நேயக் கலவி மயக்கத்தில் குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில் கொஞ்சி தொட்டுத் தொட்டு நீ அகற்றிய என் உள்ளாடையின் நிறம் துயரக் கருப்பானது தற்செயல்தானா கோகிலமே! உன் இருள் கேசம் அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய உன் புருவம் திலகமிட்ட நெடிய நெற்றி கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு ஆராதித்து உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன் அரவப்படம் உன் அல்குல் என வர்ணித்து முத்தத்தால் உரித்த உன் உள்ளாடையும் அதே துயரக் கருப்பானது தற்செயல்தானா? மரகதமே! இப்போதும் அலமாரியில் கையில் தட்டுப்பட்டு அணியும்போதெல்லாம் யாரை எதை எப்பொழுதைப் பழிக்க அந்தக் கருப்பு உள்ளாடையின் உட்புறத்தை மாற்றி அணிகிறேன் ஞாபகமென்னும் ஆலகால நஞ்சே! (நன்றி : அகழ் இணைய இதழ்)