ஷங்கர்ராமசுப்ரமணியன்
அந்தி தொடங்கிவிட்டது
மரங்கள் கிளைகள் இலைகள்
மரங்கள் கிளைகள் இலைகள்
பறவைகள்
இருள்கோடுகளாக
மாறிவருவதை
நிறைவுடனும்
நிறைவின்மையுடனும்
சேர்த்தே பார்க்க
முடிகிறது
இருட்டுக்குள் நுழைய
விரும்பாமல்
தீக்கொன்றை பூக்கள்
மட்டும்
செஞ்சிவப்பாக
அலறுகின்றன
குழந்தைகளாய் அவை
அடம்பிடிக்கின்றன
அந்தத் தீக்கொன்றைகளை
எனது காமமாக
நான் சூடிக்கொள்ளப் போகிறேன்.
0000
0000
அந்தியும் புலரியும்
எப்போதும் ஒன்றாகவே தெரிகின்றன
இரண்டையும் சந்திக்க
வைத்து
பொழுதுகளை மயக்கிக்
குழப்புவதில்
ஒரு அசாதாரண போதையும்
உண்டு
மரம் திடீரென்று
காகங்களாகச் சிதறி
மீண்டும் மரமாகும்
இரைச்சல்
இசையாக மாறத்தொடங்கும்
கணம்
நான் சிந்தும்
கண்ணீரை எப்படி
விளக்குவது?
Comments