Skip to main content

தி க்ராண்ட் இன்க்விஸிட்டர் - மானுட நிலைமை குறித்த மாபெரும் ஆவணம்

 


உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் 'தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’(The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் 'விசாரணை அதிகாரி'. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் சகோதர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்ளும் காவியம் இது.
 

அல்யோஷாவின் சிறு சிறு இடையீடுகள் வழியே இந்தக் காவியம் இவானால் ஒரு உணவு விடுதியில் சொல்லப்படுகிறது இது. இந்தக் காவியத்தில் கிறிஸ்து மீண்டும், பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவிசுவாசிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் காலத்தில் செவைல் நகரத்துக்கு வருகிறார். முன்பைப் போலவே சில அற்புதங்களையும் செய்கிறார். செவைல் நகரத்துத் தேவாலயத்தின் முன்பு இயேசுவைப் பார்க்கும் மதகுரு, தன் காவலாளிகளை அழைத்து அவரைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். அன்றிரவு, அந்த மூத்த விசாரணை அதிகாரி இயேசுவை அவரது சிறை அறையில் சந்தித்து, கிறிஸ்துவின் மறுவருகை தேவைப்படாத நிலையில் ஏன் இங்கு வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். சேசுசபையின் லட்சியமும் அவர்களது பணிகளும் கிறிஸ்துவின் வருகையால் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் மதகுருவாக இருக்கும் விசாரணை அதிகாரி விளக்குகிறார் .
 

கிறிஸ்துவையும் சாத்தானையும் மோதவிட்டு, சாத்தானின் தரப்பை விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தின் வழியாக தஸ்தயெவ்ஸ்கி நியாயப்படுத்தும், கிட்டத்தட்ட வாசிப்பவர்களையும் அதுவே நியாயம் என்று உணரவைத்துவிடும் அத்தியாயம் இது. சர்வாதிகாரம், அடிமைத்தனம், வழிபாட்டுத்துவம் போன்றவைதாம் மனிதர்களுக்குத் தேவை; சுதந்திரமோ சுதந்திரத்தின் அடிப்படையிலான நேசமோ அல்ல என்ற உச்சகட்ட விமர்சனத்தை மானுட நிலைமையின் மேல் தஸ்தயெவ்ஸ்கி இந்த அத்தியாயத்தின் மூலம் முன்வைக்கிறார். தஸ்தயெவ்ஸ்கியை உடனடியாகக் காலத்தில் பின்தொடர்பவர் நீட்சே என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
 

நிபந்தனை அற்ற அன்பையும் சுதந்திரம் சார்ந்த கடவுள் தன்மையையும் வலியுறுத்திய கிறிஸ்து, சாதாரண மக்களுக்குச் சுமையானவர் என்பதை விசாரணை அதிகாரி இந்த அத்தியாயத்தில் நிரூபிக்க முயல்கிறார். அற்புதம், ரகசியம், அதிகாரம் ஆகியவற்றைச் செலுத்தாத கடவுளை மக்கள் கடவுளாகவே ஏற்கமாட்டார்கள் என்கிறார் விசாரணை அதிகாரி. அற்புதம் தேவையில்லாத நிலையில் ஒருவனுக்குக் கடவுளும் தேவையில்லாமல் போகிறார் என்று விசாரணை அதிகாரி வாதிக்கிறார். எல்லையற்ற சுதந்திரத்தை மனிதர்களால் தாங்க முடியாது; ஒரு சிந்தனையற்ற மந்தையாகி, ஏதாவது ஒரு சிலைமுன் கூட்டாக மண்டியிடுவதே அவர்களது பொதுவிருப்பம் என்றும் கூறுகிறார் விசாரணை அதிகாரி. மதமோ கடவுளோ கொள்கையோ கட்சியோ  நம்பிக்கையோ அபின் போல அவர்களை மயக்கி, சந்தோஷத்தில் வைத்திருக்கப் போதுமானது என்கிறார் விசாரணை அதிகாரி.
 

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் கரமசோவின் புதல்வர்களில் இரண்டாமாவன் இவான், அக்காலகட்டத்தின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அறிவுஜீவியாகத் தெரியவரும் இவான், நாத்திகத்தை நோக்கியும் அல்யோஷா அந்தரங்கமான கிறிஸ்துவை நோக்கியும் செல்பவர்களாகத் தெரிகின்றனர்.
 

தந்தையார் கரமசோவ் கொல்லப்படும் இரவுக்கு முன்னர் இவானுக்கும் அல்யோஷாவுக்கும் ஒரு உணவு விடுதியில் நடக்கும் உரையாடலாக இந்த அத்தியாயம் இருக்கிறது. இந்த உரையாடல் முடிவில் இவானும் அல்யோஷாவும் இடது திசையிலும் வலது திசையிலுமாகப் பிரிகிறார்கள். தஸ்தயெவ்ஸ்கி வெறும் திசைகளாகத்தான் இடதையும் வலதையும்  குறிப்பிட்டாரா?
 

கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் கடவுளுக்கே எதிரானதாக கடவுளே தேவைப்படாததாக மாறும் நிலை 'விசாரணை அதிகாரி'மூலம் சித்திரிக்கப்படுகிறது. எப்போதைக்குமான மனிதர்களின்  நிலைமை குறித்த ஆழ்ந்த அக்கறையும் மனிதர்களை ஆட்சிசெய்ய வேண்டிய பொறுப்புணர்வும் சாத்தானின் தரப்பான தங்களிடமே இருக்கிறது என்று விசாரணை அதிகாரி வாதிடுகிறார். மனிதர்கள்மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டியதில்லை, அவர்கள் கலகக்காரப் பூச்சிகள் என்றும் வாதிடுகிறார். கோடிக்கணக்கான மக்களின் அபிலாஷைகள், குற்றவுணர்வுகள், மனசாட்சி கொடுக்கும் தொல்லைகள் இவற்றைக் கையாள்வதின் முக்கியத்துவம் தங்களுக்கே தெரியும் என்று தாங்கள் நிறுவனமயமாகியதன் பின்னணிக்கு நியாயமும் சேர்க்கிறார் அவர். மனிதர்களுக்கு, அவர்களுக்கு வேண்டிய ரொட்டியை வழங்கி, அவர்களது மனச்சான்றை அடக்கி, உலகத்தை ஆள்வதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.
 

சுதந்திரத்தின் பெயரால் வெறுங்கையோடு இந்தப் பூமிக்கு மறுபடியும் வந்தால் தீக்கிரையாக்கிக் கொன்றுவிடுவோம் என்று இயேசுவை மிரட்டி வழியனுப்பி வைக்கிறார் விசாரணை அதிகாரி.
 

21-ம் நூற்றாண்டில் உலகம் முழுக்க சர்வாதிகாரங்களும் நவீன சர்வாதிகாரிகளும் அற்புதம், மர்மம், அதிகாரம் ஆகியவற்றின் வாசனைத் திரவியத்தால் மக்களை மயக்கி மீண்டும் வலுப்பெற்றிருக்கும் நிலையில், மானுட நிலைமை குறித்து தஸ்தயெவ்ஸ்கி 'விசாரணை அதிகாரி'மூலமாக முன்வைக்கும் கருத்துகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.
 

‘விசாரணை அதிகாரி' அத்தியாயத்தை ஒரு கவிஞராக ஷங்கர் மொழிபெயர்க்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை எஸ். ராமகிருஷ்ணன், நூல்வனம் மணிகண்டனிடம் சொல்லியிருக்கிறார். மணிகண்டன் என்னிடம் அத்தகவலைச் சொன்னார். புவியரசு மொழிபெயர்ப்பில் இரண்டு முறை படித்து ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் கரசமோவ் சகோதரர்கள். ஆனால், ராமகிருஷ்ணன் சொன்னதுபோல அந்த வேலை அத்தனை சுலபமானது என்று நான் நினைக்கவில்லை. அதனால் தீவிரமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. வேறு யாரிடமாவது மணிகண்டன் பொறுப்பை ஒப்படைத்திருப்பார் என்று நினைத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் அந்த மொழிபெயர்ப்பு பற்றி அவர்  ஞாபகப்படுத்தினார். சரி, செய்து பார்க்கலாமே என்று எடுத்துக்கொண்டு பதினைந்து நாட்களில் செய்து முடித்தேன். தமிழில் ஏற்கெனவே இரண்டு பேர் மொழிபெயர்த்த நாவல் அது என்பதால், மொழிபெயர்ப்பில் கவனத்துடன் செய்ய வேண்டுமென்று பேசிய நிலையில், ஆர். சிவகுமார், எனது மொழிபெயர்ப்புப் பிரதியை செம்மை செய்வதற்கு பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார்.
 

பிழைப்பு காரணங்களுக்காக, விளையாட்டாக எனது இணையப்பக்கத்துக்காக, நான் நிறைய அபுனைவு, கவிதை, சிறுகதை மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறேன். சற்றே நீளமான, சவாலுக்குரிய இலக்கியப் படைப்பை  மொழிபெயர்ப்பது இதுவே எனக்கு முதல்முறை. நான் மொழிபெயர்ப்புக்குச் செலவழித்ததற்கும் கூடுதலான அளவு காலத்தையும் அதைவிடக் கூடுதல் பொறுமையையும் நுட்பத்தையும் ஆர். சிவகுமார் இந்த மொழிபெயர்ப்புக்குச் செலவழித்திருக்கிறார்.
 

ஒருவரது வாழ்நாள் முழுக்கக் கூடவே வரச் சாத்தியமுள்ளது என்று கருதும் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் ஒரு பகுதியை மொழிபெயர்த்ததன் மூலம், நான் வாசித்துணர்ந்த ஆசிரியர்களில் மகத்தானவரான ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து மேசைக்கு அருகே நெருங்கக் கிடைத்த இந்தச் சிறுவாய்ப்பு என் நற்பேறுகளில் ஒன்று.
 

ஆர். சிவகுமாருக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் நூல்வனம் மணிகண்டனுக்கும் எனது நன்றி.

(விசாரணை அதிகாரி - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது)

Comments