Skip to main content

யவனிகா ஸ்ரீராமின் தலைமறைவுக் காலம் - மனமே உடலாக



ஷங்கர்ராமசுப்ரமணியன்

யவனிகா ஸ்ரீராமின் முதல் தொகுப்பான ‘இரவு என்பது உறங்க அல்ல தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்த காலத்திலிருந்தே இவனது கவிதைகள் எங்கேயிருந்து தோற்றம் கொள்கின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. யவனிகா ஸ்ரீராமை சீரியசாக வாசிப்பவர்கள் எல்லாருக்கும் எழும் பொதுவினாவாகவும் இக்கேள்வி இருத்தல் கூடும். அதுதான் யவனிகா நவீன கவிதையில் உருவாக்கிய இடையீடு என்றும் கருதுகிறேன். 

யவனிகாவின் கவிதை போர்ஹே உருவாக்காமல் போன கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக இருக்கின்றன. பல கலாச்சார அடையாளத்தை சுமக்கும் உறுப்புகள் ஒட்டிப் பிறந்த, உலகளாவியத் தன்மை  கொண்ட உயிர்கள் அவை. சீரற்ற உடல், தீர்ந்த காமம், தொலைந்த பூர்வநினைவுகளை கந்தல்பையாய் சோகத்துடன் சுமந்து திரியும் மூன்றாம் உலகைச் சேர்ந்த அரசியல் உயிரியின் நாடோடிப் பாடல் என்று யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளை அடையாளம் காணலாம்.

 யவனிகாவின் கவிதைகள் தமிழ் புதுக்கவிதை மரபில் உருவானவை அல்ல. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள், அபுனைவுகள், கல்கி, சுஜாதா போன்றவர்களின் எழுத்துகள், 90-களில் நடந்த கோட்பாட்டு விவாதங்களையொட்டி வெளியான நூல்களின் மொழி, காப்ரியல் கார்சியா மார்க்வெசின் தமிழ் மொழிபெயர்ப்புகளிலிருந்து யவனிகா தன் வெளிப்பாட்டு மொழியை உருவாக்கியுள்ளதாக அவதானிக்க முடிகிறது.   மொழிபெயர்ப்புத் தன்மை வாய்ந்த புனைவு மொழியையும், அ-புனைவு மொழியையும் சேர்த்து தமிழ் கலாசாரத்துக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தைக்கூட, உலகின் வேறு விளிம்பில் உள்ள குடிமகன் ஒருவனுக்கு நடப்பதாக, வேறொரு கால, நில, வாழ்வுப்புலத்தில் பேசும் ‘அந்நிய பாவத்தை ஏற்படுத்தி விடுவான் யவனிகா. ‘தலைமறைவுக் காலம் கவிதைத் தொகுப்பில் ‘ஒளி எழுப்பும் தேசம் கவிதையில் யுகங்களுக்கிடையே ஓடும் பேருந்தில் தேசத்தின் நீதிவாசகம் எழுதப்பட்டுள்ளது. அந்த நீதிவாசகத்தை நாம் திருக்குறளாகவும், அந்தப் பேருந்தை திருவள்ளுவராகவும் படிக்க சாத்தியங்களைத் தருகிறான் யவனிகா.


தமிழ் புதுக்கவிதை எப்போது நவீன கவிதை ஆனது? ந.பிச்சமூர்த்தி தொடங்கி 80களின் இறுதிவரை எழுதப்பட்ட கவிதைகளுக்கும், 90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் உள்ளடக்கத்திற்கும் பெயர் அளவிலான வித்தியாசம் தான் இருக்கிறதா? புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதையாக எப்படி தன் வெளிப்பாட்டை வேறுபடுத்திக் கொண்டது? இந்தக் கேள்விகளை யவனிகாவை முன்னிறுத்தி எழுப்பிக் கொள்வது நவீன கவிதைகளின் உலகநோக்கு குறித்த வரையறைக்கு அனுகூலமாக இருக்கும்.

மனம் எங்கேயிருக்கிறது உடலில்? எனக்கு அடையாளம் காட்டுங்கள்? என்று ஜே.கிருஷ்ணமூர்த்தியை தன் கேள்விகளால் துரத்திய யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியை இங்கே நினைவில் கொள்ளலாம். புதுக்கவிதையை ஜே.கிருஷ்ணமூர்த்தியாகவும், மனத்தின் இருப்பிடத்தைக் காட்டச் சொன்ன யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியை நவீன கவிதையாகவும் தற்போதைக்கு வரையறுத்துக் கொள்ளலாம்.

நவீன கவிதையில் மனத்தின் இருப்பு அனைத்துத் திசைகளிலிருந்து வரும் காற்றாலும் அச்சுறுத்தப்படும் நோயுற்ற ஒரு உடலமாக இருக்கிறது. வாகனங்கள் விரையும் நெடுஞ்சாலையில் செல்லும் ஒருவனை சாலை ஓரச்சுவரை நோக்கி உந்தி முடுக்கும் நிரம்பிய சிறுநீர்ப்பை வரை வியாபித்திருக்கிறது.

அவனால் வெளியேற்றப்பட்ட சிறுநீரில் மனம் இருக்கிறதா? அதற்கு முன்கண்ட கனவுகள் இருக்கிறதா? முன்னர் கண்ட கனவுகளுக்கும் பின்னர் காணும் கனவுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா.   

நவீன கவிதை, மனம் என்ற சுயேச்சையான ஒரு பறவையின் இருப்பை சந்தேகத்துக்குள்ளாக்கியது. சுயத்தை நிர்ணயம் செய்வதற்கான தன்னிறைவோ, தகவமைப்போ இல்லாத தற்செயல்களாலும், எண்ணற்ற சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளாலும் உருவாக்கப்பட்ட, மனிதர்களின் விதி வேறெங்கோ நிர்ணயிக்கப்பட்ட இறையாண்மை அகற்றப்பட்ட உடல்களில் மனம் எப்படி தனித்த நிச்சலனப் பறவையாக இருக்கமுடியும். எதனாலும் ஊறுபடாத, தனித்த, அறம்-பாவம் தீண்டாத கிளையில் அது எப்படி அமர்ந்து வேடிக்கை பார்க்கமுடியும்?

மனம் என்பதின் தனிப்பிரபஞ்சத்தை  நிராகரித்தே தமிழில் நவீன கவிதை சூழ்கொண்டது. அகம், புறம் என்ற இருவேறு உலகங்கள் மறையும் தருணமாகவும் அத்தருணத்தைக் கருதலாம். அங்குதான் பெண்ணியக் கவிதைகளும், தலித் கவிதைகளும், புனைவின் இடுபொருட்களை அழகியலும் அரசியலும் சேர்ந்து நவீன கவிதை பிறக்கிறது. இந்த தருணம் துரதிர்ஷ்டவசமாக சரித்திரத்தில் பதிவாகவே இல்லை.

உலகமயமாக்கல் என்னும் செயல்திட்டம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளையும் பல இன, கலாசார அடையாளங்களைக் கொண்ட மக்களையும் மறுகாலனியாக்கி வரும் பின்னணியில் யவனிகா தன் கவிதைகளை எழுதுகிறான். தனித்தனி பிரதேச அடையாளங்களையும் கலாச்சாரக் கூறுகளையும் நினைவுகளையும் கொண்ட விலங்குகள், தாவரங்களைச் சேர்த்து அவற்றை நினைவுகளின் உப்பால் ஊறவைத்து தன் கவிதைகளைப் பரிமாறுகிறான். அவனது வீட்டில் அறிவும், கோட்பாடுகளும் வியர்வையில் நமநமத்துச் சலித்து உலர்ந்துள்ளன. உயிரைத் தக்கவைத்திருக்க ஒரு ராத்தல் மைதாமாவைவினைக் கூட வாங்குவதற்கு ஏலாத ஓட்டை நாணயமாக இருக்கும் காமமே அவனது கவிதைப் பிரபஞ்சத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிரை நீட்டித்துக் கொள்ளும் ஒரே நப்பாசையாக உள்ளது.     

தலைமறைவுக் காலம் தொகுப்பில் உள்ள யவனிகாவின் கவிதைகளில் வரலாற்றின் பெருஞ்சுமையை மனிதத் தன்னிலை ஒருவனே சுமக்கும் சோகம் தெரிகிறது.  கவிதை என்னும் வாகனம் யவனிகா வைக்கும் அத்தனை சுமைகளையும் தாங்கி சோகத்துடன் நகர்கிறது. கவிதை வாயிலாகவே தன் சுயவரலாற்றை இக்கவிதையில் எழுத முயன்றிருக்கிறான். தன் வரலாற்றின் வாயிலாகவே புறத்தில் நடக்கும் மாறுதல்களையும் நுட்பமாகச் சொல்லிவிடுகிறான். காயாநதி கவிதையை யவனிகா தன்னை அடையாளம் கொள்ள இயலும் நிலத்திலேயே வைத்துதான் எழுதியுள்ளான்.  வரலாற்று நிகழ்வுகளின் சுமைக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட லட்சியக் கற்பிதமே மனித விடுதலைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட கார்ல் மார்க்சை ஒரு மனித ஞாபகம் என்னும் கவிதையில் எழுத வைத்திருக்கிறது. தமிழக மார்க்சிஸ்டுகள் ‘ஒரு மனித ஞாபகம் கவிதைக்காகவே யவனிகாவைக் கொண்டாட வேண்டும்.

தொழிற்புரட்சிக்குப் பின்னர் எந்திரமும் உடலும் மனிதனை அந்நியமாக்கிக் கொண்டே துணை உயிரியாகவும், தன்னிறைவுக்கும், வாழ்வாதாரத்துக்குமான வழிகளாகவாவது இருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பின்னர் மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூட பறிக்கப்பட்டு விட்ட நிலையை ‘ஆறுமுகா காபி ஒர்க்ஸ் கவிதை பகிர்கிறது.
பூர்விக நிலங்களும் தொழில்களும் கைவிட்ட மனிதர்கள் பெருவாரியாக குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் காலம் மீது யவனிகாவின் கவிதைகள் கவனம் குவிக்கின்றன. யாரின் தூக்கத்திலிருந்து விடிகிறது இந்த அதிகாலைச் சூரியன்/ மாலுமிகளிடம் கட்டணம் செலுத்தி/ எந்தக் கரைகளில் இறக்கி விடப்படுகிறது பல நூற்றாண்டுத் துயரம் என்று எழுதுகிறான்.

ஒளிரும் நகரங்களின் முன்னிரவில் ஒரு மீமெய்மத் தன்மையைக் காண்பது போல யவனிகா தன் உடல் வழியாகவே மீமெய்மத் தன்மையை அடைகிறான். அங்கே கனவு காண்பதும், காதலிப்பதும், நினைவுகளைச் சுமந்து திரிவதும், லட்சியத்தைச் சுமப்பதும் உடல்தான், உடல்தான்.

யவனிகாவுக்கு எனது நேசம். அவனது நல்லாரோக்கியத்துக்கு எனது பிரார்த்தனைகள்.
(திருநெல்வேலியில் சிலேட்-கடவு சார்பில் நடத்தப்பட்ட இருநாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Comments