Skip to main content

பங்குனி ஆமைகள்


காலம் தப்பிப் பெய்கிறது

மழை

இருப்பினும்

தை மாத இறுதியில்

கிழக்குக் கடற்கரையோரம்

முட்டையிடுவதற்காக

பங்குனி ஆமைகள்

இந்த ஆண்டும்

ஒதுங்கத் தொடங்கிவிட்டன.

0

சென்ற ஆண்டைவிட

கிழக்குக் கடற்கரையோரம்

சடலமாக ஒதுங்கும்

பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை

குறைவுதான் என்கின்றன செய்திகள்.

ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகுகளின்

இழுவை வலைகளில் சிக்கி

வயிறு கிழிவது மட்டுமே

பங்குனி ஆமைகளின் மரணத்துக்கு

காரணமல்ல என்று சடலப்பரிசோதனை

அறிக்கை கூறியது

எனக்கு பிரத்யேகமாக ஓர் ஆறுதல்.

ஜனவரி 18, 321 என்று

சுண்ணக்கட்டியால் எண்ணிடப்பட்டு

சடலப்பரிசோதனை முடிந்த

பங்குனி ஆமை ஒன்றை

பிரம்மஞான சபைக்கு நேர்பின்னால்

இன்று கடற்கரை நடையில் பார்த்தேன்.

000

பொங்கல் விடுமுறை நாளொன்றில்

பிரமாண்டமான உடல்கொண்ட 

எருமை சடலத்தை

உடைந்த பாலம் கழிமுகப்பகுதியில்

மூன்று நாட்கள் தொடர்ந்து

பார்த்தேன்.

காகங்களுக்கோ பெரும் விருந்து.

சென்னையோடு எருமைகளை தியானித்த

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கண்கொண்டு

இறந்த அந்த எருமையைப் பார்க்காமல்

நீங்கவே முடியவில்லை.

0

அலைகளின் பின்னணியில்

புகைப்படப்பிடிப்புக்காக

வந்திருந்த பெயர் அறியவே முடியாத

யுவதி

நீ…….ண்….ட கொசுவங்கள் கொண்ட

ஆரஞ்சுப் பாவாடையை

தோகையாய் விரித்து உயர்த்தி

கடலை ஒருகணம்

ஆரஞ்சாய் காட்டினாள்.

மூளையில் படரந்த ஆரஞ்சு நிறத்தின்

முன்னால்

நான் அந்த எருமையாகி

அங்கேயே

மரித்துக்

கிடந்தேன்.

0

காகங்களே

காகங்களே

பசிகொண்டு

என்னைக் கொத்திப்போய்விடுங்களேன்.

000

மந்தையிலிருந்து விலகி

உணவே கிடைக்காத

மரணப்பாழ் பனிவெளிக்குள்

சட்டென்று முடிவெடுத்ததுபோல

திரும்பி நடந்து தனீயாக

மறைந்துபோன

அந்த அண்டார்டிக் பெங்குயினுக்கு

காந்தி

என்று பெயரிட்டால்

என்ன?

0

நீரிழிவுக்காக அடிக்கடி

மாத்திரை வாங்கும்

அப்பலோ மருந்தகத்தில்

பணியாற்றுபவளிடம்

தொடரும்

உரையாடல் முயற்சியாய்

காலை உணவு எப்போதென்று கேட்டேன்

காலை உணவு சாப்பிடுவதில்லையென்று

தலையை ஆட்டினாள்.

காரணம் கேட்டேன்.

லிப்ஸ்டிக் பூசிய

சிப்பி உதடுகளைத் திறக்காமல்

சொல்லமறுத்து

வெறுமனே சிரித்து 

கதவை

அன்றைக்கும் சாத்திவிட்டாள்.

அழகே

அழகே

எனக்கு மட்டும் ஏன்

இப்படி வேளாவேளைக்குப் பசிக்கிறது?


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments