நண்பர்களே வணக்கம்...இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர்களே வணக்கம் என்று
கூறுவது எப்படி ஐதீகமாக, பழக்கமாக மாறியுள்ளதோ இன்றைக்கு எழுத்தும் ஒரு பழக்கமாகி
விட்டது..வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து பற்றி எழுதப்பட இருக்கும் கட்டுரையை
நீங்கள் கூகுளில் படித்துவிடலாம்.
கவிதை பழக்கமாகி உள்ளது, சிறுகதை பழக்கமாகியுள்ளது, மேடைப் பேச்சு
பழக்கமாகியுள்ளது, நாவல் பழக்கமாக மாறியுள்ளது..தலையங்கங்கள் பழக்கமாக
மாறிவிட்டன...மதிப்புரைகளும், கட்டுரைகளும், இரங்கல் எழுத்துகளும்,பத்திகளும் பழக்கமாக
மாறியுள்ளன..
90 களுக்குப் பிறகு கிரானைட் கற்களுக்காக தமிழகத்தில் மலைகள் மறையத் தொடங்கிய
போதுதான் பெரிது பெரிதாக புத்தகங்களும்
வெளியாகத் தொடங்கின. இதை நாம் தனித்த நிகழ்வுகள் என்று கொள்ளமுடியுமா என்று
எனக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பை நாம் பார்க்கத் தவறிவிட்டதும்
ஒரு பழக்கத்தின் அடிப்படையில்தான்.
இந்தப் பழக்கம் உருவாக்கிய மௌடீகத்தில் தான் படைப்பு என்ற செயல்பாட்டின்
அடிப்படை லட்சணங்களில் ஒன்றான எதிர்ப்பு, தனிமைக்குணம், பசியுணர்ச்சி, விசாரணை
ஆகியவற்றை நாம் இழந்திருக்கிறோம். முரண்பாடுகள் இருப்பது போன்ற தோற்றம் சூழலில்
பேணப்படுகிறது. ஆனால் தனித்தனி ஆசைகள் தான் கும்பல் மனோபாவத்துடன் செயல்படுகிறது
இப்போது இங்கே.. அந்த தனித்தனி ஆசைகளின் வர்த்தகக் கண்காட்சிகளாக புத்தகச்
சந்தைகள் உள்ளன..
000
சமகால வாழ்க்கையை, கலை வடிவங்களை பற்றிய புரிதலுக்கு நாம் கடந்த நூற்றாண்டில்
பழகிய சிறுபத்திரிக்கை மொழி போதாது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கின்றன நடுநிலை
இதழ்கள். புதிய மொழியோ, புதிய எதிர்ப்புகளோ முளைக்கக் கூடாது என்பதற்காக பூமி மீது
பரப்பப்பட்ட பிளாஸ்டிக் புல்வெளிகள் தான் இப்போது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகள்.
இந்துத்துவம் முதல் மார்க்சியம், தமிழ் தேசியம் வரை கலந்து கட்டி உருவாக்கப்பட்ட
சூழலை உடனடியாக இறக்க வைக்கும் மரணக்குடுவைகள் சூழலாக மாறியுள்ளன. நவீனத்துவம் உருவாக்கிய மறைந்துபோகவோ சிதைக்கவோ இயலாத
அணுக்கழிவுகள் அவை.
000
தமிழ் எழுத்தாளன் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன? பகுத்தறிவு, விஞ்ஞானப்
பார்வை, மனிதாபிமானம் நம்பிக்கைகளின்
அடிப்படையில் உருவான நவீனத்துவ மொழியை அவன் இனியும் தொடர்ந்து கையாளமுடியாது. 90
களுக்குப் பிறகு வேகமாக மாறிவிட்ட உலகின், புதிய அமைப்புகளின் சிக்கலான கோலங்கள்
அவனிடம் பல புதிய துக்கங்களையும், சந்தோஷங்களையும், சிக்கல்களையும் அதே நேரத்தில்
வசதிகளையும் உருவாக்கியுள்ளன. அரசு அவனைக் கைவிட்டு விட்டது. விடுதலைக்கென நம்பி அவன்
தன்னை ஒப்புக்கொடுத்த அமைப்புகள் இன்றைக்கு அருங்காட்சியகங்களுக்குச் செல்லும்
நிலையில் வெறுமனே அடையாளங்களாக உள்ளன. உள்ளடக்கம் பொதுவான பாலிதீன் பைகளில்
அடைக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் கடைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் பிரதமர்
அலுவலகத்துக்கும் ஊடகத்துக்கும் இடையிலான எல்லைகள் மறைந்துவருகின்றன. படுக்கையறை
தவிர உடலுறவு எல்லா இடங்களிலும் நடக்கிறது- காஃப்காவின் விசாரணையில்
நீதிமன்றத்தின் அறைமூலையிலேயே நடப்பது போல. ஆனால் யார் முகத்திலும் புணர்ச்சிக்குப்
பின்னான களிப்பைப் பார்க்க முடியவில்லை. நகரின் வணிக வளாகச் சந்தைக் கட்டடத்தின்
மீது அனைவர் காமமும் காற்றாக அடைக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன் ஆடுகிறது. பலூனைவிட
நமது பாலுறுப்புகள் மிகச் சிறிது, மிகச்சிறிது என்று உலகுக்கு அறிவித்துவிடலாம்.
மொழி ஆகாத உணர்வுப் பிராந்தியத்தில் எழுத்தாளனின் உடலில் சமகாலம் எல்லா
வேதிவிளைவுகளையும் உருவாக்கியுள்ளது. அந்தப் பிராந்தியம் பற்றிய அறிதலும், அதை ஊறு
செய்ய அனுமதிக்கும் உடலையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். இது அவனுக்குச்
சாதகமானது என்று நான் கருதுகிறேன்.
அத்துடன் அவன் தன் மேல் பழக்கமாகப் படர்ந்துள்ள நவீனத்துவ மொழியை
விடுவிப்பதற்கு தன் மரபையும் பரிசீலிக்கும் நிர்ப்பந்தத்துக்கும் அவன்
தள்ளப்பட்டுள்ளான். மரபு என்பது பழம் பிரதிகள் மட்டும் அல்ல. மரபு ஒரு
குடியானவனின் வாழ்க்கை நோக்கிலும் இருக்கிறது. வெகுமக்கள் கலை வடிவங்களில் மரபின்
ஆழ்ந்த செல்வாக்கு உள்ளது.
நவீனத்துவக் கல்வியும், அதன் கருத்தியல் ஆதிக்கமும் நமது மரபை, 20 ஆம்
நூற்றாண்டுக்கு முன்பு நம் மண்ணில் நடந்த அறிவுச் செயல்பாடுகளை
நெருங்கமுடியாத அளவுக்கு ஒரு
இரும்புத்திரையைப் போட்டுவிட்டது. எழுத்தாளன் சமகாலப் புலியின் வேட்டைக்கு தனது
கால்களையும் மரபு என்னும் யாழிக்கு தனது தலையையும் கொடுக்க வேண்டியவனாக உள்ளான். கால்கள்
என்பதை பிரக்ஞைப்பூர்வமாகவே குறிப்பிடுகிறேன்.
அப்படியான ஒரு செயல்முறையில் ஈடுபடும்போதுதான் புதிய காரண காரிய அறிதல்கள்,
புதிய விழிப்புகளுக்கு நமது மொழி நகரும். அரசியல் சரித்தன்மையை நாம் முதலில்
பலிகொடுக்க வேண்டும். அன்றாட வாழ்க்கை குறித்த ஒவ்வாமை துறந்த ஈடுபடுதல் இன்றைய
எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு அவன் தன் பழக்கத்தில் பள்ளிகளில் கற்ற பகுத்தறிவை
உதறவேண்டும். சமகாலப் பறவை ஒன்றின் எறும்பு ஒன்றின் உள்ளுணர்வு மற்றும் தர்க்க
அமைப்பை அவன் பரிசீலிக்க வேண்டிய அவசியமுள்ளது. அங்கே ஆன்மீகமும் கவிதையும் வேறு
வேறாக இல்லை. ஆன்மீகமும் மருத்துவமும் வேறுவேறாக இல்லை. அறமும் அழகும் வேறுவேறாக
இல்லை. படைப்பூக்கத்தின் ஆதார இயல்பு புதிய கண்டுபிடிப்புகளில் இருக்கிறது. அப்படியான
செயல்பாடுகளும் போதமும் இங்கே உருவாவதற்கான சமிக்ஞைகள் தெரியாமல் இல்லை.
நவீனத்துவ சிறுபத்திரிக்கை அறிவு மற்றும் அரசியல் செயல்பாட்டுக்கு வெளியே
இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்து உருவாகியிருக்கும் மக்கள் போராட்டத்தை அதற்கு
உதாரணமாகச் சொல்வேன். மரபான வாழ்வாதாரம் மற்றும் நூற்றாண்டுகளாக சேகரித்து வைத்த
கல்வியை இன்னும் நம்பும் மீனவர் சமூகத்தின் சமையல்கட்டிலிருந்து சுயாதீனமான
இடுபொருட்களைக் கொண்டே அந்தப் போராட்டம் அரசால் உடைக்க முடியாத தார்மீக இயக்கமாக உருப்பெற்றுள்ளது.
நாள்தோறும் படைப்பூக்கத்தின் மாறும் அழகுகளுடன்
அந்தப் போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. அந்தப் போராட்டத்துக்குப் பின்னால்
போகும் நிலையில்தான் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் உள்ளனரே தவிர அந்தப் போராட்டத்தின்
உந்துவிசையாக அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்பது துரதிர்ஷ்டமானதே. இதுதான்
நவீனத்துவம் இங்கே அடைந்திருக்கும் தோல்வி. இதைத்தான் ஆதவண் தீட்சண்யா போன்றவர்கள்
இடிந்தகரைக்கு வேறு பாதைகளில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று எழுதுகிறார்கள்.
இதுபோன்ற உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து கூட்டங்கள் நடத்துவதோடு
தமது அகந்தைகளைக் களைந்து கற்றுக்கொள்ளவும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏராளம்
உள்ளது.
வெளி.ரங்கராஜனின் புத்தகத்தில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் நவீனத்துவப்
பழக்கத்தின் பார்வைகள் தான் உள்ளன. கலைஞர் கருணாநிதியைக் கடுமையாக
விமர்சிக்கிறார். ஆனால் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மீது அவருக்கு மரியாதையான
சாய்வு உள்ளது. இது நவீனத்துவம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் விளைவு.
கலைஞர் கருணாநிதியும், வெங்கட்சாமிநாதனும் ஒரு ஐதீகத்தின் இருமுனைகள் என்றே நான் கருதுகிறேன்.
இருவரும் நவீனத்துவக் குருடுகள். வெங்கட் சாமிநாதனின் விமர்சனரீதியான பங்களிப்பின்
அளவுக்கு கலைஞர் கருணாநிதியின் அரசியல்ரீதியான சமூக அளவிலான பங்களிப்பையும் நாம்
உணரமுடிந்தால்தான் நாம் பழக்கத்திலிருந்து
விடைபெற முடியும். இல்லையெனில் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் தமிழனின் எல்லா
அவலத்துக்கும் கருணாநிதியை மட்டும் குறைகூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பிரமீள் போன்றவர்களுக்கு முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் திராவிட இயக்கத்தின், தலைவர்களின் பங்களிப்பை மதிப்பிட முடிந்திருக்கிறது.
தீயாட்டம் என்ற கட்டுரை என்னை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது. ஈழம்
உள்ளிட்ட எந்த பெரிய நிகழ்வுகளிலும் சமூகத்தின் மேல்கட்டுமானத்திலிருந்து எந்த
தற்கொலைகளும் பெரும்பாலும் நடப்பதில்லை. தற்கொலையை ஒரு போராட்ட வடிவமாகப்
பார்ப்பதை நான் இங்கே விவாதிக்க வரவில்லை. ஒரு தற்கொலையின் மீது தற்கொலை செய்யாத
ஒருவரின் ஆழ்ந்த பதில் மௌனமாகவே இருக்க வேண்டும். அல்லது அந்த மௌனத்துக்கு நடுவே
ஒரு சடலம் இருக்கும் போதத்துடன் நாம் பேசத் தொடங்க வேண்டும். செங்கொடி தன் உடலைத்
தீயிட்டு மாய்த்துக் கொண்டதை மரபான நிகழ்வு வடிவங்களில் ஒன்றாக வெளி.ரங்கராஜன்
இன்னொருவர் சொன்ன கருத்தை அங்கீகரிக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை செங்கொடி தீயாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் செங்கொடிதான்
தனது போராட்டத்தை தீயாட்டம் என்று சொல்லவேண்டும். இல்லையெனில் தீயாட்டமா என்று
ஆராயும் ஒருவர் தீக்குளித்து அந்த முடிவுக்கு வரவேண்டும் என்றே எண்ணுகிறேன். மகாபாரதத்தின்
அரக்கு மாளிகை சம்பவம் முதல் இன்றைய நவீன அணைகள் மற்றும் புதிய மேம்பாட்டுத்
திட்டங்கள் வரை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் மட்டுமே ஏன் இந்த தீயாட்டத்திற்கு
தள்ளப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்துதான் இதை தீயாட்டம் என்று
வரையறுக்க வேண்டும்.
சமீபத்தில் என்னைச் சூழ்ந்த சில நெருக்கடிகளுக்குப் பரிகாரமாக ஒரு நண்பர்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் வரலாறைப் படிக்கச் சொன்னார். பாம்பன்
சுவாமி இயற்கை ஆராய்ச்சியும் செய்திருக்கிறார். பாம்பன் தீவில் கார்காலத்திலே
காணப்படும் கருங்குயில், புள்ளிக்குயில், பொன்மை, செம்மை நிறமுடைய பறவைகள்
மேல்திசையிலிருந்து வருகின்றன என்று பலரும் கூறுதலைக் கேட்டு அதனை நன்கு ஆய்ந்து
அப்பறவைகள் அத்தீவிலே தோன்றுவன என்று முடிவுகட்டுகிறார்.
காகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுகின்றது. அம்முட்டையைக் காகம்
அடைகாத்துக் குஞ்சானபின் விரட்டி விடுகின்றது என்ற கதையை நாம்
கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு பொதுப்புத்தியாகவும் திகழ்கிறது. பாம்பன் சுவாமி
அதை தொடர்ந்து ஆராய்கிறார். அதற்கு நாட்கணக்கில் தனது நேரத்தை செலவிடுகிறார்.
காக்கைக் கூட்டில் குயில் முட்டையைக் கண்டார் ஒருவரும் இல்லை என்பதனாலும் காகம்
தன் குஞ்சுகளுடன் குயில் குஞ்சைக் கூட்டிக்கொண்டு வந்து இரையூட்டி வளர்த்தலை
எவரும் கண்டதில்லையாதலாலும் புள்ளிக்குயில் காக்கை போலவும் இல்லையாதலினாலும்
அக்கொள்கை சரியன்று என்றும் பாம்பன் சுவாமிகள் கண்டுபிடித்தார். இதுபோன்ற ஒரு
கண்டுபிடிப்பிலிருந்து தான் அவர் ஒரு பொதுப்புத்தியை மீறுகிறார்.
இதுவும் ஒரு பகுத்தறிதல் முறைதான். இதில் இயற்கை அறிதல் மட்டும் அல்ல
கவிதையும் இருக்கிறது அல்லவா. நாம் படைப்பின் உடலாக மாறும்போது இயற்கையின்
உடலாகவும் மாறுகிறோம். அங்கிருந்து நமது புதிய மொழி பற்றி புதிய விழிப்பு தொடங்க
வேண்டும். நமக்கு அதற்கு முன்னாதரணங்களும் உள்ளன.
இன்று அதற்கான வெளிகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. ரங்கராஜனின் பெயரில் மட்டுமே
இப்போது வெளி உள்ளது. ஒரு அடையாளமாக எல்லாவற்றையும் போல....
நன்றி நண்பர்களே..
(வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து கட்டுரை நூலை முன்வைத்து சென்ற மாதம் டிஸ்கவரி புத்தகக்கடையில் பேசியது)
புகைப்படம்: சந்தோஷ்
Comments