Skip to main content

ஆர்.சூடாமணியின் நவீன நீதிக்கதைகள்


சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை ஆண்டுவாரியான வரிசையில் படித்துப் பார்க்கும்போதுஇந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் நமது சமூகம் மெதுமெதுவாக நவீனமயமதாலுக்கு உட்பட்டு பழைய மரபுகள் அசமந்தமாக விடைபெறுவதைப் படிப்படியாகக் காணமுடிகிறதுவீடுகளுக்கும் தெருக்களுக்கும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடல்கள் என அக்கதைகளை எளிதாகச் சொல்ல முடியும்இந்த உரையாடல்களில் மனிதர்கள் மற்றவர்களின் இருப்புக்கு நெகிழ்கிறார்கள்இவர் கதைகள் பெரும்பாலும் நடுத்தரகீழ்நடுத்தர வாழ்க்கைப் பின்னணியிலிருந்து எழுதப்பட்டவைமிகவும் சன்னமான சம்பிரதாயக் கோட்டை தாண்டவே முடியாதவைஆனால் அசட்டுலட்சியங்கள் பேசாத அறவலுகொண்ட நவீன நீதிக்கதைகள் அவை

நவீன கல்விபுதிய வாய்ப்புகள்வசதிகள்செய்திப்பரவல் அனைத்தும் பரவலாக உருவாகத் தொடங்கும் நவீனத்துவ காலத்தைச் சேர்ந்தவை சூடாமணி கதைகள்வசதிகளும் உணவு உள்ளிட்ட வளங்களும் நாம் இன்று துய்ப்பதுபோல உபரியாக இல்லாத காலநிலை அது.உணவுகள் பற்றாக்குறையாக இருந்த பாத்திரங்களின் மிச்ச இடத்தைபுதிய மதிப்பீடுகளும் புதிய உலகக் கனவுகளும் நிறைத்திருப்பதை உணரமுடிகிறது.

முதல் தலைமுறையாகப் பெண்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் பரவலாகச் செல்லத் தொடங்குகிறார்கள்பொதுசமூக வெளிகள் உருவாகின்றன. அங்கே தொடங்கும் உரையாடல்கள் வீட்டிலும் குடும்பங்களுக்குள்ளும் எதிரொலிக்கின்றனஅம்மாமகள்...அக்காதங்கை....குடும்பச்சுமையைச் சுமக்க நேர்ந்துவிட்டதாக கவலைப்படும் மகன்,தோட்டக்காரர்வீட்டு உரிமையாளர்,மருத்துவர்குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லாத கணவர்மகளின் துய்ப்புக்கு வழிவிடும் தகப்பன்குழந்தைகள் என வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகள் உரையாடல்கள் வழியாக வழியாகப் பரிமாறப்பட்டுஒரு நவீன சமூகம் இக்கதைகளின் வழியாக உருக்கொள்ளும் கோலத்தைப் பார்ப்பது அலாதியானதாக உள்ளதுமனிதர்கள் ஒவ்வொருவருமே தனிஇயல்புடையவர்கள்தனிமையானவர்கள்நெருக்கமாகப் பழகினாலும் புரியாத பிரதேசங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பவர்கள் என்ற புரிதல் சூடாமணியின் நான்காம் ஆசிரமம் போன்ற கதைகளில் மிக அழகாக வெளிப்படுகிறதுசமூக வாழ்வில் அதே மனிதர்கள் உறவுகளுக்கு அனுசரணையாகவும்மற்றவர்களைக் கூடுமானவரை ஊறுபடுத்தாதவராகவும்சமூக வாழ்வின் தொடர்ச்சி அறுபடாமல் இருப்பதற்கான நியாயங்களையும் பராமரித்தாக வேண்டிய நெருக்கடிகளையும் இவர் கதைகள் பேசுகின்றனதான் தனியானவன்தான் பொது வாழ்க்கையின் நியமங்களுக்கு உட்பட்டவன் என்ற இரண்டு நிலைகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சும் சமரசங்களும் நெகிழ்ச்சியும் உருமாற்றங்களும் தான் இவரது கதைகளின் அடிப்படை.

ஜெயகாந்தனின் அக்னிப்ரவேசம் போன்ற கதைகள் தீவிர இலக்கிய வாசகர்களுக்கு இன்றைய பின்னணியில் அசட்டுத்தனமான கதையாகக்கூடத் தோன்றலாம்ஆனால் ஆனந்த விகடன் போன்ற வெகுஜனப் பத்திரிக்கையில் வெளிவந்து அக்கதை வாசக சமூகத்தில்பொதுஇடத்தில் பேசத்தயங்கும் கற்பு பற்றிய பெரும் உரையாடலை உருவாக்கியது இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததுசூடாமணியின் கதைகளைப் படிக்கும்போதும் அது அன்றைய கால தமிழ் சமூகப்பரப்பில் நடைபெற்ற உரையாடல்களைப் பிரதிபலித்தபடியும்அவை உருவாவதற்கு துணைசெய்தபடியேயும் சென்றிருப்பதைப் பார்க்க முடிகிறதுஒரு காலத்தில் விலக்கப்பட்டவைகளாகதடைகளாகப் பார்க்கப்பட்ட உறவுகள்நடைமுறைகளைசகஜப்படுத்துவதில், சமூகம் போட்டிருக்கும் புனித முடிச்சுகளைக் களைவதில் ஜெயகாந்தன்,சூடாமணி போன்ற கலைஞர்களின் கலையும், ஒரு சமூகம் ஆரோக்கியம் பெறுவதற்கு நல்லுணவுகளாக ஆகியிருக்கின்றன.


சூடாமணியின் கதைகளில் குடும்பம் என்னும் அமைப்பின் அதிகபட்ச ஒடுக்குதலுக்கும்பாரபட்சத்துக்கும்புறக்கணிப்புக்கும் உள்ளாகும் பெண்களின் வலிகள் பெருமூச்சுகளாக,வேதனையின் கண்ணீர்துளிகளாக வெளிப்படுகின்றனஆனால் அந்த ஒடுக்குதலை நிகழ்த்தும் ஆண்கள் அவர் கதைகளில் தனியே குற்றவாளிகளாக்கப்படுவதில்லைகுடும்பம்மரபு,சம்பிரதாயங்களின் பொறிகளில் மாட்டிக்கொண்ட இரங்கத்தக்க தன்னிலைகளாகவே அவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர்சூடாமணி என்ற ஆளுமையின் விகாசம் அது.

ஆர்சூடாமணி என்ற எழுத்தாளரை நான் இந்தியா டுடே இலக்கிய மலர் வழியாகவே தெரிந்துகொண்டேன்நவீன இலக்கியத்திற்கு அறிமுகமான ஒரு வாசகனாக ஆரம்ப காலகட்டத்தில் அசோகமித்திரன்வண்ணநிலவன் ஆகியோர் வரிசையில் என்னை ஈர்த்த சிக்கலற்ற எழுத்தாளராக ஆர்.சூடாமணி இருந்தார்பாலகுமாரன் நாவல்களிலிருந்து விடுபட்ட தருணம் அதுகாமம் கலந்து யதார்த்தம் போன்ற தோற்றமுள்ள மிட்டாய் தன்மையுள்ள புனைவுலகிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தேன்வாழ்க்கை அத்தனை வண்ணமயமானது அல்ல என்று தோன்றத் தொடங்கியிருந்ததுவாழ்க்கையில் வெற்றி அடைவதுதிறன்களை வளர்த்துக்கொள்வது போன்றவை தொடர்பான பொதுக்கருத்திலிருந்து விலகியிருந்தேன்ஆனால் அவை அனைத்தும் குழப்பமான உணர்வுகளாய் விடைதெரியாத கேள்விகளால் என்னை அலைக்கழித்திருந்த நேரம் அதுஅப்போதுதான் இவர்களைப் படிக்க ஆரம்பித்திருந்தேன்என் சிறுவயதில் எனது அம்மா சொல்லியிருந்த நீதிக்கதைகளும் என்னை அப்போது முழுமையாகத் தோற்கடித்திருந்தன.

ஆனால் நீதிக்கதைகள் இல்லாமல் என்னால் எப்போதும் வாழமுடியாதுஅசோகமித்திரன்,சூடாமணிவண்ணநிலவன் கதைகளில் நவீன வாழ்க்கையின் சிக்கல்களுடனேயே வெளிப்படும் வாழ்க்கை சார்ந்த பற்றுதலுணர்வில் நான் கவர்ந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறதுகிராமத்திலிருந்தும்பாரம்பரியத் தொழில்களிலிருந்தும் அப்புறப்படுத்திக் கொண்டு சிறுநகரில் விசாலமான அனுபவங்கள் இன்றி வாழும் பெற்றொரின் பிள்ளையாக வளரநேர்ந்த ஒருவனுக்கு நேரும் பொது அனுபவம்தான் இது.

இப்படியாகத்தான் சூடாமணியை இந்தியா டுடேயில் ஐந்து வருடங்களாகத் தொடர்ந்தேன்ஆறு ஏழு கதைகள் படித்திருப்பேன்கடைசியாகப் படித்த கதையின் தலைப்பு ஞாபகத்தில் இல்லைகடல் காற்று வாங்க காரில் தனியாக வந்திருக்கும் முதியவளுக்கும்ஒரு குட்டித்திருடனுக்கும் இடையே உருவாகும் தருணம் பற்றிய கதை அதுஅந்தக் கதை இத்தொகுப்பில் இல்லைஎனக்கு மிகவும் விருப்பமான கதை அதுஅந்த குட்டித்திருடன் மேல் அந்த முதியவள் கொள்ளும் அச்சத்திலிருந்து தொடங்கி இருவருமே ஒருவரை ஒருவர் அன்புகொள்ளும் தருணத்தோடு முடியும்.

அதேபோல இந்தியா டுடேயில் வந்த அவன் அடிக்கடி வருகிறான் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுஇன்னமும் நவீனமாக நான் உணரும் கதை அதுவயது மூத்த பெண்ணுடன் இளைஞர்களுக்கு இருக்கும் பிரேமை பற்றிய கதை அதுஅக்கதை இத்தொகுப்பில் உள்ளதுதொகுப்பின் தலைப்புக் கதையான நாகலிங்க மரம் கதை வெளியில் ஒரு பெண் பார்க்கும் படலத்தையும் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பதன் சுமையையும் பேசுகிறதுஆனால் நாகலிங்க மரத்துடன் பேசும் பிருந்தாவின் மூலம் சூடாமணி பெண் என்ற உயிர் இயல்பை அழகாக நெருங்குகிறார்நான்காம் ஆசிரமம் கதையிலும் ஒரு உயிர்பருவ வயதில் இன்னொரு உயிர்மீது கொள்ளும் காதல்தன் உயிர்மீதான நாட்டம்தான் என்று ஒரு சொற்றொடர் வரும்அதைப் படித்தவுடன் எத்தனை அழகான கண்டுபிடிப்பு என அப்போதைய தருணத்தை உறையவைத்து விடுகிறதுதி.ஜானகிராமன் கதைகளில் வரும் மிக அழகிய உரையாடல்களைப் போல சூடாமணி கதைகளிலும் அறிவார்த்தம் வெளித்தெரியாத இயல்பான உரையாடல்கள் இருக்கும்ஒருவகையில் அவரின் கதைகள் உரையாடல்கள் வழியாகவே நகர்த்தப்பட்டிருக்கின்றன.

2000 ஆம் வருடத்தில் குமுதம் தீராநதி இணையத்தளத்தை ஆரம்பித்தபோது நானும் தளவாயும் சேர்ந்து சூடாமணி அவர்களை நேர்காணல் செய்வதற்கு முயன்றோம்நான் அவர்களுக்குத் தொலைபேசியில் பேசியதாக மங்கலான நினைவு உள்ளதுசூடாமணிவேண்டாம் என்று மறுத்தார்.

முழுக்க முழுக்க தனிமையானஎளிய மனிதர்களுக்குக் கிடைக்கும் எளிய சந்தோஷங்களைக் கூட அனுபவிக்காமல் தனியாக இருந்த சூடாமணி கதைகள் வழியாகவே அறிந்தும் அளந்தும்,அனுபவித்தும் இந்த உலகத்தை அவர் ருசி பார்த்திருக்க வேண்டும்ஆனால் அவர் கதையின் உலகில் எங்குமே வாழ்க்கை குறித்த புகார் இல்லைமனித வீழ்ச்சி இல்லைஇந்த இயல்பு மிகவும் அபூர்வமானது.

சூடாமணி கதைகள் குறித்துப்பேசும் பின்னணியில் நாம் மிகச்சமீபமாகவே கடந்திருக்கும் காலகட்டம் குறித்துப் பேசுவது அவசியம்ஏனெனில் நவீனகல்விஜனநாயகப் பரவல்வளர்ச்சி ஆகியவற்றின் உபரிநிலையில் இருக்கிறோம்நவீன விஞ்ஞானம் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாகியுள்ளது ஆனால் சூடாமணி போன்றோர் செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் வேறு வேறு தரப்புகளுக்கு இடையிலான உரையாடல் என்பது தற்போது மௌனமாகி விட்டதாகவே நான் நினைக்கிறேன்இன்று ஒவ்வொரு தரப்புமே அடையாளங்களாக தத்தமது நிலைப்பாடுகளுடன் தர்க்கங்களுடன் சொந்தமான வெளிகளை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டனஆனால் அவை எல்லாமே தன்உரையாடலாகவே தான் தோற்றமளிக்கிறது.

ஒரு அடையாளம் மற்றொன்றை சந்தேகமாகவே பார்க்கிறதுஅடையாளங்கள் சார்ந்து உருவாகியிருக்கும் அரசியல்களைஅதற்குப் பின்னணியாக வரலாற்று காலமாக இருந்த துயரங்களுக்கு முடிவுகளும்நிம்மதியும் வந்திருப்பதை இக்கட்டுரை கேள்விக்குட்படுத்தவுமில்லைபாதகமாகவும் அணுகவில்லைஆனால் இன்று உருவாகியிருகுகம் தனித்தனி அடையாளங்களுக்கிடையே சகிப்புத்தன்மையுடனும் படைப்பூக்கத்துடனும் கூடிய வெறுப்பற்ற உரையாடலை நாம் உருவாக்க முடிந்துள்ளதாஅடையாளங்கள் கரையும் இடங்களைஅறங்களை நாம் உருவாக்க முயற்சிக்கிறோமா?

சூடாமணியின் கதைகள் சார்ந்துஅவரது காலம் சார்ந்துநாம் சேர்ந்து இப்போது பரிசீலிக்க வேண்டிய கேள்விகள் இவை.



(ஆர்.சூடாமணியின் நினைவை கௌரவிக்கும் வகையில் திலீப்குமார் தொகுத்த தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான நாகலிங்க மரம் நூலின் வெளியீட்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை இது)

Comments