Skip to main content

பிறப்பின் சத்தம் கேட்கவில்லையா நண்பர்களே



காவ்யா வெளியிட்ட ‘நகுலன் கவிதைகள்’ தொகுப்பை மறுபடி மறுபடி புரட்டி முழுக்கவே எத்தனையோ முறை படித்திருக்கிறேன். வேறு வேறு சூழல்கள், மனநிலைகளுக்கேற்ப தனித்தனியே சில கவிதைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் நகுலனின் கவிதைகளில் இல்லாத பழமையும் பழக்கத்தின் அலுப்பும் பதிப்பில் தெரியத் தொடங்கியதையடுத்து நகுலன் இருந்தபோது வெளியிட்ட தனித்தனித் தொகுதிகளைப் படித்துப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. நண்பர் அழகியசிங்கரைத் தொடர்பு கொண்டு அவர் பதிப்பித்த ‘இரு நீண்ட கவிதைகள்’ நூலைக் கேட்க முடிவுசெய்தேன். அவரிடம் ‘சுருதி’ தொகுப்பு இருப்பதாகவும் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி உடனடியாக அனுப்பியும் வைத்தார். நகுலன் கவிதையைச் சுற்றி உணரும் வெளியைப் பக்கங்களிலும் கொண்டு ஆதிமூலத்தின் அட்டைப்படத்துடன் நேர்த்தியாக வெளிவந்த தொகுதி அது. நகுலனின் கவிதைகளைப் புதிதாகப் படிக்கும் அனுபவத்தை இந்தத் தொகுதியில் உணர்ந்தேன். தபாலில் வந்த சுருதி புத்தகத்தைத் திறந்தவுடன் வெளிப்பட்ட கவிதை ‘இடையில்’ என்ற தலைப்புடன் கண்ணில் பட்டது.

ஏன்

இப்படிக் குடிக்கிறீர்கள்?”

என்று கேட்டான்

ஏன்

இப்படி வாழ்கிறீர்கள்?”

என்று நான் கேட்கவில்லை

உங்கள் வாழ்வுக்கும்

என் சாவுக்கும் இடையில்

வேறொன்று

நிகழ்ந்து

கொண்டிருக்கிறது.

உங்கள் வாழ்வுக்கும் என் சாவுக்கும் இடையில் நிகழும் வேறொன்று மிக நிறையுடையதாகத் தெரிகிறது.

யாருமற்ற பிரதேசத்தில் என்ன நடக்கிறது

எல்லாம்.

இடையில் நிகழும் எல்லாம் அது

எல்லாம் எனும்போது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிற, ஆனால் விசை மிகுந்த ஒன்றின் இரைதல் அந்த வெளியில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

உங்கள் வாழ்வுக்கும் என் சாவுக்கும் இடையில் இரண்டுக்கும் தொடர்பில்லாத வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சி இன்னும் முற்றுப்பெறவுமில்லை. வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும் தொனியைச் சுற்றி எத்தனை மர்மம்? எல்லாம் என்று சொல்வதைச் சுற்றியுள்ள மர்மத்தை ஒத்த மர்மம்?

வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது அங்கே ஒரு பிறப்பின் சந்தடி கேட்கவில்லையா நண்பர்களே. பிறப்பின் ரீங்கரிப்பு கேட்கவில்லையா?

Comments