Skip to main content

பொய்ச்செய்திகள், பிரசாரங்களே ஊடக எதார்த்தமாகிவிட்ட காலத்தில் ‘WHILE WE WATCHED”



பொய்களும் பிரசாரமும் துருவமயப்படுத்தப்பட்ட கருத்து தரப்புகளுமே இன்றைய, வெகுஜன இந்தியச் செய்தி ஊடகங்களின் எதார்த்தம்; அறிவு, நேர்மை, உண்மை பேசும் துணிச்சல் படிப்படியாகக் கழுவித் துடைக்கப்பட்ட பகட்டான இடங்கள்தான் இன்றைய செய்தி அறைகள்.

அதிகாரத்துக்கு முன்னால் குறைந்தபட்சம் உண்மைகளை எடுத்துப் பேசும் நேர்மை , அரசு அதிகாரம் சொல்லும் தரவுகளுக்கு மாறான எதார்த்தங்களைத் தரவுகளாக வைக்கும் அறம் அல்லது சாகசம் எல்லாம் பழைய மதிப்பீடுகளாக சீக்கிரமே ஒரு பாழ்படியும் இருட்டுக்குள் போன இடத்துக்குள் உரையாடுவதற்கு யாருமில்லாத தனிமையில், என்டிடிவியிலிருந்து வெளியேறிய செய்தியாளர் ரவீஷ் குமாரை, இந்த ஆவணப்படத்தில் பார்க்கிறோம்.

“நீங்கள் தனிமையாக உணரும் நிலையில், யார் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது ‘WHILE WE WATCHED” ஆவணப்படம்.

அருந்ததி ராய் உரைப்பது போல ஒரு பெரும்பான்மைவாத சர்வாதிகாரமாக இந்தியாவை சீரழிவுக்குப் படிப்படியாக அவர்கள் அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நடவடிக்கையில் ஒரு ஊடக நிறுவனமும் ஒரு செய்தியாளனும் எப்படி படிப்படியாக கழுத்து நெரிக்கப்படுகிறான் என்பதைச் சொல்லும் கதை இது. வன்முறையும் தீமையும் அன்றாட எதார்த்தமாக தெருக்களில், வகுப்பறைகளில், பொது இடங்களில் ஆகிக்கொண்டிருக்கும் எதார்த்தம் இது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பழங்குடிகள், தலித்கள் மீதான வன்முறைகளும் அந்தக் காட்சிகளும் சாதாரணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், 24 மணிநேர செய்தி ஊடகங்களும் ஒரு பாசிச சர்வாதிகாரமாக உருவாவதற்கான சமையலில் முழுநேரமும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமந்தைத்தனத்திலிருந்து விலகி ஓடநினைத்து பலியாளான ரவீஷ்குமாரின் கதைதான் இது. 

இந்தியா போன்ற நாட்டில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊட்டச்சத்துக்  குறைபாடு, விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடிகள், ஊழல், அதிகாரத்துவத்துவத்தின் மெத்தனத்தை குறைந்தபட்சமாவது ஊடகங்கள் பேசவேண்டுமென்ற நிலைமாறி, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிரிகளாக சககுடிமக்களான இஸ்லாமியர்களை வடமாநிலங்களில் மாற்றி, அந்தக் கதையாடல்களே ஆதிக்கம் செலுத்தும் செய்திகளாக மாறிய, மாட்டுக்கறி வைத்திருப்பதையே கொலைசெய்யப்படும் அளவுக்கு குற்றமாக்கி, அதைப் பெரும்பான்மை குடிமக்கள் ஏற்றுக்கொள்ளவும் வைத்த ஊடக எதார்த்தம் ரவீஷ்குமார், என்னும் செய்தியாளனை எவ்வாறு படிப்படியாக மௌனத்துக்குள் இழுத்துச்செல்கிறது என்பதை இந்த ஆவணப்படம் காண்பிக்கிறது. 

செய்திகளை ஒளிபரப்புவதற்குத் தொழில்நுட்ப ரீதியான தடைகளை ஏற்படுத்துவது, டிஆர்பி ரேட்டிங் குறைவது, சகாக்களும் ஊழியர்களும் படிப்படியாக வெளியேறுவது, தேசத் துரோகி, நகர்புற நக்சல்கள் என்ற தொடர் அச்சுறுத்தலுக்கும் வசைகளுக்கும்  உள்ளாவது என என்டிடிவி நிறுவனமும் செய்தியாளர் ரவீஷ்குமாரும் படிப்படியாக நெருக்கடியையும் பின்னடைவையும் சந்திக்கின்றனர்.

பிரணாய் ராயால் பெரும் கனவுடன் தொடங்கப்பட்ட என்டிடிவி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பல தளங்களில் இருந்த ஸ்டுடியோ அறைகள் விற்கப்படுகின்றன. டிஆர்பி ரேட்டிங்கே பெரும் மாயையாக இன்னமும் புரிபடாத விந்தையாக இருக்கும் சூழலில் விளம்பரங்கள் குறைந்து என்டிடிவி என்ற பெரிய கப்பல் தரைதட்டத் தொடங்குகிறது. மத்தியப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு பிரணாய் ராய் குடும்பத்தினர் விசாரணைக்குள்ளாகிறார்கள். பிரணாய் ராய்க்குக் கடனளித்த நிறுவனம், அதானியிடம் என்டிடிவியை ஒருகட்டத்தில் விற்றது. சீனிவாச ஜெயின் உள்ளிட்ட எத்தனையோ முகங்கள் இன்று மறக்கப்பட்ட முகங்களாகிவிட்டன. 

2019-ம் ஆண்டு தேர்தலில் பேசப்பட வேண்டிய முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினைகள் திசைதிருப்பப்பட்டு மோடி மீண்டும் பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல், பாலகோட் ராணுவத்தின் பதிலடி தாக்குதல் ஆகியவை எப்படி சாதாரண மக்களிடம் தேசியவாத சொல்லாடலாக மாற்றப்பட்டது என்பதை நெருங்கி இப்படத்தில் பார்க்கிறோம்.

ஒரு இந்தியன் சிந்திய ரத்தத்துக்கு நூறு பாகிஸ்தானியர்களின் ரத்தம் தேவை என்று அர்ணாப் கோஸ்வாமி தேசபக்தியுடன் பேசுகிறார். வேலையின்மை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் போதையைத் தந்து பிரதமர் மோடி திரும்பவும் ஆட்சிக்கட்டிலில் ஏறுகிறார்.

சாதாரண மக்களின் குரலாக இருக்க நினைத்த செய்தியாளர் ரவீஷ் கமார், படிப்படியாக பேசவே ஆள் இல்லாமல் தனியாகப் புலம்ப வேண்டிய நிலைக்கு எப்படி மாறுகிறார் என்பதுதான் ‘WHILE WE WATCHED’ காண்பிக்கும் எதார்த்தம்.

இந்தியாவின் செய்தி ஊடகங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் கொடூரமான எதார்த்தத்தைக் காண்பிக்கும் இந்த ஆவணப்படம் இந்தியாவில் தற்போதைக்கு வெளியாகவில்லை. இந்தியாவுக்கு வெளியே அமெரிக்கா போன்ற நாடுகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் வினய் சுக்லா, இந்தியாவில் இந்தப் படம் பரவலாகத் திரையிடப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முயன்றுவருகிறார்.

பொய்களும் அதிகாரப் பகட்டும் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், இந்தக் கோர எதார்த்தத்துக்கு எவர் பலியாடுகளோ அந்த மக்களே விரும்பி அந்தச் சூழலுக்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு போதை எதார்த்தம் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வெறுப்பும் அச்சமும் நிம்மதியின்மையுமே இயல்பான நிலையாக ஆகிவிட்ட முடியாத, முடிவு எப்போதென்றே தெரியாத தங்களுக்கான ஒரு அழிவுப்பாதையை நம் மக்களே தேடித் தேர்ந்தெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் ஒரு கதை இது.

யூத இனப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் அதைப்பற்றிய திரைப்படங்கள் வரவில்லை. ஹோலோகாஸ்ட் தொடர்பிலான திரைப்படங்கள் அது முடிந்தபிறகே வந்தன.

ஆனால் ஒரு அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே ‘WHILE WE WATCHED” ஆவணப்படம் வந்திருக்கிறது. ஆனால் இதிலிருந்து ஏதாவது பாடம் கற்போமா? அல்லது குறைந்தபட்சம் இந்தப் படைப்பையாவது கவனத்துடன் பார்ப்போமா என்ற சந்தேகமே எஞ்சுகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் பார்த்து விவாதிக்க வேண்டிய, தன்னைச் சுயபரிசோதனைக்குள்ளாக்க வேண்டிய ஒரு படைப்பு இது.  

Comments