Skip to main content

மறதிக்கு எதிரான நினைவின் கலகம்

 


மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலி வீசல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. 1928-ம் ஆண்டு தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் பிறந்த எலி வீஸல் சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பலிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது ஹிட்லரின் படைகள் நடத்திய கொடூரங்களுக்கு சாட்சியாக இருக்கும் காத்திரமான ஆவணங்களில் ஒன்று ‘இரவு’. எலி வீஸல் எழுதி உலகப்புகழ் பெற்ற இந்த ஆக்கம் அவரது மனைவி மரியன் வீஸலால் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டு, நூலாசிரியரின் புதிய முன்னுரையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

‘இரவு’ என்ற தலைப்பிலிருந்தே ஆசிரியர் தனது நோக்கைத் தெளிவுபடுத்திவிடுகிறார். வாழ்வின் மீதிருந்த நம்பிக்கை வெளிச்சம் அத்தனையையும் சூறையாடிய இருட்டாக, சிகெட் நகரத்துக்குள் ஹிட்லரின் துணைநிலைக் கொலைப்படைகள் வந்து சூழ்வதற்குச் சற்று முன்னாலிருந்து சிறுவனாக இருந்த எலீ வீஸலின் சாட்சியம்  தொடங்குகிறது. வரலாறு, இலக்கியம், மதம் தொடங்கி கடவுள் வரை அனைத்தும் முடிவுக்கு வந்த இரவு அது என்கிறார் ஆசிரியர். மனிதாபிமானம், கருணை, நேசம், இரக்கம் என மனிதகுலம் பயின்ற அனைத்து விழுமியங்களும் காற்றில் விடப்பட்டு ஒரு இனம், இன்னொரு இனத்தை குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் வேட்டையாடிய இரவு அது. வெறும் உயிர்வாழ்தலுக்காக தந்தையை விட்டுத் தனையர்களும், மனைவிகளை விட்டுக் கணவர்களும், குழந்தைகளை விட்டுத் தாய்மார்களும் லட்சக்கணக்கில் கண்ணியம் பறிக்கப்பட்டு சுயம் நசிக்கப்பட்டு அலைக்கழிந்து மாண்ட நிகழ்வு அது. யூத வதைமுகாம்களைப் பொருத்தவரை யாரும் யாருக்கும் சொந்தமோ நட்போ அல்ல. எல்லாரும் தனியாக வாழ்ந்து தனியாக இறப்பவர்களாக இருக்கின்றனர். ஒரு வதைமுகாமிலிருந்து இன்னொரு வதைமுகாமுக்குப் பயணிக்கும்போது சுமையாகிவிட்ட தந்தையைக் கூட்டத்தில் விட்டுவிட்டு ஓடும் தனயன்களைப் பார்க்கிறோம். அவர்கள் கடப்பது பல இரவுகள். ஆனால், துயரமும் வதையும் மட்டுமே எதார்த்தமாக ஆகும்போது அங்கே காலமும் மரத்து உறைந்துவிடுகிறதென்பதால் அவர்கள் நீண்ட ஒரே இரவின் குடிமக்கள்.

இது ஒரு நாவலோ புனைவோ அல்ல. சுதந்திரமும் சமத்துவமும் ஜனநாயகமும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெறத் தொடங்கிய நூற்றாண்டில், நாகரிகத்தின் உச்சமென்று போற்றப்பட்ட ஐரோப்பிய நிலத்தில், உலக நாடுகள் எல்லாம் கையறு நிலையில் பார்த்திருக்க லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட சரித்திரத்தின் ஒரு நேரடி சாட்சி ஆவணங்களில் ஒன்று இது. ஆனாலும் இது ஒரு நாவலைப் போன்று புனைவைப் போன்றுதான் படிக்கும்போது தெரிகிறது. ஏனெனில், மனிதர்கள் தங்கள் சக மனிதர்கள் மேல், ஒரு இனம் இன்னொரு இனத்தின் மேல் இத்தனை கொடூரங்களை இத்தனை துச்சமாக நிகழ்த்த முடியுமா என்று தோன்றவைக்கும் கொடுமைகளை ‘இரவு’ தெரியப்படுத்துகிறது. 

அதீதம் என்று நினைக்கும் சம்பவங்களும் எதார்த்தமாகிறது. சிறுவன் எலீ வீஸலின் குடும்பத்தினருடன் சிகெட் மக்களை வதை முகாமுக்கு அழைத்துச் செல்லும் ரயிலில் திருமதி. ஸ்காட்செர், ஆஸ்விட்சுக்குச் சென்று சேர்வதற்கு முன்பாகவே, தங்களை எரிக்கப் போகும் தீயை அடிக்கடி முன்னுணர்ந்து சன்னத ஓலத்தை ரயிலில் எழுப்புகிறாள். அவள் ஜன்னலைக் காட்டித் தெரிவிக்கும் காட்சி சக பயணிகளுக்குத் தெரியவேயில்லை. பிராணிகளைப் போல அடைக்கப்பட்ட நிலையில் ரயில் வண்டியில் ஏற்பட்ட உஷ்ணம், தாகம், கொள்ளை நோயை உருவாக்கக்கூடிய நாற்றம், காற்றேயில்லாமல் ஏற்படும் மூச்சுத்திணறலால் ஏற்படும் சிரமம் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்கள் திருமதி. ஸ்காட்செருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் பயணிக்கும் ரயில் ஆஸ்விட்சுக்குள் நுழைந்தபோது திருமதி. ஸ்காட்செர் பார்த்த மரண உலையின் புகைபோக்கியை எல்லாப் பயணிகளும் ரயில் ஜன்னலின் வழியாகப் பார்க்க நேர்கிறது. அந்த மரண உலையின் புகைபோக்கி, மனித குலம் இனிவரும் காலங்களிலும் மறக்கவே கூடாத படிமம்.

சிகெட்டைச் சேர்ந்த யூத மக்கள், நம் எல்லாரையும் போலவே, தங்கள் ஊருக்குள் ஹிட்லரின் படைகள் நுழையும் வரை, அந்தக் கொடுமைகள் எதுவும் நமக்கு நடக்காது என்ற நம்பிக்கையுடன் அன்றாட சுக துக்கங்களால் நிறைந்திருக்கின்றனர். தேவாலயப் பணியாளனான மோசே, தனக்கும் தன் கூட்டாளிகளுக்கும் நடந்த விஷயங்களை சிகெட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லும்போது அவர்கள் அதை நம்பவில்லை. இப்படித்தான் பாசிசமும் இனவெறுப்பும் கொடுங்கோன்மையும், மக்களின் அலட்சியத்தை, வேறு வேறு விவகாரங்களில் அவர்கள் ஆழ்ந்து மூழ்கியிருப்பதைப் பயன்படுத்தி, தமது கவச வாகனங்களுடன் நமது நகரத்துக்குள் வருகின்றனர். 

மொழிபெயர்ப்பாளர் ரவி தி. இளங்கோவனின் செம்மையான மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூலில் எலீ வீஸலின் வதைமுகாம் அனுபவங்கள் குறித்த புகைப்படங்களும், ஓவியங்களும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டு அரிய ஆவணமாக்குகின்றன. ரவி தி. இளங்கோவன் எழுதியுள்ள பின்னுரையில், இனப்படுகொலைகளை நிகழ்த்துவதில் அரசாங்கமே முன்னணியில் இருந்து செயல்பட்டாலும் அதற்கு முன்பாக மக்களிடம் பிரிவினை உணர்ச்சியையும் வெறுப்பையும் வன்முறை செய்வதற்கான தூண்டுதலையும் உருவாக்குவதைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படித் திரட்டிய கும்பலின் வழியாகவே தாக்குதல்களை, கொலைகளை, வன்புணர்ச்சிகளை எல்லா கொடுங்கோல் அரசுகளும் தங்கள் இலக்குகளின் மீது நிகழ்த்துகின்றன என்கிறார். 

இப்படித்தான் ஹிட்லரின் துணைநிலைக் கொலைப் படைகள் ஐரோப்பாவில் 15 யூதர்களை கிழக்கு ஐரோப்பாவில் கொன்றழிக்க முடிந்தது. 

ரவி இளங்கோவன் எழுதியுள்ள பின்னுரையில் உலகமெங்கும் இனப்படுகொலைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதற்கு இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பு கொடுத்துள்ள பத்து சூழ்நிலைகளைக் குறிப்பிடுகிறார். இனம், மொழி, மதம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபட்டுள்ள மக்களின் குடியுரிமையை மறுத்து அவர்களை வகைப்படுத்துவது, குறிப்பிட்ட மக்கள் குழுவினரைத் தனிமைப்படுத்தி குறியீடு செய்வது, உரிமைகளைப் பறித்துப் பாகுபடுத்துவது, வெறுப்புப் பிரச்சாரம் வழியாக மனிதர்கள் என்ற நிலையிலிருந்து அகற்றுவது, பொதுமக்கள் மத்தியிலேயே வன்முறைக் கும்பல்களை உருவாக்குவது, பிரித்தாளுவதன் மூலம் துருவப்படுத்துவது, அடக்குமுறைகளைக் கையாள்வது, அழித்தொழிப்பு, செய்த குற்றங்களையும் படுகொலைகளையும் மறுப்பது போன்ற பத்து சூழ்நிலைகள் அவை.

உலகின் உச்ச ஜனநாயகம் நிலவும் அமெரிக்காவிலேயே மேற்கண்ட பத்து சூழ்நிலைகளில் பாதி அளவு நிலைமைகளை ஜனாதிபதி டிரம்பால் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்க வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. ரவி இளங்கோவன் குறிப்பிடும் பத்து சூழ்நிலைகளில் பெரும்பாலான நிலைமைகள் இந்தியாவிலும் வெற்றிகரமாக விதைக்கப்பட்டு பலன்களையும் கொடுக்கத் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. வகைப்பாடு, துருவநிலைப்படுத்துதல், கும்பல்களை ஊக்குவித்தல், ஊடகங்கள் வழியான அவதூறுகள் என நன்கு எண்ணெய் ஊற்றிய இயந்திரங்களுடன் வெறுப்பின் மாபெரும் தொழிற்சாலை, உறங்காமல் 24 மணிநேரமும் கண்துஞ்சாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எலீ வீஸல் கண்ட இரவை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் அவை.  

Comments