தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது. (நன்றி: அகழ் இண...