Skip to main content

சாதாரணர் சதுக்கங்கள்

இந்த பூமியில் மனிதவாழ்க்கை என்பது ஆன்மீகரீதியாக கருப்பருவத்திலேயே உள்ளது. எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை. மனிதன் இந்த கிரகத்தைவிட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். நமது ஆன்மாதான் மெய்யான உடல். உடல் என்பது வெறுமனே துணிகள்தான்
முகமது அப்சல் குரு

விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் நடந்த மாற்றங்களை ஐதராபாத் மற்றும் சென்னை என்ற இருபெருநகர்களைக் கதைக்களமாக வைத்து தனது  கதைகளை எழுதியவர் அசோகமித்திரன்.  பல கலாசாரப் பண்புகளை உட்கொண்ட பெருநகரத்து((காஸ்மாபொலிட்டன்)  தமிழ் எழுத்தாளர் அவர்.

புராணிக மொழியும்,கவித்துவமும், சமத்காரமும், வாய்மொழி மரபின் அம்சங்களும் கொண்ட தமிழ் சிறுகதைப் போக்கிலிருந்து விலகி எளிய, சாரமற்றது போன்று தோன்றக்கூடிய உரைநடையில் எழுதியவர் . அவரது கதைகளைக் கொஞ்சம் நுட்பமாக படிப்பவர்கள், அந்த எளிமை ஒரு தோற்றம்தான் என்பதை உணர்வார்கள். ஒரு கதையின் ஒட்டுமொத்தத் திறப்பும் அவரது குறுகத் தரித்த வாக்கியம் ஒன்றில் நிலக்கண்ணி வெடி போல புதைந்திருக்கும். கூர்மையான அவதானிப்புகள், எள்ளல், விமர்சனம் ஆகியவைகளை மௌனமாக கதைகளுக்குள் சிறு தானியங்களாகத் தெளிப்பவர் அசோகமித்திரன். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏழு நாவல்கள், சினிமா, விமர்சனக்கட்டுரைகள், எழுத்தாளர் அறிமுகங்கள், அஞ்சலிக்குறிப்புகள் என மிக விரிந்து பரந்த உலகம் அவருடையது. ஆனால் இன்னும் அவரது சிறுகதையும் கட்டுரையும் கூர்மையையும் புதுமையையும் இழக்கவில்லை. எந்த அலுப்பும் வருவது இல்லை. ஒரு நல்ல கட்டுரை என்றால் அது சிறுகதையின் படைப்பமைதியுடன் இருக்கவேண்டும் என்று சில ஆசிரியர்கள் சில நூல்கள் புத்தகத்தில் அசோகமித்திரனே சொல்லியிருப்பார். ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளில் சின்னச்சின்னத் தகவல்களாக சாதாரணமாக வரையத்தொடங்கி சில எளியதீற்றல்களால் அவர்கள் குணாம்சத்தை நிலைநிறுத்தி கடைசி பத்தியில் அந்த நபரின் ஒட்டுமொத்த ஆளுமையையும் விஷம்போலக் கடைந்தெடுத்து தனது 'பார்வைக்கோணம்' என்ற கூர்மையான கத்தியின் நுனியில் தோய்த்து நமது மூளையில் செருகி விடுவார். அந்த உச்சகட்ட போதைக்காக அவர் நம்மைத் தொடர்ந்து காத்திருக்கச் செய்கிறார். 20 ஆம் நூற்றாண்டில் மேற்கில் ஹெமிங்வே போன்றோர் வளர்த்தெடுத்த சிறுகதைத் தொழில்நுட்பத்தின் தேர்ந்த மாணவர் அசோகமித்திரன். இந்தப் பண்பு அவரது கட்டுரைகளையும் அழகுசெய்கிறது. ஒற்றன் நாவலின் அனைத்து அத்தியாயங்களையும் தனித்தனியான முழுமை கொண்ட சிறுகதைகளாகவே திட்டமிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். 

மாற்றங்களின் ஒற்றன்:

தமிழின் சிறந்த மர்மக்கதைகளை எழுதியவராக நாம் அசோகமித்திரனைத் தான் சொல்லவேண்டும். ஒற்றனின் இயல்புள்ளவன்தான் மர்மக்கதைகளை சிறப்பாக எழுதமுடியும். அசோகமித்திரன், ஒரு யுகசந்தியில் நடந்த சமூகவியல், கலாசார, பழக்கவழக்க மாற்றங்களின் ஒற்றன். 20 ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் விடுலை பெறுகின்றன. ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பிரக்ஞைகள் உருவாகின்றன. இனம் சார்ந்து, தேசம் சார்ந்து, கலாச்சாரம் சார்ந்து மனிதன் மற்ற மனிதர்களிடம் கொண்டிருக்கும் பகைமைகளும் வன்மங்களும் நூற்றாண்டு காலம்  வேரோடியிருப்பவை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை  அந்தப் பகைமையை வெளிப்படையாகப் பராமரிக்க முடிந்த மனிதர்களுக்கு 20 ஆம் நூற்றாண்டு பெரிய சவாலை விடுக்கிறது.  அந்த பகைமைகளை சாதாரணமாக வெளிப்படுத்த இயலாத வண்ணம் தட்டிப்பறித்து விடுகிறது. இதனால் அவன் வெளிப்படையாக கோபங்களை வெளிப்படுத்த முடியாதவனாகிறான். ஒரு காலத்தில் போருக்கு உபயோகப்பட்டிருந்த அம்புகள் வெறுமனே வழிகாட்டும், சமிக்ஞை விளக்குகளின் அடையாளங்களாகி விடுகின்றன. மரணதண்டனையின் அடையாளமாக இருந்த சிலுவை கிறிஸ்துவுக்குப் பிறகு வேறு அர்த்தத்தைப் பெற்றுவிட்டது போல... ஆனால் விடுதலை, சமத்துவம், ஜனநாயகம் என்ற பேரொளியில் பகைமைகள், வன்மங்கள் தங்களை மறைத்துக்கொள்ள வேறு உடைகள், அணிகலன்கள், ஆயுதங்கள் பூண்டதே தவிர அவை குணப்படவில்லை. அம்புகள், குடும்பங்களில் ஆரம்பித்து நாம் உருவாக்கிய அமைப்புகள் சகலவற்றின் உடலுக்குள்ளும் திரும்பி உறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. அவை ரத்தம் வெளித்தெரியாத கோடிப் போர்களுக்கும் கோடிக் கிளர்ச்சிகளுக்கும் காரணமாகின்றன. இந்த யுத்தகளத்தில் நின்று அந்த ஆழமான மௌனத்துயரங்களுக்கு தனது படைப்புகளில் சலிக்காமல் தொடர்ந்து செவிகொடுத்தவர் அசோகமித்திரன்.   
அதனால் அவரது கதைகளை சாதாரணர் சதுக்கங்கள் என்று நாம் அழைக்கலாம்.

லட்சியங்கள் எதையும் உறுதியாகப் பராமரிக்கமுடியாத, ஆனால் சகலவற்றிற்கும் குற்றவுணர்ச்சியை உணரக்கூடிய,  எதற்கு வாழ்கிறோம் என்ற நிச்சயமில்லாத, ஆனால் ‘தீவிரமாக’ அன்றாடத்தையும் வாழ்வையும் நிர்வகிக்க வேண்டிய அவசியமுள்ள நடுத்தரவர்க்கம் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் சாதாரணர்கள் ஒரு திரளாக உருவான நூற்றாண்டு 20 ஆம் நூற்றாண்டு. அலுவலகத்துக்குப் போய் குறிப்பிட்ட நேரத்துக்குள் இருந்து வேலைவிட்டு வீடு திரும்புவது என்பதே 20 ஆம் நூற்றாண்டின் புதிய நடைமுறைதான். வெளியிலிருந்து பார்த்தால் அல்பமாகத் தோன்றும் சாதாரணர்களின் பிரச்னைகள், சிக்கல்கள், முடிச்சுகள்,மௌனங்கள், விடுபடுதல்களை அசோகமித்திரன் போல தமிழில் யாருமே கதையாக்கியதில்லை. வெளிச்சம் இல்லாத எளிமையான ஒண்டிக்குடித்தன வீடுகளில் கனவுக்கும், நிதர்சனத்துக்கும் இடையே புழுங்கிப் போன சாதாரண ஆண்கள், பெண்களின் சுகதுக்கங்களை கருப்பு, வெள்ளைக் கோட்டுச்சித்திரங்களாக அடர்த்தியாகத் தீட்டியவர் அசோகமித்திரன். லௌகீகப் பற்றாக்குறை தொடங்கி மதம், கலாசாரம் அனைத்தாலும் சிறைப்படுத்தப்பட்ட இவர்கள் அசோகமித்திரனின் உச்சபட்ச பரிவுக்குள்ளானவர்கள். இவர்களுக்கு வரலாற்றுப் பெருமிதமும், கலாச்சாரப் பெருமிதமும் ஆடம்பரங்கள். ஆம் அசோகமித்திரனுக்கும் தான். நடைமுறைரீதியான சின்னச்சின்ன நீக்குபோக்குகள் தான் அவர்களது கேடயங்கள்.  

அசோகமித்திரனின் கதைகளை ஒன்றாகச் சேர்ந்து பார்க்கும் போது பரிதாபமாக தோற்றமளிக்கக் கூடிய முகமூடிகள் கண்முன் தோன்றுகின்றன. தேமே என்று வாழ்வை நோக்கும் ஒரு முகமூடி. ஐயோ என்று சொல்லும் ஒரு முகமூடி. இப்படியெல்லாமா இருக்கிறது இந்த உலகம் என்று சொல்லும் ஒரு முகமூடி..நாம் இங்கு வந்திருக்க வேண்டாமே என்று பரிதவிக்கும் முகமூடி... இத்தனை சிரமமா என்று இரண்டு காதுகளிலும் கைவைக்கும் தோற்றத்தில் ஒரு முகமூடி... பெரும் கலவரத்தில் குழந்தைகளை சிறகில் அணைத்து ஓடும் முகமூடி... என்று பல்வேறு முகமூடிகளை அவர் கதைகள் காட்சித்தொடராகத் தருகின்றன. அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கென்று பிரத்யேக முகமூடிகள் அரங்கைத் தயார் செய்தால் அது சீனப்பெருஞ்சுவர் அளவு நீண்டதாக இருக்கும். புல்லாக, பூடாக, புழுவாக, மரமாகப், பறவையாக,பாம்பாக, கல்லாக, மனிதராக, பேயாக, கணங்களாக, வல்லசுரராக,முனிவராக, தேவராக எல்லா குணரூப மனிதர்களும் அவரது படைப்புகளில் இடம்பெறுகின்றனர். குறிப்பாக உணவு, உறைவிடம்,இணை, உறக்கம் என்ற எளிய விருப்பங்களுக்காக அல்லாடும் சின்னஞ்சிறு 'மனிதர்களை' அவரளவு பரிவோடு தொடர்ந்தவர்கள் தமிழில் யாரும் இல்லை. அவரைப்பொறுத்தவரையில் பொருள் அழிவற்றது என்ற அறிவியல் கோட்பாட்டைப் போலவே ஆன்மாவும் அதன் உயிராசையும் அழிவேயற்றது. ஆன்மா அழிவற்றது என்பதை 20 ஆம் நூற்றாண்டில் சொல்ல நேரும் ஒருவனுக்கு நிச்சயமாக தனக்குள்ளேயே ஒருவித நிராசையும் கசப்பும் புன்னகையும் வரவே செய்யும். அதுதான் அசோகமித்திரனின் கதைகளின் நிரந்தர அடையாளமும் கூட. தனக்குள்ளேயே சுருங்கியவன், பிராந்திய, சாதி, மத, மொழி அடையாளங்களுக்குள் சிலந்தி போன்று வலைபின்னுபவன் ஒருபோதும் ஒற்றன் ஆகச் சாத்தியமில்லை.

ஒற்றன் தேசம் கடப்பவன். இனம் கடப்பவன். ஒரு கட்டத்தில் தன்னையும் கடந்து பிறனாகக் கரைபவன். பெருநகரத்து ஒளியையும் இருட்டையும் உணவாக உண்டு செரிப்பவன். ஒரு கட்டத்தில் தன்னையே இழைத்து ஒரு வெறும் சாயையாக பெருங்கூட்டத்தில் கரைபவன். எனவே தான் அசோகமித்திரனை நான் ஒற்றன் என்கிறேன்.

'அழிவற்றது'

அசோகமித்திரனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான அழிவற்றது தொகுப்பு அவரது மற்றைய தொகுப்புகளை விட நீதித்தன்மை கொண்டது. தமிழில் மரபாக நீதி என்பது செய்தி என்றே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அதே அர்த்தத்தில் தான் 'நீதி' என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். 'அழிவற்றது' கதைத்தொகுப்பில் முதலில் கர்ணபரம்பரைக் கதை என்று தலைப்பிடப்பட்டு  மூன்று கதைகள் இடம்பெறுகின்றன. அதை நீதிக்கதைகள் என்று துல்லியமாகச் சுட்டமுடியும். ஒரு எழுத்தாளன் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தபிறகும் அவனுக்குத் தீரவில்லை என்ற இடத்தில் ஒரு முரண்நகையாக இந்த நீதிக்கதைகளை எழுதிப்பார்க்கிறான். விதி மனிதனைச் சிறைபிடிக்கிறது. இதன்வழியாகவே விதியை, விதியை உருவாக்குபவனை மனிதன் சிறைப்பிடிக்கிறான். ஒருவகையில் மனிதனை உருவாக்கிய கடவுளையே சிறைபிடிக்கும் விளையாட்டை இந்தக் கதைகள் மூலம் அசோகமித்திரன் புரிகிறார். இத்தொகுப்பில் உள்ள அவரவர் தலையெழுத்து, பழங்கணக்கு, முக்தி, திருநீலகண்டர் கதைகளை அசோகமித்திரனது உலகநோக்கு குறித்து ஒரு சத்தமான அறிவிக்கை என்றே சொல்லவிடமுடியும்.

அசோகமித்திரனின் சிறந்த பத்துகதைகளைத் தொகுத்தால் அதில் அழிவற்றது சிறுகதையும் நிச்சயம் இடம்பிடிக்கும். ஒற்றன் நாவலின் நீட்சியாகவே இக்கதையும் இருக்கிறது. யாரும் யாரையும் கவனிக்காத, மற்றவரை அப்படி கூர்ந்து கவனித்தால் நாகரிகமற்றது என்று எண்ணும் அமெரிக்காவில் நடக்கும் கதை அது. யாருடனும் பேசாமல் யாரையும் பார்க்காத கோணத்தில் தெருவோர நாற்காலியில் தினசரி உட்கார்ந்திருக்கும் ஒருவரை கதைசொல்லி பார்க்கிறார். எழுத்தாளன் என்று தெரிகிறது. மேலே வேறு தகவல்கள் எதுவும் அந்த நபரிடமிருந்து கதைசொல்லியால் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரின் நூலகத்துக்குப் போய் கேட்கிறார். ஒருகட்டத்தில் இலக்கிய எழுத்தாளராகத்தான் அந்த எக்ஸ் இருப்பார் என்று முடிவுக்கு வருகிறார். ஒரு நாள் அந்த எக்ஸ் இருக்கும் இடத்தைப் பார்த்தபோது அவன் அங்கே இல்லை. அவன் போட்டிருந்த கம்பளிக் கோட்டு, பழைய உடைகள் விற்கும் கடையில் சுத்தம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கதைசொல்லி பார்க்கிறான்.

கடைப்பெண் பொருள் அழிவற்றது என்று சொல்கிறார். இந்த மனிதர் பொருளில்லையோ என்று கதைசொல்லி கேட்க அந்தப் பெண் உதட்டைப் பிதுக்குகிறாள். மனிதர் பொருளில்லையா? என்று கதைசொல்லிக் கேட்டிருந்தால் அதில் ஒரு 'உறுதிப்பாடு' தொனித்திருக்கும். 1500 வார்த்தைகள் கிட்டத்தட்ட இருக்கும் இக்கதையில் வாழ்வின் அர்த்தமின்மையும் நிச்சயமின்மையும் ததும்பும் கணத்தை இக்கதையின் முடிவில் அப்படி உறையவைக்கிறார் அசோகமித்திரன். அதே சமயத்தில் அந்த எக்சின் கம்பளிக் கோட்டு பொருள் அழிவற்றது என்று சொல்லியபடி ஆடிக்கொண்டே இருக்கிறது.

அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதையும் அப்படிப்பட்டதே. புலிவேஷம் போடும் காதர் என்ற துணைநடிகர், வாய்ப்பு கேட்டு ஸ்டுடியோவுக்கு வருகிறார். இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று நிர்வாகி சொல்லியபிறகும் தனது திறனைக் காண்பிக்க காதர் கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து புலித்தலையை எடுத்து அந்த ஸ்டுடியோவின் பெரிய அறைக்குள்    புலியாக, நிஜப்புலியாக பாய்ந்து குதித்து அவதாரம் எடுக்கிறான். அந்தச் சிறுகதையில் காதரின் பசிதான் அவனை அந்த சாகசத்திற்கு தூண்டுகிறது. ஆனால் பசியிலிருந்து  வேஷப்புலியாக எழும்பும் காதருக்கு, பாய்ந்து புலியாகவே சொரூபம் காட்டும் அந்த உக்கிரசக்தியை  பொருள்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இந்த உலகத்தால் மட்டும்  ஒருபோதும் மனிதனுக்கு வழங்கவே முடியாது. அந்த உக்கிரம்தான், அந்த வேட்கைதான், அந்த தளராத உயிராசையைத்தான் அழிவற்றது என்று கதைகள் வழியாக புத்தம்புதிதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் அசோகமித்திரன்.  ஒருவகையில் தன் கதைகள் மூலம் தன் சின்னஞ்சிறு பௌதீக உடலிலிருந்து அந்தரத்தில் பாய்ந்து புலியின் சொரூபத்தை தமிழ்ப் புனைவுவெளியில் காட்டிய கலைஞன் அசோகமித்திரன்.

புலிக்கலைஞன் கதையில் வரும் புலிமுகமூடி, நான் மேற்சொன்ன பரிதாபமான முகமூடிகளில் ஒன்று அல்ல.

(காலம், டிசம்பர் 2011 (அசோகமித்திரன் சிறப்பிதழ்) இதழில் வெளியான கட்டுரை)

Comments

Unknown said…
ungalin mozhi miga azhagu...