காலம் தப்பிப் பெய்கிறது மழை இருப்பினும் தை மாத இறுதியில் கிழக்குக் கடற்கரையோரம் முட்டையிடுவதற்காக பங்குனி ஆமைகள் இந்த ஆண்டும் ஒதுங்கத் தொடங்கிவிட்டன. 0 சென்ற ஆண்டைவிட கிழக்குக் கடற்கரையோரம் சடலமாக ஒதுங்கும் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை குறைவுதான் என்கின்றன செய்திகள். ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகுகளின் இழுவை வலைகளில் சிக்கி வயிறு கிழிவது மட்டுமே பங்குனி ஆமைகளின் மரணத்துக்கு காரணமல்ல என்று சடலப்பரிசோதனை அறிக்கை கூறியது எனக்கு பிரத்யேகமாக ஓர் ஆறுதல். ஜனவரி 18, 321 என்று சுண்ணக்கட்டியால் எண்ணிடப்பட்டு சடலப்பரிசோதனை முடிந்த பங்குனி ஆமை ஒன்றை பிரம்மஞான சபைக்கு நேர்பின்னால் இன்று கடற்கரை நடையில் பார்த்தேன். 000 பொங்கல் விடுமுறை நாளொன்றில் பிரமாண்டமான உடல்கொண்ட எருமை சடலத்தை உடைந்த பாலம் கழிமுகப்பகுதியில் மூன்று நாட்கள் தொடர்ந்து பார்த்தேன். காகங்களுக்கோ பெரும் விருந்து. சென்னையோடு எருமைகளை தியானித்த ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கண்கொண்டு இறந்த அந்த எருமையைப் பார்க்காமல் நீங்கவே முடியவில்லை. 0 அலைகளின் பின்னணியில் புகைப்படப்பிடிப்புக்காக வந்திருந்த பெயர் அறியவே முடியாத யுவதி நீ…….ண்….ட கொசுவங்கள் ...