Skip to main content

ஒருநாள் - நகுலன்

  


ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர், உலகறியாத னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி, உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர், சாஸ்திரி சிவநாத பாபு, பிரதாப சந்திர முஜும்தார், வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி, நித்தியானந்தஸ்வாமி, வைத்தியரானசசாதரபண்டிதர், கோடீச்வரரானயதுநாதமல்லீக்ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர்இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள். அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரைஅவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள். அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. நினைத்துக்கொண்டுஇருந்தாற்போல் நிஷ்டை கலைவது வரையில் காத்திருப்பார்கள்.  நிஷ்டை நீடித்தால்-சில சமயம் நிஷ்டை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கலையாமல் இருந்தது உண்டு - கலைவது வரைக் காத்திருக்கவோ அல்லது மீண்டும் வருவதாகவோ தோதாபுரியிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.

 இந்த தோதாபுரி-மகான் தோதாபுரியிடமிருந்து வேறுபட்டவர். இவரும் பரமஹம்ஸர் கூட்டத்தைச் சார்ந்தவர். தக்ஷிணேச்வரத்தில் சேட் கோவிந்தஜியின் பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தார். அவர் மனைவி ஒருபிள்ளையை - நவீனன், வயதுபதினாறு - வைத்துவிட்டு இறந்துவிட்டாள். தோதாபுரிக்குத் தன் மனைவி மீது அத்யந்த பிரேமைஏனென்றால் கல்யாணமாவதற்கு முன் அவர் கோலாகல புருஷராக இருந்து தீராத காசநோயைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் மனைவியின் தீவிர தெய்வபக்தியையும் தேவநிஷ்டைகளையும் பார்த்து மனம் மாறிவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் மனைவி தன் மகன் நவீனனைப் பார்த்துக் கொள்வது அவர் கடமை என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள். அதற்குப் பிறகு தோதாபுரி தன் மகன் மீது அதிகமாக வாஞ்சையைக் காட்டாது, ஆனால் அவனைக் கண்ணை இமைகாப்பது போல் காத்துவந்தார். அவர் மனைவி இறந்தபொழுது நவீனனுக்கு வயது பத்து இருக்கும். பரமஹம்ஸர் அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது அவனைப் பார்த்துவிட்டு பையன் முகத்தில் வீசிய பிரம்மதேஜஸைக் கண்டு, அவனைத் தன் தேவிபூஜை காரியத்துக்கு மலர்பறித்தல், மாலைசூட்டல், துதிபாடல் உபயோகப் படுத்திக் கொண்டு வந்தார். இது தோதாபுரிக்குத் தெரியாது. நவீனன் ஒருநாள் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வராமலிருக்கவே தோட்டி குஞ்சன் மூலம் அவன் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று நவீனன் கெளரங்கஸ்வாமியிடம் பரமஹம்ஸர் செத்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவன் அதற்கு முன்னர் பரமஹம்ஸர் நிஷ்டையில் வீழ்வதைக் கண்டதில்லை. தோதாபுரி இரண்டுபட்ட மனதுடன் மகனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 அன்று வீட்டிற்கு வந்ததும் அவர் மனம் நிலையில் இல்லை. அவர் போன  அன்று ஆசிரமத்தில் யதுநாதமல்லிக்கும் மதுரபாபுவும் சாதுஜனங்களைவிட்டு வேறாகமெதுவாகப் பேசிக் கொண்டும், பரமஹம்ஸரை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். உபயஜீவியான தோதாபுரிக்கு அது ஆச்சரியமாக இருந்ததுஅவருக்கு மல்லிக்கும் மதுராபாவுவும் கொழுத்த பணக்காரர்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்துபோகும் விவரம் அவருக்குப் புரியவில்லை. ஊர் ஜனங்கள் பரமஹம்ஸர் மூலமாகத் தன் பணத்தை மல்லிக் இன்னும் அதிகமாக்க விரும்புகிறானென்றும், ஆனால் அந்தப் பைத்தியக்காரச்சாமி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று பேசி வந்ததும் அவருக்குத் தெரியும். எனினும் ஒருதடவை சென்றுவந்த தோதாபுரிக்கு அடிக்கடி ஆசிரமத்துக்குப் போகாமல் இருக்கமுடியவில்லை. இதன் பொருட்டு அவர் வெள்ளிக்கிழமைதோறும் காலை ஒருமணிக்கு முன் கடைக்கு வந்துவிட்டு இரவு எட்டுமணிக்குப் பரமஹம்ஸர் ஆசிரமத்திற்குப் போவதற்குச் சேட் கோவிந்தஜியிடம் அனுமதி வாங்கி இருந்தார். ஆசிரமத்தில் வந்த பிறகு ராமகிருஷ்ணரைப் பற்றிய அபிப்பிராயம் மேலோங்கி வந்தது. எந்தச் சமயத்தில் யார் அங்கு வருவார் என்பது நிச்சயமில்லை. சேட் கோவிந்தஜி சபையில் யாராவது பெரிய மனிதர் வந்தால் - அவிநாத சட்டர்ஜியோ, ராம பண்டித முக்கர்ஜியோ- அவர்களுக்கு விசேஷ மரியாதை நடக்கும். அவர்களை உபசரிக்கும் கடமையெல்லாம் சேட், தோதாபுரிக்கு விட்டுவிடுவார். தோதாபுரிக்கு அதைச் செய்வதில் பரம சந்தோஷம்.

 அதைப் போலவே ஆசிரமத்தில் இவர் வந்திருக்கும் சமயத்தில் யாராவது பெரிய மனிதன் வந்தால் - சந்திரஸேனரோ, சசாதரபண்டிதரோ - பரமஹம்ஸர் இவரைப் பார்த்துச் சிரிப்பார். உடனே தோதபுரியும் அவர்களைக் கவனித்துக் கொள்வார். இது ஒரு மாமூலாகிவிட்டது. அங்கு வருபவர்களெல்லாம் இதைக் குறித்துத் தோதாபுரியைப் பரிகசித்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

 தோதாபுரி பார்ப்பதற்கு நெட்டையாக, நன்றாக உணங்கிய கருவாடு நிறத்தை உடையவராக இருந்தார். தலை முழுவதும் ரோமம் வளர்த்துக் கொண்டு உச்சியில் மாத்திரம் ஒரு சிறுகடுகத்தனை குடுமி வைத்திருந்தார். மெல்லிய அழுக்கடைந்த மல்லைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்து கொண்டிருப்பார். அவர் மடியில் ஒரு வெள்ளிப்பொடி டப்பி எப்பொழுதும் முளைத்திருக்கும். அவர் மனம் உணர்ச்சிப் பெருக்கு அடையும் பொழுதெல்லாம் அவர் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சுவார். இதைக்குறித்தும் ஆசிரமவாசிகள் அவரைப் பரிகசிப்பார்கள். ஆனால் தோதாபுரி கொஞ்ச நாட்கள் பரமஹம்ஸர், ஒரு திருஷ்டாந்தக் கதையில் எவ்வாறு தான் மூக்குப்பொடி போட்டுக்கொள்வதை, ஒரு திருஷ்டாந்தமாக உபயோகித்தார் என்று போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இப்பொழுது தோதாபுரி ஆசிரமத்திற்கு வரத் தொடங்கி மூன்று வருடங்களாகி விட்டனஇந்த மூன்று வருடங்களும் அவர் மனதில் ஒரு உருத்தெரியாத ஆனால் கலவரப்படுத்தும் எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து  தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவரால் கூட நம்பமுடியவில்லை. இதைப் பற்றி நினைக்கையில் அவருக்கு ஒருதடவை பரமஹம்ஸர் தன் தாஸர்களிடை அவரால்(தோதாபுரியால்) பரமஹம்ஸரிடம் மூன்று வருஷம் நெருங்கிப்பழகிய பின்னும் ஒருமுறையாவது பொடிபோடுவதை நீக்க முடியவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. நவீனனிடம் மாலை ஆசிரமத்தில் இருந்த அவன் ஸ்கூலில் இப்பொழுது இறுதி வகுப்புப் படித்துத் தேறிவிட்டான். திரும்பி வருகையில் தனக்குத் தினம் ஒரு அணாவுக்குப் பொடி வாங்கி வரச் சொல்வார். நவீனனும் ராமகிருஷ்ணர் கூறியபடி அவன் நல்ல பிள்ளை - அதை ஒழுங்காய்ச் செய்து வந்தான். அந்த நவீனன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டான். அப்பொழுது கல்கத்தாவில் புதியதாக சர்வகலாசாலையைத் தொடங்கியிருந்தார்கள். தோதாபுரிக்குத் தன் மனைவி சொன்னது மாத்திரமல்லாமல் அவர் பொருட்டும் மேல்படிப்புக்குச் சென்று பெரிய பதவியில் வரவேண்டுமென்று ஆசை,இதற்கு அவர் ஆசிரமத்தில் முதல் தடவை வந்தபோதே அவருக்குத் தெரியாமலேயே ஆயத்தமாக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவருக்குக் கூட இப்பொழுதுதான் தெளிந்த மனதின் மேல்பரப்பில் சிந்தனை உருவாகத் திரண்டு வந்தது. ஏனென்றால் முதல் முறை அவர் ஆசிரமத்திற்கு வந்த அன்று, நிஷ்டையிலிருந்த பரமஹம்ஸரின் நினைவே அவருக்கு இல்லை. அவர்      ள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவர்கள் மல்லிக்கும் மதுரபாபுவும்தான். பரமஹம்ஸரை நன்றாகப் பார்க்காமல் வந்ததைக் குறித்துக் கலவரப்பட்டார். ஆனால் அன்று ஆரம்பித்தது இன்று தன் மனதில் உருப்பெற்று கையும் காலும் பெற்றுவிட்டது என்று நினைத்ததும் அவருக்கு மீண்டும் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. எனினும் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு புறப்பட்டார். முதல் நாளே இன்றைக்கு அவர் சேட்டிடம் லீவ் வாங்கியிருந்தார்.

 நல்ல உச்சிவேளை, வெயில் எரித்துக் கொண்டிருந்தது. போவதற்கு முன் தன் மன உளைச்சலை நிறுத்த ஒரு சிட்டிகை நல்ல பொடியை உறிஞ்சிவிட்டு, தன் தலையை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு, போதமில்லாமல் என்று சொல்லும்படியாக நடந்தார். நடந்து செல்லும் பொழுதே தான் செல்லும் காரியத்தைப் பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தும், அதைப் பற்றி நினைக்காமலிருந்தும் மீண்டும் அதைக் குறித்துத் தாவ, அவஸ்தைப் பட்டுக் கொண்டே நடந்த வேகத்தில், அவர் ஆசிரமத்தை விட்டு நாலு அடி தாண்டிய பின்னர், உணர்வு மீண்டும் தன்னைப் பின்னிழுக்க ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

அவர் நினைத்தபடி ஆசிரமத்தில் ஒருவருமில்லை. ராமகிருஷ்ணர் மாத்திரம் இருந்தார். ஹிருதயன் கூட இல்லை. அவர் நிஷ்டையில் இல்லை என்பதை அறிந்ததும் அவருக்கு ஒரு நிம்மதி. பிறகு தன் மேல் துண்டால் முகத்தை விசிறிக் கொண்டுவிட்டு. ஆசிரமத்தில் உள்ள கிணற்றை நோக்கிச் சென்றார். இவையெல்லாவற்றையும் அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செய்தார்.

 பிறகு, பரமஹம்ஸரிடம் வந்து அவரை வணங்கிட பின்னர்வாளா  உட்கார்ந்திருந்தார்இதைப் பார்த்த பரமஹம்ஸர் சிரித்த வண்ணம்

"என்ன தோதா, இன்று கடை இல்லையா?'' என்றுகேட்டார்.

இருக்கு''

 ''எஜமானருக்கு உடம்பு சரியாக இல்லையா?''

"அவரும் சௌக்கியம்தான்."

 "நவீனனைத் தேடிக் கொண்டு வந்தாயா? அவன் இப்போது சிறு பிள்ளை இல்லை என்றாலும், அவனைத் தேடிக் கொண்டு வருவாயாஎன் மூளை துருப்பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் காலத்திலேயே அண்ணா சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் கல்கத்தா சென்று சர்வகலாசாலையில் சேர்ந்திருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்ட தோதாபுரி உள்ளம் மேலும் கலவரமடைந்தது.

 இருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தின் சாயைபடர, வெள்ளிடப்பியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக் கொண்டு விட்டு மெள்ளப் பேசத் தொடங்கினார்.

 நவீனன் விஷயமாக வந்தேன்.''

 நவீனன் நல்ல பிள்ளை.”

 "என்னுடன் நீங்கள் ராய்மஹாசயர் வீட்டிற்கு வரவேண்டும்."

  "எனக்குஅவரைத்தெரியாதே."

 ''உங்களுக்குத் தெரிய வேண்டாம் எனக்குத் தெரியும். அவர் மதுரபாபுவின் சிநேகிதர்.'

''ஏன்இன்னும் நவீனனுக்கு வயதாகவில்லையே" என்று சொல்லி பரமஹம்ஸர் சிரித்தார்.

"அதற்கில்லை, ராய் மஹாசயர் கோடீஸ்வரர். ஆனால் அவருக்குப் புத்திர பாக்கியம் கிடையாது நவீனனைப் பற்றிக்கூட அவர் என்னிடம் கடைக்கு வருகையில் பராபரியாக விசாரிப்பார். நவீனன் மேல்படிப்புக்குப் போகவேண்டுமென்று முன்னுக்கு வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என்னுடைய நிலையில் அவனுக்கு இந்த உதவி செய்யமுடியாது. அதனால்தான் அவரிடம் சென்று இதற்காகப் பொருள் உதவியையும் அவருடைய ஆதரவையும் கோரவேண்டும். நவீனன் காரியத்தை  அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.''

"ஆனால்?''

க்ஷமிக்க வேண்டும்நான் சொல்லி முடித்து விடுகிறேன். நவீனன் பெரியவனாகி  பெரிய பதவியில் அமர்ந்து சிஷ்யனாக இங்கே வர நானே அவனை உபசரித்து எதிர்கொண்டு அழைக்க வேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை."

 "ஆனால் நான் என்ன செய்யமுடியும்?"

 "நீங்கள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேண்டாம். என்னுடன் வந்து உட்கார்ந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு தோதாபுரி ஒரு ஆர்வத்துடனும், ஆவலே உருவாகவும் அவர் முகத்தைப் பார்த்தார்.

 பரமஹம்ஸர் அவரை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. கொடியில் போட்டிருந்த தன் ஒற்றை மேல் துண்டைக் கையில் பிடித்துக் கொண்டு அவருடன் வெளியே இறங்க ஆயத்தமானவர், திரும்பித் தோதாபுரியிடம் உங்கள் வெள்ளி டப்பியில் போதிய பொடி இருக்கிறதா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வேறு நினைவில் மூழ்கியிருந்த தோதாபுரியிடமிருந்து "இருக்கிறதே" என்ற பதில் வந்தது. இதன்பின் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு நாலு தெரு தாண்டி ராய்மஹாசயர் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ராய்மஹாசாயர் தன் வீட்டு வாசலில் விசிறியால் தனக்குத்தானே விசிறிக்கொண்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தோதாபுரியைத் தெரிந்ததும் அவரை வரவேற்காமல் நின்று கொண்டிருந்தார்.

 தோதாபுரியே வலிந்து அவரைக் கும்பிட்டு அவரிடம் சென்றார். அவராகவே வலிந்துசற்று எட்டி நின்று கடுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பரமஹம்ஸரைச் சுட்டிக் காட்ட ராய் மஹாசயர் அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொல்லி தான் முன்னே போனார்.

 உள்ளே சென்றதும் கூடத்தில் சார்த்தி வைத்திருந்த இரு பலகைகளில் ஒன்றைத் தரையில் வைத்து, அதில் பரமஹம்ஸரை அமரும்படி தோதாபுரி வேண்டிக்கொண்டார்பரமஹம்ஸர் அவ்வாறே செய்தார். அவர் தன் மேல் துண்டை இப்பொழுது மடியில் வைத்துக்கொண்டார். தோதாபுரி பேச ஆரம்பித்தார்.

''நீங்கள் சில நாட்கள் முன் கேட்ட குங்குமப்பூ கடையில் வந்திருக்கிறது."

 என்ன கதையாக இருக்கிறது, தோதாபுரி! இதைச் சொல்லவா இந்தப் பட்டை உரிக்கும் வெயிலில் இந்தக் கிழவனையும் அழைத்துக் கொண்டு வந்தாய்.''

 தோதாபுரிக்குக் கலவரம் கூடியது. திரும்பிப் பார்த்தார். பரமஹம்ஸர் சுவரில் சாய்த்த பலகையைப் போல அரையாக மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் தன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சி விட்டுச் சற்றுத் தயங்கிவிட்டு, க்ஷமிக்கணும் இதற்காக நேற்றுக் கடைக்குக் கல்கத்தாவிலிருந்த ரோஜாமணி அம்மையார் ஆள்விட்டிருந்தார்கள்."

 இதுகாறும் அசட்டையாக இருந்த ராய்மஹாசயர் எழுந்து உட்கார்ந்தார். தாசிரோஜாமணியுடன்தன் மனைவி இறந்த பிறகு அவர் நிரந்தரமான தொடர்பு வைத்திருந்தும், அவள் தேவைகளை இவர் கணக்கில் எழுதிக் கடையிலிருந்து அனுப்புவதும் தோதாபுரிக்குத் தெரியும்.

 "???" இவ்வாறு ராய்மஹாசயர் அவர் பேச்சைத் தொடர எதிர்பார்த்தார்.

 "குங்குமப்பூ இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்று தகவல் கிடைத்தது. நான் இன்று லீவ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நவீனன் மூலம் உங்களிடமே கொடுத்தனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். இன்று சேட்டும் கடையைச் சீக்கிரமாக அடைத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."

 ரோஜாமணியின் பெயரைக் கேட்டதால் சந்தோஷமடைந்திருந்த ராய்மஹாசயர் "நவீனன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அவன் யார்? கடைவேலைக்காரனா?"

 "இல்லை அவனுக்கு உங்கள் அனுக்கிரகம் வேண்டும்.''

 ராய்மஹாசயர் பரமஹம்ஸரைப் பார்த்துக்கொண்டேஎன்னுடைய அனுக்கிரகமாஎன்றார். பரமஹம்ஸர் இன்னும் அதே நிலையில் வீற்றிருந்தார்.

நல்லபையன்என் ஒரே புத்திரன், ஆசிரமத்தில் புண்ணிய கைங்கரியம் செய்கிறான்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். அவன் மேலே படிக்க வேண்டுமென்றும் பெரிய பதவியில் அமரவேண்டும் என்றும் என் ஆசை. இந்த சிந்தனை உதித்தவுடன் உடனே இங்குவந்தேன்.''

இப்பொழுது ராய்மஹாசயர் தோதாபுரியைத் தனியே வேறு அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். தோதாபுரியும் மூன்று வருஷத்திற்கு முன் தன் உள்ளத்தில் எற்பட்ட அதே ஒரு உருத்தெரியாத உணர்ச்சியுடன் அவரைப்  பின் தொடர்ந்தார். கூடத்தில் பரமஹம்ஸர் பலகையைப் போல் உட்கார்ந்திருந்தார்.

 "தோதாபுரிநான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாம் இருவரும் மனைவியை இழந்தவர்கள்இருவரும் நிறைய லோகானுபவம் நிறைந்தவர்கள்நான் பரமஹம்ஸர் ஆசிரமம் பக்கமே போவதில்லை என்பது உனக்கு தெரியும். நீயும் மூன்று வருஷங்களாக அங்கு போய் பழகிக் கொண்டிருந்தவன்இன்று அவரையும் அழைத்துக் கொண்டு என்னிடமும் வந்திருக்கிறாய்."

இதைக் கேட்டுக் கொண்டேயிருந்த தோதாபுரி மேலே அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தால், அவரைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சிவிட்டு, தன்மூக்கைத் துடைத்துக்கொண்டு அவரைத் தொடரச் சொன்னார்.

"நான் அங்கு வராவிட்டாலும் எனக்கும் பரமஹம்ஸரைத் தெரியும். மல்லிக் முதலியவர்கள் ஏன் அவரைச் சுற்றி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. எனக்கு வம்பு பேசுவதில் வெறுப்புஆனால் ஒன்றுநான் அதிகமாகப் படித்ததில்லை. பரமஹம்ஸரும் படிக்கப் பிடிவாதமாக மறுத்தவர் என்பது உனக்குத் தெரியும். ஆனால் எங்கள் நிலையென்ன, உண்மையான ஞானம் பதவியெல்லாம் வேண்டுமென்றால் அதற்கு மேல்படிப்பு வேண்டாம். என்ன, நான் சொல்வதைக் கேட்கிறாயா?''

வரும் அழுகையை அடக்கிக் கொள்வதாலும், வரம்புமீறிய உணர்ச்சியால் கட்டுண்டபோதும் மக்கள் பெறும் ஒரு உணர்ச்சியால், தோதாபுரி தன் வாய் வலித்ததால், வாய்பேச முடியாமல் தலையை அசைத்தார். மீண்டும் அவர் உள்ளத்தின் உருத்தெரியாத வெளியில் தன் மனைவியின் உருவமும், கூடத்தில் நிர்விசாரமாக  உட்கார்ந்திருந்த பரமஹம்ஸர் உருவமும் வீட்டிலிருந்த களங்கமற்ற நவீனன் உருவமும் ஒருசேர மின்னிப் பாய்ந்தன.

 ''எனக்குத்தெரியும்நீ உலகம் தெரிந்தவன். எனக்கு நவீனன் என்ற பெயர் பிடித்திருக்கிறதுஎனக்கும் அவனுக்கு உதவிபுரிந்து அவனை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனால் அவனை நான் படிப்பினால் வீணாக்க விரும்பவில்லைஅவனுக்குக் காரியத்திறமையையும், பொருள் சேகரிப்பு முறையையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - நீ சம்மதித்தால்."

மோர் மீது திரண்டு வரும் வெண்ணெயைப் போல் தன் உள்ளத்தில் மிதந்து தன் மென்னியைப் பிடிக்க உயர்ந்து எழும்பி வரும் ஒரு பயத்தினால் தோதாபுரி மீண்டும் தலையை அசைத்தார்.

 'பரமஹம்ஸரைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் பெண்களைப் பற்றிச் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் தோதாபுரி, விந்துவை ஒரு பொழுதும் விரயமாக்கக் கூடாது என்று அந்தப் பேயனே வந்து சொன்னாலும் நம்மால் முடியுமா, தோதாபுரி? ரோஜாமணியைப் பற்றி நான் பராபரியாகப் பல கேள்விப்படுகிறேன். நானும் சட்டவரம்புக்குட்பட்டவன் தான். என் மனதைச் சாந்திப்படுத்த ஒருவன் இருந்தால் இந்த அவஸ்தையில்லை. உன்னிடம் நான் சொன்னது பொய், எனக்கு நவீனனைத் தெரியும்அவன் மிகவும் நல்ல பையன் என்றும், பிரம்மதேஜஸ் உடையவன் என்றும் என்னிடம் மதுரபாபு சொல்லியிருக்கிறான். நவீனன் ரோஜாமணி வீட்டில் அவள் வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டு என்னுடைய ஆளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவனைப்பற்றி நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம். தோதாபுரி, அவன் காரியத்தை என்னிடத்தில் விட்டுவிடு. என்ன சொல்கிறாய்?''

தோதாபுரி உருத்தெரியாத தனது உள்ள வெளியிலிருந்து எழுந்த சூறைக்காற்றைப் போன்ற கோபத்தை அடக்க வெகுவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு அவரிடம் "நாளை வருகிறேன்" என்று எழநன்றாக யோசித்து முடிவுக்கு வாஎன்று சொல்லிக்கொண்டே அவரும் அவனைப் பின்தொடர, இருவரும் கூடத்திற்கு வந்ததும், அதுகாறும் வீற்றிருந்த பரமஹம்ஸர் எழுந்திருந்ததும் ஒரே சமயத்தில் நடந்தது.

 இருவரும் பரமஹம்ஸரும் தோதாபுரியும் மௌனமாக நடந்து, ஆசிரமத்திற்கு வந்ததும் விடை பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்ற தோதாபுரியைப் பார்த்து பரமஹம்ஸர், "தோதாபுரி, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். இந்த மூன்று வருஷங்களில் நீ என்னிடம் கற்றுக்கொண்டதைவிட, கற்றுக் கொள்ளத் தவறியதைராய்மஹாசயர் உனக்கு மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொடுத்திருப்பார்நாம் இருவரும் அவரை வணங்குவோம். இப்பொழுது நான் உன்னுடன் வந்ததின் தாத்பரியம் உனக்குப் புரிந்திருக்கும்" என்று சொல்லிப் பரமஹம்ஸர் அவருக்கு விடைகொடுத்தனுப்பினார்.

 அடுத்த நாள் காலையில் தக்ஷிணேசுவரத்தின் காளி கோயிலில் நவீனன் அர்ச்சகனாகிவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராய்மஹாசயர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.

 - "எழுத்து" - 1959 

Comments

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா