Skip to main content

எனக்கெதற்கு பற்ற ஒரு கரம் எனக்கெதற்கு அள்ள ஒரு முகம்



இருண்ட நெடுஞ்சாலையின் விளக்குகளை

சுடரவைக்கும் உனது குரல்

ஒரு உறக்கமற்ற இரவில்தான்

எனக்குப் பரிச்சயமானது

எல்விஸ் பிரஸ்லி

‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும்

செய்யமுடியவில்லை என்பதனால்’.

 

தனிமை சூழ்ந்தறையும் இருளில்

தொலைவில் வெளிச்ச ஜன்னலாய்

ஆதுரம் காட்டும் ஒரு மாடி அறை

சற்று தூரம் கடந்தால் தொடங்கிவிடக்கூடிய

காதலின் ஆதுர நிலப்பரப்பு 

அதை நோக்கி 

நான் பயணிக்கும் மகிழுந்து 

உன் குரல் எல்விஸ் பிரஸ்லி

‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும்

செய்யமுடியவில்லை என்பதனால்’ 

‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும்

செய்யமுடியவில்லை என்பதனால்’

தசைகளெங்கும் வலியாய் கனக்கும்

தனித்த அந்த இரவில்

நேசத்தின் பாடலை ஒற்றையாகவே

பராமரிக்கும் ரகசியப் பேழையை

உன் குரலிலிருந்து பரிசாகப் பெற்றேன்

எல்விஸ் பிரஸ்லி

‘நான் இங்கே தரிக்கலாமா?

உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வழியில்லாமல் போனால்

அது பாவம் ஆகிவிடுமா என்ன?’


ஒரு ராஜகூடலுக்கு இட்டுச்செல்லும்

கம்பீர நெடுஞ்சாலை 

முயக்கத்தின்போது அவள் முகத்தில்

தோன்றும் எண்ணெய் மினுமினுப்பை

வானத்திலிருந்து இறங்கும் விளக்குகளாக்கும்

உன் பாடலின் விந்தை

இருக்கும்போது 

எனக்கு எதற்கு ஒரு முன்னிலை

எனக்கெதற்குப் பற்றுவதற்கு ஒரு கரம்

அள்ளுவதற்கு ஒரு முகம்

‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும்

செய்யமுடியவில்லை என்பதற்காக’ 



(எல்விஸ் பிரஸ்லி தனது கச்சேரிகளில் இறுதியாகப் பாடும் பாடல் இது. அவரது இறுதிக் கச்சேரியிலும் பாடிய கடைசிப் பாடல் இதுதான். "Can't Help Falling In Love" பாடலிலிருந்து சில வரிகளும் இந்தக் கவிதையில் கையாளப்பட்டுள்ளது)


எல்விஸ் பிரஸ்லியின் குரலில் பாடலைக் கேட்பதற்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=vGJTaP6anOU

Comments