Skip to main content

ரோஜாவின் பாதைகள் முடிவற்றது சூர்யா



மொழியின் மாபெரும் ஆரவாரத்துக்கு இடையே பகட்டு ஆபரண சரசரப்புகளுக்கு மத்தியில் ஒரு அமைதி அமர்ந்திருக்கும் உணர்வைத் தருபவை வே. நி. சூர்யாவின் கவிதைள். மிக எளிமையானதும் மிக அபூர்வமானதுமாக இருக்கும், ஆதியிலிருந்து கவிதை அடையத் துடிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் வசிப்பதற்குத் துணிச்சலாக வந்து சேர்ந்திருப்பவர் வே. நி. சூர்யா. அவர் எழுதுபவற்றை எனக்கு உடனுக்குடன் படிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கிறார். 

நேற்று அவரிடம் இருந்து வந்த கவிதையைப் படித்தபோது, கவிதையின் மையப் படிமமாக இருக்கும் ரோஜாவை வேறொன்றாக இடம் மாற்ற முடியுமா என்று திரும்பத் திரும்பப் படித்து யோசித்துப் பார்த்தேன். உலகிலேயே பலவீனமான ரோஜாவாகவே அது சூர்யாவின் கவிதையில் இடம்பிடிக்கிறது. 

ஞாபத்தின் துயர் தந்த சுகவீனத்திலிருந்து பலவீனமாக ஆகியிருக்கும் ரோஜா தான் அது. அது பலவீன ரோஜா மட்டுமல்ல. திரும்பத் திரும்ப மொழியில் கவிதையில் பயன்படுத்தப்பட்டு தேய்க்கப்பட்ட ரோஜாவும் கூட. 

எனக்கு ரோஜாவை இந்தக் கவிதையிலிருந்து இடம்பெயர்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால், பலவீனமாகத் தெரிந்தாலும் இந்தக் கவிதையின் ஆதாரத்திலிருந்து பிரிக்க முடியாமல் உள்ளது ரோஜா. 

மூழ்கிச் செத்த மாலுமிகள் அழைக்கிறார்கள். கடலில் உள்ள சீவராசிகள் அழைக்கின்றன. ஆனால், பிடிவாதமாகத் தனித்திருக்கும் யுவதியாக ரோஜா அமர்ந்திருக்கிறது.

ரோஜா என்ற பெயரைத் தொட்டதும் முடிவற்றதாகத் தெரியும் போர்ஹேயின் ரோஜா ஞாபகத்துக்கு வருகிறது. பெயரில் மட்டுமே இப்போது ரோஜா என்ற உம்பர்த்தோ எக்கோவின் மறக்க முடியாத மேற்கோள் வருகிறது.    

சூர்யாவின் கவிதையில் வரும் ரோஜா, குட்டி இளவரசனின் ரோஜாவை எனக்கு நெருக்கமாக ஞாபகப்படுத்துகிறது. அந்த ரோஜா, தன்னைத் தவிர வேறு ரோஜாவே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரோஜா. 

ரோஜாவைத் திருப்பிப் பார்க்கிறேன். ஆமாம், ரோஜாவின் பாதைகள் முடிவற்றதுதான். 

ரோஜாவின் இதழ் அடுக்குகள் இப்படித்தான் வே. நி. சூர்யா, அலைகளைப் போல இப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன. தமிழின் சிறந்த காதல் கவிதைகளில் ஒன்று இது சூர்யா....


பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா


பொடிநடையாக கடற்கரையில்  

நடந்து கொண்டிருந்தேன்

ஆங்கே ஒரிடத்தில் 

எந்த அலைகளாலும் தொட முடியாதபடி 

மண்ணில் கிடக்கும்

ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன்

எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை...

யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது?

மொத்தச் சமுத்திரமும்

அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளிலும்

ஆழ்கடல் சீவராசிகளும்

யாவும் யாவும்

அந்த ஒற்றை ரோஜாவை 

அழைத்துக்கொண்டிருக்க

அதுவோ 

பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது கடல் பார்த்து தனித்திருக்கும் யுவதி என

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூட பேசவில்லை

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம் 

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

Comments