Skip to main content

சேப்பாக்கம்


ஷங்கர்ராமசுப்ரமணியன்




ஏலம் போன
விளையாட்டு வீரன்
கைத்துண்டை இடுப்பில் செருகி
யாருக்கோ சமிக்ஞை செய்து
ஒரு இலகுபந்தை வீசுகிறான்
அதே மைதானத்தின்
வடக்கேயுள்ள
பட்டாபிராமன் வாசலுக்கு
எதிரே
தினமும் எவரோ
எதற்கோ
தற்காலிகப் பந்தல் நிழலில் நின்று
கோஷம் போட்டு
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
கூலி உயர்வு
மறுநியமனம்
இழப்பீடு கோரி
எங்கோ நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து
சிகப்பெழுத்துகளில் துண்டுப்பிரசுரங்களை

கடப்பவர்களிடம் கைநீட்டி
வினியோகம் செய்கிறார்
ஒருவர்
இருவர்
சிலர் விலகிச்செல்கிறார்கள்
காலையிலேயே
கடற்கரையில் சல்லாபம்
முடித்துத் திரும்பும்
வெளியூர் காதலர்கள்
துண்டுப்பிரசுரத்தை
கோர்த்த கைகளுக்குள் மடித்துக்கொண்டே
கோரிக்கைகளை என்ன செய்வதென்று தெரியாமல்
உப்பும் நீரும் மண்ணும் உதிராமல்
வேகமாகக்
கடக்கிறார்கள்
விளையாட்டு தொடர்கிறது
மினுமினுக்கும் துடைப்பங்களை ஆட்டி
தான் ஆடி தசையும் ஆட
உற்சாகமூட்டுகிறார்கள்
சியர் லீடர் பெண்கள்
ஆனாலும்
தொடர்ந்து
ஆடாமல் ஜெயிப்பவன்தான் மெய்யப்பன்


Comments