Skip to main content

பொற்கிழி என்பது அங்கீகாரம் அல்ல; நாம் புறம்தள்ள வேண்டிய பழைய மதிப்பீடு

ஜனநாயக விழுமியங்கள் ஏற்படுவதற்கு முன்னர் முடியாட்சி நடைமுறையில் இருந்த நிலையில் புலவர்கள் பொற்கிழி என்று மன்னரிடம் பெறும் நடைமுறை இருந்தது. நவீன ஜனநாயகம், சமூகநீதி என்றெல்லாம் உருவாகிவிட்ட சமூகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்  பொற்கிழி விருதை கவிஞர். சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா, வ. கீதா போன்ற முற்போக்கான ஆளுமைகள் ஏற்றுக்கொள்வது சரிதானா? இந்த நடைமுறையை நாம் மாற்றுவதற்கு ஏதாவது எதிர்க்குரல் தரவேண்டாமா? எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமே அரிது என்று அதுவே போதுமென்று இருந்துவிடலாகுமா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

பத்திரிகையாளரும் எனது முன்னாள் நண்பருமான சமஸ், கலைஞர் கருணாநிதி மரணமடைந்த பிறகு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் நினைவு கருத்தரங்கில் கலைஞர் கருணாநிதியை கருணாநிதி என்று அழைத்தது அந்தக் கூட்ட அரங்கில் சர்ச்சையானது. ஆனால், அதே சமஸ், கலைஞர் கருணாநிதியின், பொற்கிழி விருதை எந்த அசூயையும் இல்லாமல் பெற்றது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.



நாம் சிந்தனைகள் வழியாகவும் கலைகள் வழியாகவும் பழைய நில பிரபுத்துவ மதிப்பீடுகளையும், கலைஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நடுவிலான உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யவேண்டிய அவசியமுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எனது கவிதை ஆசிரியர்களில் ஒருவரான சுகுமாரன், பெரியாரிய எழுத்துகளை அறிமுகப்படுத்திய மதிக்கத்தக்க ஆய்வாளர் வ.கீதா, முற்போக்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது’- பெறுவது தொடர்பான அறிவிப்பு எனக்கு சங்கடத்தைத் தருவதாக உள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி விருது என்று இந்த விருதின் பெயரை மாற்றுவதன் மூலம் நாம் நவீன ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மதிப்பை மீட்க இயலும். சுகுமாரனுக்கு பொற்கிழி என்ற சித்திரத்தை என்னால் தாங்கிக்கொள்வதற்கு இயலவில்லை. 



Comments