பெசண்ட் நகர் மெய்ஞான சபையின் புழக்கடை
வாயிற்கதவை நோக்கி
கரம்குவித்தாற் போல்
கடற்கரையில் இறந்து கிடக்கிறது
பங்குனி கடலாமை
ஓட்டுக்குக் கீழே காயம்பட்டிருக்கும்
அதன் பின்புறத்தை
காலை உணவுக்காகச் சூழ்ந்திருந்தன நாய்கள்
அங்கே
கடலுக்கும் சொந்தமின்றி
சற்றே அமர்வதற்கு மட்டுமே கரையென
நீரும் நிலமும் தொடும் புள்ளியில்
பறப்பதும் தரிப்பதுமாகத் திரிந்தது
சிறுகுருவிகளின் கூட்டம்
அலைகளின் தலையைத் தொடுவது போல
பரவளைவாகச் சுற்றி
கரையில் படர்ந்திருக்கும் அடப்பங் கொடிகளுக்குள்
வந்து மீண்டும் நிற்கின்றன
விருந்துண்ண வந்த நாய்களுக்கோ
குருவிகளோடு ஓயாத ஊடல்
துரத்தி வரும் குரைப்பைச் சீண்டுவதுபோல
மீண்டும் உயர்ந்தேகி
நம் தலைக்குச் சற்று மேலே
பறந்து கடல் வாயிலுக்குள் நுழைகின்றன
நாய்களை
அலைகளை
கடலை
என்னை
எதையும் கடப்பதுமில்லை
எதையும் தொடுவதுமில்லை
குருவிகள்
சூரியன் பட்டு
மினுங்கி மடியும் அலையில்
ஒருகணத்தில் விழுங்கப்படுவது போல
மறைந்துவிடுகின்றன
மீண்டும்
என் விம்மலில்
அந்தக் குருவிகளின் கருத்த உயிர்த்தீற்றல்கள்
கடலுக்கு மேல் மடிந்தெழுந்து அணிவகுத்து
நாய்களோடு விளையாட கரைக்குத் திரும்பிவருகின்றன
குருவிகளே
கடலின் ஓரத்துச் சிறு குருவிகளே
நீளத்தில் ஆழம் கண்டு
ஆழத்தில் நீளம் கண்டு
கண்டம் தாண்டிப் பயணித்திருக்கக் கூடிய
வாய்ப்பு கொண்டு
தற்போது
அகாலத்தின் கரையில் ஒதுங்கியிருக்கும்
இந்தப் பங்குனி ஆமையைப் போல்
ஆழ்கடலை அறியவேண்டாமா குருவிகளே.
Comments