Skip to main content

சம்பங்கி ஏன் கண்களை மூடினாள்?


 கவிஞர் பச்சோந்தியிடமிருந்து இரவலாகப் பெற்ற ஷோபாசக்தியின் புதிய சிறுகதைத் தொகுதியானகருங்குயில்’-ன் முதல் கதையானமெய்யெழுத்துஎனது பால்யகால வாசிப்பு நினைவின் மங்காமல் இருக்கும் புகைப்பட உருவமான திலீபனைப் பற்றியது என்பதால் காய்ச்சல் வந்தது போல அந்தக் கதையைப் படித்தேன். கதையில் எட்டாம் வகுப்புச் சிறுவனாக ராகுலனுக்கு திலீபன் அறிமுகமானார். அதே எட்டாம் வகுப்பில்தான் ஜூனியர் விகடனில் இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளின் சார்பில் சில கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன திலீபனின் புகைப்படங்களையும் செய்திகளாகப் படித்தேன். ஆயுதப் போராட்டத்தில் இருந்த திலீபன் காந்தியின் வழியில் அமைதிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் என்பது அப்போதைய புரிதலாக இருந்தது. திலீபனின் கண்ணாடி அணிந்த கண்கள் மறக்க இயலாதவை. நல்லூர் முருகன் கோயில் வீதியில் ஒரு பந்தலின் கீழே கூட்டத்துக்கு நடுவில் திலீபன் படுத்திருக்கும் வண்ணப்புகைப்படம் இந்தச் சிறுகதையைப் படித்தபோது மேலெழுந்துவந்தது. திலீபன் வழியாகவே விடுதலைப் புலிகள் தொடர்பில் எனக்கு முதல் மனப்பதிவும் அனுதாபமும் முதலில் உருவாகியிருக்க வேண்டுமென்று இப்போது தோன்றுகிறது

ஷோபாசக்தி இந்தக் கதையில் மயில் என்ற படிமத்தை துல்லியமாக இணைத்திருக்கிறார். மயிலுக்கு தமிழ்த்தன்மையோடு ஒரு மறுமை அடையாளமும் இருக்கிறதல்லவா?  

ஒரு மாதத்துக்கு முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றப்போகிறார் என்ற செய்தியை வெளியிட்டு கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டுப் போன பழ. நெடுமாறனின் கூற்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

மரணமோ பிரிவோ முழுமையாக உடலின் அடிவரை ஏற்றுக்கொள்வதற்குத் தான் சடலம், இந்த மண்ணில் புதைக்கப்படவோ, உடனிருந்தவர்கள் கண்களுக்கு முன்னாலேயே எரித்தோ அழிக்கப்படுகிறது. இங்கே இருந்த ஆளை மரணம் இங்கிருந்து அகற்றிவிட்டது என்பதை அடிமனம் வரை சொல்வதற்குத்தான் உலகமெங்கும் வெவ்வேறு மதங்கள் சடங்குகளை வைத்திருக்கின்றன.

மரணத்தின் நினைவு, புகையாய் கரைந்துபோக வேண்டுமென்பதற்காகத்தான் நெருப்போடும் நீரோடும் நீத்தார் சடங்குகள் கட்டிப்போடப்பட்டுள்ளன.

பிறப்பு எத்துணை உண்மையோ; இறப்பும் அத்துணை உண்மை என்பதை, அன்றாடம் வேதித் தைலங்கள் போட்டுப் பாதுகாத்து இறந்த நண்பனின் சடலத்துடன் இருப்பதற்காகவே அருமை மனைவியையும் குழந்தையையும் பிரிந்து பல துயரங்களை அனுபவித்த மருத்துவர் ராகுலனின் வழியாக திலீபனின் உடலம் நமக்குப் போதிக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கூரியல் பரிசோதனைக்காக நன்கொடை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட திலீபனின் உடலம், இக்கதையில் 1995-ல் யாழ்ப்பாணம் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட போது புலிகளுடன் சேர்ந்து பயணத்தைத் தொடங்கி கடையில் வேறு வழியில்லாமல் 2009-ல் தமிழீழக் கனவுடன் சேர்ந்தே புதைக்கப்படுகிறது.

இந்தக் கதையின் முன்பகுதியில் ராகுலனும் ராசையா பார்த்திபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனும் பதின்வயதில் சந்திக்கும் சம்பவமும் ஒரு மயிலின் புதைக்கப்பட்ட உடலத்தோடு தொடர்புடையது.

எல்லார் பால்யத்திலும் இப்படியான வினோதத்துடன், நம்மால் அந்த வயதில் நம்ப இயலாத ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் ஒரு நபர் நண்பராகவோ லட்சிய உருவமாகவோ அறிமுகமாவது போலத்தான் திலீபனுக்கும் ராகுலனுக்குமான உறவு பச்சைப்பிடிக்கிறது. வேலும் மயிலுமாக ஆகிவிட்டார்கள் என்றே ராகுலன், திலீபன் உருவானதாக ஒரு வரியில் விவரிக்கவும்படுகிறது

கதையின் இறுதியில் திலீபனின் உடலுக்கு ஒரு மயிலின் சடலம்தான் ஈடாகிறது.            

பாப்லோ நெருதா சிலியின் தூதுவராக இலங்கை கொழும்புவில் தங்கியிருந்தபோது அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய தமிழ் தலித் பெண்ணின் கதைகருங்குயில்’. சமீபத்தில் me too இயக்கம் உலகெங்கும் பேரலையாக எழுந்தபோது பாப்லோ நெருதா தனது நினைவுக் குறிப்புகளில் விட்டுச்சென்ற இந்த பாலியல் வல்லுறவு நிகழ்வு அவரது புகழ் மீது கரும்புள்ளியாக மீண்டும் விவாதிக்கப்பட்டது.

கருங்குயில் என்றே குறிக்கப்படும் அந்தக் கவிஞனின் வீட்டுக்கு அதிகாலையில் அக்காலத்து நடைமுறைக்கேற்ப கழிவறைப் பகுதியில் தொங்கவிட்டிருக்கும் மலவாளியை எடுத்துக் கடலில் கொட்டி கழுவி திரும்ப வைப்பதற்காக வரும் சம்பங்கி என்ற யுவதிக்கு, கவிஞனால் ஏற்படும் அவலம் தான் இச்சிறுகதை.

ஷோபா சக்தியின் மற்ற கதைகளோடு ஒப்பிடும்போதுபாப்லோ நெருதாவின் வாழ்க்கையில் நடைபெற்றது என்ற முக்கியத்துவத்தைத் தவிர வடிவத்திலும் மொழியிலும் பெரிய சுவாரசியமேதுமில்லாத ஒரு சோகக் கதை இது.

கிட்டத்தட்ட பாப்லோ நெருதா தன் நினைவுக் குறிப்புகளில் எழுதியதில் சம்பங்கியின் கடலோர குடிசைப்பகுதி வாழ்க்கை ஒன்று பின்னணியாக எழுப்பப்படுகிறது.

பாப்லோ நெருதாவின் நினைவுக் குறிப்புகளை ஏற்கெனவே படித்திருந்தபோது, சம்பங்கியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் பாப்லோ நெருதா, அவளை வல்லுறவு செய்யும்போது ஒரு சிலைபோல கண்ணைத் திறந்து மலட்டுப் பார்வையுடன் வெறித்துப் படுக்கையில் கிடந்தாள் என்று நெருதா எழுதியிருப்பதான ஞாபகத்தில் திரும்பப் போய் அவரது நினைவுக் குறிப்பைப் பார்த்தேன்.

பாப்லோவின் நினைவுக் குறிப்பு அந்த நிகழ்ச்சியை இப்படி விவரிக்கிறது :

I got a strong grip on her wrist and stared into her eyes . . . . Unsmiling, she let herself be led away and was soon naked in my bed . . . . It was the coming together of a man and a statue. She kept her eyes wide open, all the while, completely unresponsive. She was right to despise me. The experience was never repeated.

ஆனால், கருங்குயில் கதையில் அவள் கண்ணை இறுகமூடிக்கொண்டிருக்கிறாள். பாப்லோ நெருதா என்ற பெயரைத் தவிர வேறு எல்லாக் குறிப்புகளும் சிறுகதையில் வருகிறதென்றாலும் ஒரு புனைவாசிரியனாக அவள் கண்களை மூடுவதற்கு ஷோபா சக்திக்கு சுதந்திரம் உண்டென்றாலும் ஏன் கண்களை மூடவைத்தார் என்ற வினோதம் இந்தக் கதை தொடர்பாக எனக்கு இருக்கிறது

Comments