதுமென்று தோன்றும் போது எழுந்து செல்கின்றனர். இந்தப் பார்வையாளர் விரிப்புக்கு அப்புறம் போராட்டக் களம் ஒரு கிராமத்துத் திருவிழாக் கண்காட்சியைப் போல நமக்கு முன்னர் விரிகிறது. உல்லாசக் கார்கள் தொடங்கி டிராக்டர்கள், குட்டியானை வண்டிகள், டிரக்குகள் என அது அதற்கே உரிய வசதிகளையும் காலத்தையும் உணர்வுகளையும் பிரதிபலித்தபடி தற்காலிக வீடுகளாகவும் முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
விவசாயிகள் சங்கங்களின் கொடிகளோடு மக்கள் ஆங்காங்கே நடைபயின்று கொண்டிருக்கின்றனர். போராட்ட மேடையைத் தாண்டிவிடும் யாருக்கும் கண்ணில்படுவது சாலையின் மையத்திலும் பக்கவாட்டுகளிலும் ஆங்காங்கேயும் சிறிதாகவும் பெரிதாகவும் எரிந்துகொண்டிருக்கும் அடுப்புகள்தான். வடலூரில் வள்ளலார் ஏற்ற இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு இங்கே சமையல் நடந்துகொண்டிருக்கும் லங்கார்களைப் பார்க்கும்போது ஞாபகத்துக்கு வந்து சென்றது. சீக்கிய, சூபிப் பண்பாட்டில் லங்கார் எனப்படும் பொதுச் சமையல் கூடங்களுக்குப் பின்னால் இருந்த நோக்கமும் தேவையும் இன்னமும் தீரவில்லை. மிகப் பெரிய கடாயில் காலிபிளவரும் உருளைக் கிழங்கும் மஞ்சளாக ஆவியைப் பரப்பி தீராத வயிற்றின் நெருப்பைத் தணிக்க வெந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ பசிகள் தீராத மானிடத்தின் அடிப்படையான ஒரு பசியை, அந்தப் பசி நம் கும்பியில் மூட்டும் தீயை அணைக்க, உலகெங்கும் பொது அடுப்புகள் இன்னும் எரிய வேண்டியதன் அவசியத்தை நவீன குடிமக்களுக்கும் நவீன அரசுக்கும் விவசாயிகள் நினைவூட்டுகிறார்கள். அடுப்பு எரிய நம் வயிற்று நெருப்பு அவிய அன்னத்தை அளிப்பவர்கள் அவர்கள் தானே.
கோதுமை ரொட்டிகளில் அத்தனை வகைகள், செய்முறைகளையும் நான் பார்த்தபடி நடந்தேன். ஒரே நேரத்தில் ஐம்பது கணக்கில் சப்பாத்திகளை வெளியிடும் எந்திரங்களில் தொடங்கி சிற்றடுப்பில் கோதுமை மாவோடு காய்கறிகளைப் பிசைந்து அடைபோலத் தட்டிச் செய்யப்படும் முறைகள் வரைக்கும் பார்த்தேன். வருபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் என நீட்டுபவர்கள் அனைவருக்கும் உணவு அங்கே இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. நீர் இன்னும் குறையாமல் இருக்கும் ப்ரெஷ் காரெட்டுகள், ஆரஞ்சுகள், மோர் என போதும் போதுமென்று சொல்லுமளவுக்கு நடக்க நடக்கக் கிடைக்கிறது. சப்பாத்தியைப் பொட்டலம் போல ஆக்கி பாலக் கீரை மசியலையும் போட்டுத் தருகின்றனர். நாம் தான் உடைகளில் வழியாமல் பத்திரமாக உண்ணவேண்டும்.
நடுநடுவே சீக்கியத்துறவிகள் சிறு சிறு கூடாரங்களை இட்டு, கிரந்தத்தின் வாசகங்களையும் வாசிக்கின்றனர். மருத்துவ சோதனை முகாம்கள், இலவச மருந்து, மாத்திரைகள், சானிடரி நாப்கின் தொடங்கி டூத் பிரஷ்கள் வரைக்கும் வாங்கிக் கொள்வதற்கான இடங்கள் தெரிகின்றன. துவைக்கும் எந்திரங்களைக் கொண்டு அழுக்குத் துணியைத் தருபவர்களுக்கு 10, 15 நிமிடங்களில் துணியைத் துவைத்தலசி உலரவைத்துத் தருகின்றனர். ஆங்காங்கே முதியவர்களும் வாலிபர்களும் கிராமப்புறத் திண்ணைகளில் அரட்டையடித்து மகிழ்வது போல, நெடுஞ்சாலையாக இருந்த பாதையில் தங்கள் வீட்டுத்திண்ணை போலப் பாவித்து பெரிய ஹூக்கா ஒன்றை நடுவில் வைத்து சுழற்சியில் புகையிலை புகைக்கின்றனர். இந்தப் போராட்டக் களத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதுகளிலும் ஆட்கள் இருந்தாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட வயதினரே அதிகம் பேரைப் பார்க்க முடிகிறது. ஒரு மாதத்தைத் தாண்டி டெல்லியின் உச்சபட்ச குளிர்பருவத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோயுள்ளனர்.
தோலின் தோற்றம், உடைகள், வாகனங்கள், பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏழை, நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என எல்லாரையும் இந்தப் போராட்டக் களத்தில் காணமுடிகிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே உலகம் முழுவதும் சஞ்சரிக்கத் தொடங்கிய சீக்கிய மக்கள் அடைந்திருக்கும் காஸ்மாபொலிட்டன் தன்மையையும் அதேவேளையில் அவர்களிடம் இன்னும் தொடரும் வேர் அறாத மரபையும் சேர்ந்து காணமுடிகிற போராட்டம் இது. சமய அடையாளம், இன அடையாளம், வழிபாடு என தங்களது எல்லா நடைமுறைகளையும் அரசை எதிர்த்து நடத்தும் இந்த தார்மிகப் போராட்டத்தோடு அவர்கள் பிணைத்துள்ளனர். நவீன பொருட்கள் அத்தனையையும் அவர்கள் பாவிப்பதோடு, தன்னிறைவான ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வலுவாக கொண்டிப்பதால் தான், ஒரு தலைநகரின் எல்லையில் தடுக்கப்பட்ட நிலையில் ஒரு நெடுஞ்சாலை வாழ்க்கையில் முப்பது நாட்களுக்கு மேல் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. இன்னும் ஆறு மாதங்களுக்குப் போராட்டத்தை நீடித்தாலும் அவர்களிடம் உணவுப் பொருட்கள் இருப்பதை அங்கிருக்கும் வாகனங்கள் உறுதிசெய்கின்றன. சாதாரணமாக விறகுகளைப் போட்டு வெந்நீர் போடும் தகரத்தில் செய்யப்பட்ட கருவிகளைப் புதிதாக உருவாக்கிப் போராட்ட இடத்தில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தேன்.
நடக்கிறேன். நடந்துகொண்டிருக்கிறேன். போராட்டக் களத்தின் எல்லை எது என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை என்று தோன்றிவிட்டது. ஷூவுக்குப் பழக்கப்பட்டிராத கால்களில் வலி தொடங்கிவிட்டதால் மீண்டும் திரும்பினேன்.
வெளியே காண்பதைப் போலவே இந்தப் போராட்டத்தில் அனைத்து வித்தியாசங்களையும் காணமுடிகிறது. ஆனால், அத்தனை பேதங்கள், வேறுபாடுகளுக்கிடையே உயிர்ப்பையும் வண்ணங்களையும் ஆற்றலையும் உணரக்கூடிய இடமும்தான் அது. விளிம்பிலும் ஆற்றல் ததும்புகிறது. அடுத்த நாள் பஞ்ஞாபிகளும் ஜாட் மக்களும் சேர்ந்து போராடும் டிகாரி எல்லைப் பகுதியிலும் இந்த உணர்வை அடைந்தேன். விவசாயத்தின் மேன்மை, விவசாயத்தின் தேசிய முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. புதிய வேளாண்மைச் சட்டங்களால் பயனுறும் தொழிலதிபர்கள் என்று அதானி, அம்பானியின் பெயர்களும் முகங்களும் உள்ள போஸ்டர்களில் அவர்களது நிறுவனங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்படுமாறு வலியுறுத்தப்படுகின்றன. விவசாயிகளின் கோபத்தைக் கிளறிய இன்னொரு முகம் கங்கனா ரணவத்துடையது. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் மீது கோபம் அதிகம் தெரிகிறது.
இந்தி, ஆங்கில, மலையாள ஊடகவியலாளர்கள் தென்படுகின்றனர். ஆனால், அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவே போலீசாரைப் போலவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும் போராட்டத்தின் உணர்வுக் களத்துக்கு வெளியே தான் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். போராட்டம் செய்யும் குடியானவர்களிடம் உள்ள தார்மிகப் பொருளாதாரம் ஊடகவியலாளர்களிடம் இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இல்லை என்று சிவ் விஸ்வநாதன் தி டெலிகிராப்- ல் எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. குறிப்பாக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைப் போல, இந்தப் போராட்டத்தில் ரகசிய வேட்கை கொண்ட ஒரு சிறு வர்க்கத்தினரின் நலன்கள் அதிகாரம் செலுத்தும், எளிய மக்களை போஷிக்கும் கண்களோடு பார்க்கும் தொண்டு நிறுவன மனப்பான்மையை இந்தப் போராட்டத்தில் எந்த முனையிலும் காணமுடியவில்லை.
ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப் பிரதேசம் என மாநிலங்களிலிருந்து டில்லிக்கு நுழையும் எல்லைப் பகுதிகளில் தான் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. சிங்கூ எல்லையில் போராட்டம் நடக்கும் இடத்தை 50 மீட்டர் தாண்டும்போதே ஒட்டுமொத்த டில்லியின் பரபரப்பு, போராட்டத்துக்கு மிகத் தொலைவில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. விவசாயிகள் நம் வாழ்க்கையின் எல்லையில் அல்லது விளிம்பில் தான் இப்படி நிற்கிறார்கள் போல. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் தொடங்கி விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் வரை இந்த எல்லை கட்டப்பட்ட தன்மை இருப்பதை உணர்கிறேன்.
டில்லிக்கு உள்ளே ஆசாத்பூர் செல்வதற்கான பேருந்துக்குச் செல்வதற்காக சாலையில் நடந்தேன். பக்கவாட்டிலேயே வயல்கள் நெடிதாக நின்றிருந்த அமைதியான இடம் அது. வயல்களுக்கு வெளியிலேயே காலிபிளவர்களை நூற்றுக்கணக்கில் கொட்டி வீணாக்கியிருந்தார்கள். கொஞ்சம் தலைநிமிர்ந்து வயல்களைப் பார்த்தால் அங்கேயும் காலிபிளவர்களையே விளைய வைத்திருந்தார்கள். சென்னையில் இன்னும் ஏழைகளால் எண்ணிப் பார்க்க முடியாத பொருளாகவே காலிபிளவர் உள்ளது.
சமயம், அரசியல், வாழ்க்கை முறை, நவீனம், மரபின் நல்ல அம்சங்களிலிருந்து பெற்றுக் கொண்ட உரம் அத்தனையும் சேர்ந்த போராட்டம் இது. சமய அடையாளத்தை சீக்கிய விவசாயிகள் ஒரு தார்மிக கேடயமாக ஆக்கியிருக்கிறார்கள். நடக்க நடக்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சேர்ந்து முகங்கள், வாகனங்கள் நீள்கின்றன. போராட்டக் களத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் 50 வயதைத் தாண்டிய முதியவர்கள். அந்த முதியவர்களின் ஆழமான முக ரேகைகள் படிப்பதற்குத் தனிப்புத்தகங்கள். இந்தப் போராட்டத்துடன் நான் கழித்த இரண்டு தினங்கள், அங்கே பார்த்த முகங்களின் காட்சிகள் என்றென்றைக்கும் எனது ஞாபகத்தில் இருக்கும்.
டெல்லியில் காகங்கள் இல்லை. புறாக்களும், கொஞ்சம் புழுதியேறியது போன்ற நிறத்தில் மைனாக்களும் தான் காட்சியளித்தன. வயல்களின் மீது போகும் மின்தடத்தில் அவை சேர்ந்து உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெரிய பறவையின் வடிவக் கோலமாகத் தெரிகின்றன.
Comments