Skip to main content

அருந்ததி ராயின் அம்மா


குழந்தைகள் தாங்கள் வந்து விழுந்துவிடும் மண்ணில் நின்று தரிக்கவும், பெரியவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தகங்கள்தான் இந்த உலகத்தின் பெரும்பாலான கதைகள். அருந்ததி ராய் தன் அம்மா குறித்து எழுதிய நினைவு நூலைப் படிக்கும்போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பிரிவினைக்கால கலவரங்களில் தொடங்கி இன்றைய பாலஸ்தீனம் வரை, போருக்கே தகவமைத்துக்கொள்ளாத நிராயுதபாணிகளான குழந்தைகள் மீதுதான் பெரும் யுத்தங்கள் தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொண்டு அந்தக் காயங்களுடனும் ஆறாத ரணங்களுடனும் அவர்கள் மிஞ்சி எழுந்து பெரியவர்களாகும் கதையைத்தான் சமீபத்தில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படமாகவும் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் எடுத்திருக்கிறார். ஆமாம்; அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நினைவு நூலை, இரண்டு குழந்தைகள் நடத்திய யுத்தத்தின் கதைகள் என்றும் கொள்ளலாம். முதல் கதை வளர்ந்தும் முரட்டுக் குழந்தையாகவும் முழுமையான அராஜகியாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்து 89 வயதில் இறந்துபோன மேரி ராயின் கதை. அம்மாவின் கதையூடாகத் தன் கதையைச் சொல்லும் போராளியும் எழுத்துக் கலைஞருமான அருந்ததி ராய் என்ற மகளின் கதை இன்னொன்று.

காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் அற்புதப் படைப்புகளில் ஒன்றெனக் கருதப்படும் ‘களங்கமற்ற எரிந்திராவின் நம்பவே இயலாத சோகக்கதை’ எரிந்திராவின் பாட்டியை, இந்தப் புத்தகம் முழுவதும் ஞாபகப்படுத்துபவராக அருந்ததி ராயின் தாய் மேரி ராய்.

அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றபிறகு, அவரது தாய் என்ற அடையாளத்தையே வெறுத்த மேரி ராய் தன்னளவிலேயே ஒரு சாதனையாளர்.

குடிகாரனும் ’வெறும்பயலு’மான கணவரைத் துறந்து இரண்டு குழந்தைகளோடு கல்கத்தாவிலிருந்து தமிழ்நாட்டின் சிறு மலைநகரமான ஊட்டிக்கு ஒரு அகதியைப் போலக் குடியேறியவர் மேரி ராய். பணக்கார சிரிய கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தாய், சகோதரனின் ஆதரவில்லாத நிலையில் வறுமையுடனும் வாழ்க்கை முழுக்க ஆஸ்துமாத் தொல்லையுடனும் தன் வாழ்க்கையை நடத்தியவர். பெண் குழந்தைகளுக்கு சொத்து தருவதற்கு இடமில்லாத திருவிதாங்கூர் கிறிஸ்தவ வாரிசு சட்டத்தை எதிர்த்து வழக்காடி உச்சநீதிமன்றம் வரை சென்று சிரியன் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த மகள்களுக்கு சமமான சொத்துரிமையைப் பெற்று கேரள வரலாற்றில் இடம்பிடித்தவர். சிறுவயதிலிருந்து ஆசிரியையாகப் பணிபுரியும் கனவைச் சேமித்து ஊட்டியில், பிரிட்டிஷ் மிஷனரிப் பள்ளிகளில் வித்தியாசமான பாடமுறைகளைக் கவனித்துக் கற்று, கோட்டயத்தில் ’பள்ளிக்கூடம்’ என்ற பெயரில் விளையாட்டு வழிக் கல்விநிலையத்தை ஆரம்பித்து இன்றுவரை புகழுடன் நிலைத்திருக்கும் ஒரு சிறந்த கல்விநிலையமாகவும் மாற்றியவர்.

ஒரு அம்மாவாக எப்போதும் வெடித்துக் குமுறத் தயாராக உள்ள நடத்தை, மோசமான திருமண வாழ்க்கையால் தனிமைப்பட்டு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கவேண்டிய பொறுப்பு ஏற்படுத்திய கடினத்தன்மை, அசௌகரியமான நேரங்களிலும் வெளிப்படுத்தும் நகைச்சுவை எல்லாம் கலந்த அச்சத்துக்குரிய பூதமாகவே கடைசிவரை வாழ்ந்து மறைந்தவர் மேரி ராய்.

மேரி ராயின் மகளோ இந்தியா நவதாராளவாதம் வழி ஒரு மதவாத நாடாக மாறிய நவீன வரலாற்றின் எழுத்து சாட்சி; தேசத்துரோக வழக்கைச் சந்தித்து சிறைசென்ற போராளி.

வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் சவாலையும் அலைக்கழிப்பையும் தனிமையையும் அச்சத்தையும் அளித்த தாய் மேரி ராயின் இறுதிக்காலம் வரை பரிவோடும் புரிதலோடும் இருந்த மகள் அருந்ததி ராயின் பிணைப்புதான் இந்த நூலைத் தனித்துவமாக்குவது. மார்க்வெஸின் எரிந்திராவை அத்தனை கொடூரமாக அந்தப் பாட்டி நடத்தும்போதும் எரிந்திராவுக்கும் பாட்டிக்கும் கடைசிவரை நிலைத்திருக்கும் பிணைப்பை பலவகைகளிலும் ஞாபகப்படுத்தும் பந்தம்.

பயங்கரமும் தோல்வியும் சேர்ந்து உருவாக்கிய பால்யம்

நன்கு கற்ற, உலகத்தின் பல மூலைகளுக்கும் சென்றுவந்து பரந்த கலாச்சார வளம் வாய்க்கப்பெற்ற, வாழ்க்கையால் தோற்கடிக்கப்பட்ட அதீத இயல்புகொண்ட மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்த அய்மனம் கிராமம்தான் அருந்ததி ராயின் பால்யத்தையும் உலகப் பார்வையையும் வடிவமைத்திருக்கிறது. அருந்ததி ராயின் மாமா ஜி. ஐசக், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கிரேகத்திலும் ரோமானிய புராணிகத்திலும் பெருமைக்குரிய ரோட்ஸ் புலமைப் பரிசில் பெற்று முதுகலை படித்த மார்க்ஸியர். பேராசிரியராகச் சென்னையில் பணிபுரிந்து அந்த வேலையைவிட்டு ஊறுகாய், ஜாம் மற்றும் கறிமசாலா பவுடர் நிறுவனம் தொடங்கி நடத்தி, தங்கை போட்ட வழக்காலேயே தோற்கடிக்கப்பட்டவர். தொழிலில் வீழ்ச்சியை அடைந்து அய்மனம் கிராமத்தில் ஒதுங்கி வாழ்ந்தவர்.

மாமாவிடமிருந்து தோல்வியின் வசீகரத்தை இளம்வயதிலேயே பெற்ற அருந்ததி ராய், குரூரமும் தூஷணமும் கொண்ட தாயிடமிருந்து, பாதுகாப்பானதாக உணரப்படும் இடம் எப்போது வேண்டுமானாலும் பயங்கரமான இயல்பை அடையலாம் என்ற உணர்வையும் பெற்றிருக்கிறார். ஊதாரியாகச் சுற்றித் திரிந்த தந்தை, வறுமையும் பாதுகாப்பின்மையும் நிறைந்த பால்யம் எல்லாம் சேர்ந்து, உயர்வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தவரெனினும் நாடோடியாக தத்தாரியின் மனநிலையுடன் சர்வ சுதந்திரமாக, ராய்க்கு தன் வாழ்க்கையை வாழமுடிந்திருக்கிறது. புக்கர் பரிசு போன்ற அங்கீகாரம் முப்பது வயதுகளிலேயே கிடைத்தும், அதன் புகழ் மற்றும் பண பாரம் தலைக்கு ஏறாமல் அரசியல் செயல்பாட்டாளராக திரியமுடிந்திருக்கிறது. ஒரு விருதே, அரசு தரும் கனவு இல்லமே வாழ்வின் கடைசி இலக்காக மாறிவிடும் நமது தமிழ் இலக்கியச் சூழலில் நர்மதை அணைக்கு எதிரான போராட்டம் தொடங்கி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் வரை ,அபாயத்தின் இருதயத்திலேயே பயணிக்க முடிந்த ஒரு ஆளுமையின் உருவாக்கத்தை ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நூலின் வாயிலாகக் காண்கிறோம்.

அம்மா அப்பாவுடன் பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தைகளிலிருந்து வேறுபட்ட இனம் தன்னுடையது என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்டதாகச் சொல்கிறார் ராய். போர்ஹே கற்பனை செய்தது போல அவரது சொர்க்கம் நூலகமாக என்றும் இருந்ததில்லை என்கிறார். பள்ளியிலேயே தனக்குப் பிடித்த இடம் தடகள ஓடுபாதை என்கிறார்.

“நான் சாப்பாட்டு வேளையினூடாக ஓடினேன். நான் எனது பள்ளிப் பாடங்களினூடாக ஓடினேன். நான் உறக்கத்தினூடாக ஓடினேன். நான் உறைந்து நின்றபோதும் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தேன். ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தைப் போல நான் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினேன்” என்கிறார்.

நடப்பவர்கள் எல்லாம் ப்ளேட்டோவின் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள். காந்தி நடந்தார். அருந்ததி ராய் ஓடினார். ஓடுவதற்கான அவரது வேட்கையில் நடப்பதற்கும் ஓடுவதற்குமான வித்தியாசம் புரிந்துகொள்ளக் கூடியது. புகழ், அடைக்கலம், அங்கீகாரம், சுயநிறைவு என, கால்களில் சின்னச் சின்னக் காயங்களின் தழும்புகளோடு, எல்லாவற்றிலுமிருந்தும் ஓடிக்கொண்டிருக்கும் ஒல்லிச் சிறுமியாக, அருந்ததி ராய் இப்போதும் தன்னைத் தக்கவைத்திருக்கும் இடத்தை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.

யாருக்கும் எதுவும் நடக்கலாம்

அதனால் தயாராக இருப்பது நல்லது

அருந்ததி ராய் தன்னை வாழ்க்கை முழுவதும் இயக்கும் வாக்கியங்கள் என்று மேற்கண்ட இந்த இரண்டு வாக்கியங்களையே குறிப்பிடுகிறார்.

பிரிவுகள் உறவுகளின் தீராத நாடகம்

அருந்ததி ராய் தனது முதல் காதலைப் பற்றி அம்மாவிடம் பகிர்ந்தபோது அவருக்கு வயது 19. ஆண் – பெண் காதலுறவை -பிராணிகளின் உறவைக் கூட வெறுத்த – மேரி ராயால் அருந்ததி ராய் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு ஆச்சரியப்படத்தக்கது அல்ல. வீட்டில் செல்லமாக வளர்த்த பெண் நாய் டிடோ, ஒரு ஆண் நாயுடன் சேர்ந்து கருவுற்றதால் சுட்டுக் கொல்லுமளவுக்கு கொடூரம் கொண்டவர் மேரி ராய். கட்டிடக் கலைப் படிப்புக்காக டெல்லியிலிருந்து அருந்ததி ராய், ஏழு ஆண்டுகள் கோட்டயத்துக்குத் திரும்பி வந்து தன் அம்மாவைப் பார்க்கவேயில்லை. அந்தப் பிரிவைப் பற்றி இப்படி எழுதுகிறார்.

“நான் என் தாயைப் பிரிந்தது, அவளை நேசிக்காததால் அல்ல. தொடர்ந்து அவளை நேசிக்கவேண்டுமென்பதால் பிரிந்தேன். அவளுடனேயே இருந்துகொண்டு நேசிப்பது அசாத்தியம்….நாங்கள் இருவருமே அறிவோம். ஒரு பொய்யில் நாங்கள் இருவருமே திருப்தியடைந்துகொண்டோம். அது நல்ல பொய். அதை நான்தான் அந்தப் பொய்யை நேர்த்தியாக வடிவமைத்தேன் – “என்னை என் வழியில் போகவிடுமளவுக்கு அவள் என்னை நேசித்தாள்.” எனது முதல் நாவலான ‘சின்ன விஷயங்களின் கடவுள்’-இல் அவளுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக நான் எழுதிய வார்த்தைகள் இவை. அவள் அதை அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறார், கடவுளின் உண்மையைப் போல”

குழந்தையாக இருந்தபோது அம்மாவை தர்க்கமேதுமற்று, நிர்க்கதியான நிலையில், பயத்தோடு, முழுமையாக நேசித்ததாகச் சொல்கிறார் அருந்ததி ராய்.

நொறுங்கிய குடும்பங்களில் வளரும் எல்லாக் குழந்தைகளின் வலி அதுவே. அந்தக் குழந்தைகளுக்கு வேறு என்ன வழி? அன்பு, அன்பின்மை, ஆதுரம், வன்முறை எதுவாக இருந்தாலும் அந்த மழையில் அந்தக் குழந்தைகள் நனைந்துதான் இந்த உலகத்தில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது.

தான் பெரியவளானபின்னர், நிதானமாக, ஊறுபடாத தொலைவிலிருந்து தர்க்கத்தின் இடைவெளியிலிருந்து நேசிக்க முயன்றதாகவும் தொடர்ந்து அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாகவும் ராய் கூறுகிறார்.

மூன்றரை வயதில் அப்பாவிடமிருந்து பிரிந்துவிட்ட அருந்ததி ராய், ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலில் பெற்றோருக்கிடையே நடந்த சச்சரவு குறித்து எழுதிய இடத்தைச் சுட்டிக்காட்டி மேரி ராய், இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீ ரொம்ப சின்னப்பெண் என்று கேட்கிறார்.

அருந்ததி ராய் மிகுந்த நிதானத்துடன், அது புனைவு அம்மா என்கிறார்.

இந்த நினைவு நூலின் பக்கங்களில்,”என் அம்மா, எனது தாதா வாழலாம். அவள்தான் எனது அடைக்கலம். அவள்தான் என்னைச் சுழன்றடிக்கும் புயல்காற்று” என்று குறிப்பிடுகிறார்.

OOO


இந்தியாவில் தாராளமயமாக்கம் தொடங்கியபோது, அதனை இந்திய வெகுஜன கலாசார உளவியலுக்குள் செலுத்திய முகங்களென்று ஐஸ்வர்யா ராயையும் சுஷ்மிதா சென்னையும் சொல்வோமென்றால், அதன் நுண்கலாசார முகமாக புக்கர் விருது வழியாக அறிமுகமான உருவம் அருந்ததி ராய் உடையது. புக்கர் விருது கொடுத்த அங்கீகாரத்திலிருந்து அவர் உயர்வர்க்க வாழ்க்கையை நோக்கி, அவை தரும் பகட்டுகள், அரசு மரியாதைகள் அமைப்புகளின் நிழலில் அடைக்கலம் கோரி நகர்ந்திருக்கலாம். இந்தியாவில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்திலிருந்து நிறுவனமாக குடும்பமாக அமைப்பாகத் திரளும் விபத்து அதுதான்.

அருந்ததி ராய், தன் தாய் தனக்குப் பரிசளித்த வாழ்க்கையின் அபாயகரத்தை முழுமையாக, அந்தரங்க வாழ்க்கையிலும், அரசியல் செயல்பாட்டாளராகவும், கலைஞராகவும் வாழ்ந்து கிட்டத்தட்ட தனது ஆயுளின் முக்கால் பகுதியை நிறைவு செய்துள்ளதை இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.

அவரது அபுனைவுகளைப் படித்திருக்கும் நான், அவரது புனைவுகளையும் படிக்கவேண்டுமென்றுத் தூண்டிய நூல் இது. அவரது கவித்துவமும் கேலியும் அந்தரங்கமும் அசோகமித்திரனின் சுருக்கமும் கூடிய ஆங்கில உரைநடை என்னை எப்போதும் கவர்ந்தது.

2014 இல் இந்துத்துவ பெரும்பான்மை அரசு இங்கு வருவதற்கு முன்பே அதற்கான சகுனங்களை முன்னறிவித்த அறிவுஜீவிகளில் ஒருவர் அருந்ததி ராய். நக்சலைட் போராளிகள் கற்பனை செய்யும் உலகில் தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு வாழ்வதற்கே உரிமை இருக்காது என்று அறிவித்துக்கொண்டு, அவர்களது போராட்டத்தை ஆதரித்து அவர்களுடன் சேர்ந்து பல நாள்கள் பாதுகாப்பேயற்ற சூழலில் பயணித்து ஒரு அபூர்வ கட்டுரையை எழுதியவர். 1998 ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுதச் சோதனையை நடத்தியபோது, பிரிவினைக் கால கொடூரங்கள் திரும்ப நடப்பதை நோக்கி நாம் நடைபோடுகிறோம் என்று சொன்னவர். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கான் மீதான அமெரிக்காவின் தாக்குதல், உலக மக்களின் மீதான இன்னொரு பயங்கரவாத தாக்குதல் என்று முன்னறிவித்தவர். பயங்கரவாத வன்முறையை, பெருவாரியான வறுமையின் பின்னணியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டுமென்றவர். பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் தொடுக்கும் கொடூரங்களைப் பார்ப்பதன் வழியாக உலக மக்களும் பங்கேற்கிறோம் என்று நினைவூட்டிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் அருந்ததி ராய்.

காந்தியின் தாக்கத்தை நேரடியாகப் பெற்ற கட்டிடவியலாளர் லாரி பேக்கரின் தாக்கத்தைப் பெற்று இயற்கை சார்ந்த கட்டிடவியலில் ஈடுபாடு கொண்டு அருந்ததி ராய் 1970களின் இறுதியில் டெல்லிக்கு வந்து கட்டிடவியல் படிப்புக்கு வந்து சேர்கிறார். லாரி பேக்கரை அவர் புத்தகத்தில் டாடி என்றே குறிப்பிடுகிறார். காந்தி, நேரு, தாகூர் சேர்ந்து உருவாக்கிய கனவுகளோடு, மாற்று வாழ்க்கை முறைகளை வாழ்ந்து பார்க்கும் ஒரு நவீனத்துவம் அரசியலிலும் மக்களின் எண்ணங்களிலும் தென்பட்ட ஒரு காலகட்டத்தின் நினைவை அருந்ததி ராய் பகிர்ந்துள்ளார். ராயின் தாயார் மேரி ராயும், ஜார்ஜ் ஐசக்கும் உச்சநீதிமன்றம் வரை சென்று சண்டையிட்டாலும் இருவருமே அவரவர் வாழ்க்கையில் லட்சியவாதிகள். ஜார்ஜ் ஐசக் தனது நிறுவனத்தில் ஒரு மார்க்சியராகவும் காந்தியவாதியாகவும் பெண் தொழிலாளர்களுக்கு தொழில் தொடங்கும் உரிமைகள் உட்பட பலவற்றையும் வழங்கியவர். அருந்ததி ராயின் தந்தை ஒரு இழந்த யுகத்தின் உட்டோபிய நாடோடியாகத் தெரிபவர்.

உயிரியல் ரீதியாகப் பெற்றெடுத்தவர்கள்தான் தாய், தந்தையரா? உயிரியல் ரீதியான தொடர்பு இல்லாமலேய பிரியத்தையும் பந்தத்தையும் தாக்கங்களையும் தந்து நமது சுயத்தையும் உலகத்தையும் சமைத்தவர்களையும் பெற்றோர் என்று சொல்லலாமா? என்ற கேள்விக்கும் அருமையான பதிலைத் தருகிறது அருந்ததி ராயின் இந்த நினைவுநூல்.

(நன்றி: அகழ் இணைய இதழ்) 

Comments