Skip to main content

ஆத்மாநாம் நினைவுதினக் கட்டுரை

சூரியனைத் தொட முயன்ற வண்ணத்துப்பூச்சி


ஷங்கர்ராமசுப்ரமணியன்
                      கோட்டுச்சித்திரம் :  ஆதிமூலம்

ஆத்மாநாம் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் அனுபவப்பரப்பை உட்கொண்ட படைப்புலகம் அல்ல அவருடையது. 33 வயதில் அகாலமாக மரணமடைந்த ஒரு கவிஞனிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால்தான் முற்றுமுழுக்க ஒரு கவிஞன் என்ற ஓர்மையோடு, தனது பிரதான வெளிப்பாட்டு வடிவாக ஏற்றுக்கொண்ட ஒரு ஆளுமையின் வெற்றிகளும் தோல்விகளுமாக 147 கவிதைகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. பழந்தமிழ் இலக்கிய மரபின் தளைகளோ, செல்வாக்கோ அவர் கவிதைகளில் இல்லை.   உலகம் முழுக்க அவர் காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் கலை இயக்கங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எதிர்வினைகளும் ஆற்றியிருக்கிறார். அவரது மொழிபெயர்ப்புகள், சிற்றிதழ் செயல்பாடுகள் மற்றும் நட்புறவுகள் மூலம் அவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்திய நிலத்தில் கால்பதித்திருந்த  பெருநகர் கவிஞன் அவர்.  ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்வு கொண்ட, அக்காலகட்டத்திய நடுத்தரவர்க்க மனிதனின் தார்மீகக்குரல் அவரது கவிதைகளில் ஒலித்தது.

இன்று வலுப்பெற்றுள்ள சாதிய, அடையாள, பிரதிநிதித்துவ, பாலினம் சார்ந்த அரசியல், கலை-இலக்கிய வெளிப்பாடுகளின் பின்னணியில் ஆத்மாநாமின் கவிதைகளுக்கான முக்கியத்துவம் என்ன? என்பதைப் பரிசீலிப்பது அவசியமானது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியச் சூழலில் பல்வேறு வாழ்க்கை நிலைகள், பண்பாட்டுப் பின்னணிகளிலிருந்து   எழுதப்பட்ட நவீனகவிதைகள் பெரும் உடைப்பைச் சாத்தியப்படுத்தியுள்ளன. பல்வேறு விதமான மொழிதல்கள்  மற்றும் அழகுகளை தமிழ் கவிதை ஏற்றுள்ளது. சுமாராக எழுதப்பட்ட, வெளிப்பாட்டுத் திறன் குறைந்த கவிதைகளையே தற்போதெல்லாம் பார்க்கமுடியவில்லை.   இந்தச் சூழலில்தான் கவிதைகள்  உத்வேகமோ, சுயபரிசீலனையோ இல்லாத ஒரு செய்யுள் பழக்கமாக, உற்பத்தி நடவடிக்கையாக, பகட்டு ஆபரண நடவடிக்கையாக மாறிவருவதையும் பார்க்கிறோம். படைப்பாக்கச் செயல்பாட்டுக்குள் படைப்புக்குத் தொடர்பற்ற எத்தனையோ ஆசைகளும், கிசுகிசுப்புகளும், அதிகாரப் பரிபாஷைகளும் புழங்கும் இடமாக எழுத்தியக்கம் மாறிவருகிறது.   அந்தவகையில் தான் ஆத்மாநாமின்  கவிதைகள் அறமும், அழகும் வேறல்ல என்பதை நமக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துபவையாக உள்ளன. படைப்புச்செயல்பாடும், ஆன்மீகமும் வேறல்ல என்பதை இன்னும் மெய்ப்பிக்கின்றன.  படைப்பின் ஆதார குணம் எதிர்ப்பும், தனிமையும் என்பதை அவர் தன் வாழ்வின் வழியாக நிரூபித்துச் சென்றுள்ளார்.  ‘உயிருள்ள இலக்கியம் இன்றைக்கு மௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் எழுதியிருக்கிறார்.

கலை அழகோடு, உயர்ந்த இலட்சிய அம்சத்தையும், சமூகப் பொதுக்கவலைகளையும்  அமைதி கொண்ட த்வனியில் எழுதிய கவிஞர் ஆத்மாநாம். ஒரு நவீன சமூகத்தில் மதத்தின் இடத்தைக் கவிதையும் கலைகளும் பிடித்து மனிதர்களை விடுதலைக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  உருவான புதுக்கவிதை முனைப்புகளின் தொடர்ச்சி அம்சம் அவரிடம் உண்டு. பாரதியின் இலட்சியம், க.நா.சுவின் எளிமை, நகுலனின் புதிர்தன்மை ஆகியவற்றை இவர்  தமது கவிதைகளின் பலங்களாக ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்.  தமிழ் கவிதை, சூட்டிக்கொண்டிருந்த அலங்காரத்தைத் துறந்து அன்றாடத்தின் மொழியில், சாதாரண வார்த்தைகளில் நேசத்துடன் உரையாடியவர்; வண்ணாத்திப் பூச்சிகள் மண்ணுடன் ஸ்னேகம் கொள்கின்றன/ நான் உங்களுடன் பேசுகிறேன்என்கிற த்வனியில்; அவர் கவிதைகளில் அமைதி அனுபவம் இன்றும் உணரத்தக்க வகையில் கிடைக்கிறது.   

கவிதை வடிவத்துக்குரிய அழகியல்ரீதியான கடப்பாட்டையும் அதே அளவில் ஆழமான சமூக உணர்வையும், மனிதாபிமானத்தையும் துறக்காதவை ஆத்மாநாமின் கவிதைகள். நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் கருத்துவெளிப்பாட்டின் குரல்வளை அரசால் நெரிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பு மற்றும் அடக்குமுறையின் கொடூரத்தை எதிர்த்து தன் கவிதைகளில் எதிர்வினை புரிந்தவர் ஆத்மாநாம்தான். ( இன்றும் அனுமான்கள் உண்டு வாலின்றி/ ராவணர்களும் உண்டுதீயுண்டு நகரங்கள் உண்டுதனியொருவன் எரித்தால் வன்முறைஅரசாங்கம் எரித்தால் போர்முறை)

‘சுதந்திரம்’ கவிதையில்
எனது சுதந்திரம்/ அரசாலோ தனிநபராலோபறிக்கப்படுமெனில்அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்

 அந்தவகையில் தமிழின் உண்மையான வானம்பாடி அவர். எளிய கவிதை வாசகருக்கும் ஆழ்ந்த அனுபவத்தைத் தரக்கூடியவை அவரது கவிதைகள். வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும், ஆரோக்கியமான பார்வையையும் அளிக்க  இயலக்கூடிய அரிதான கவிஞர் ; சமகால வாழ்க்கையில் அவர் உணரநேரும் சகல சிதிலங்களையும் சொல்லிவிட்டு நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் அவரால் புன்னகைக்க முடிந்திருக்கிறது. இந்த வரிகள் இன்றைக்குக் கூடுதலான பொருத்தப்பாடோடு திகழ்கிறது. இன்றைய நிலைமையை நேற்றே கணித்துச் சொன்னதுபோல இருக்கிறது.
கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்/இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது/சிந்தனையாளர் சிறுகுழுக்களாயினர்/ கொள்கைகளை/கோஷ வெறியேற்றி/ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்/மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று/மெல்லக் கொல்லும் நஞ்சை/உணவாய்ப் புசித்தனர்/எளிய மக்கள்/புரட்சி போராட்டம்/எனும் வார்த்தைகளிலினின்று/அந்நியமாயினர்/இருப்பை உணராது/இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்/என் ஸக மனிதர்கள்/இந்தத் துக்கத்திலும்/என் நம்பிக்கை/நாளை நமதே.

இத்தனை சீர்கேடுகளிலிருந்தும், கவலைகள், நிம்மதியின்மையிலிருந்தும் தளிர்க்கும் தனது இருப்பையே அவரால் பயனும் ருசியும் மிக்கது என்று அவரால் உணரமுடிந்துள்ளது. அவர் கவிதைகளின் பயன்மதிப்பு அது.

செடி

சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சைச் செடி
போல் நான்
அளிக்கும் கனிகள்
பெரிதாகவும் புளிப்புடனும்
தானிருக்கும்
கொஞ்சம் சர்க்கரையை
சேர்த்து அருந்தினால்
நல்ல பானகம் அல்லவோ.

இடதுசாரிக் கவிஞர்களான நஸீம் ஹிக்மத், நதன் ஸக், பிரெக்ட், ஜோசப் பிராட்ஸ்கி போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த்தும், அவர்கள் படைப்புகளின் தாக்கம் பெற்றவராகவும் அவர் இருந்திருக்கிறார். ‘மிகச்சிறந்த பொது அனுபவ உலகக் கவிதைகளை எழுதியவர் என்றும், கவிதையின் அரசியல்மயமாக்கலை தகுந்த முறையில் எதிர்கொண்டவர் என்றும் கவிஞர் பிரம்மராஜன், ஆத்மாநாமைப் பற்றி குறிப்பிடுகிறார்.


கடவுள்கள் இல்லாமல் போன அதனால் காவியங்களுக்கும் வாய்ப்பில்லாமல் போன 20 ஆம் நூற்றாண்டில், வாழ்க்கை மீதான ஈடுபாடு கொள்வதற்கான தீவிரமான சாதனமாகக் கவிதையைக் கருதிய நவீனகவி ஆத்மாநாம். தன் முன்னால் குலைந்திருக்கும், துண்டுபட்ட வாழ்க்கை நிலைகளையும், மனிதர்களையும், அனுபவங்களையும் நேசிக்கவும், தன் மூளைக்குள் ஒழுங்கமைத்துக் கொள்ளும் எத்தனமாக அவருக்கு தனது படைப்பாக்கம் இருந்துள்ளது. இந்த உலகுடன் ஆத்மார்த்தமான ஒரு உறவை மேற்கொள்ள அவர் பரிபூர்ணமாக நம்பிய ஊடகமாக அவர் கவிதைகள் திகழ்கின்றன. தன் முன்னாள் குறைபட்டிருக்கும், காயம்பட்ட, பூர்ணமடையாத பொருட்களையும், உயிர்களையும் ஆத்மாநாம் தன்கவிதை வழி நேசிப்பதன் மூலம் படைப்புச் செயல்பாட்டை ஒரு கூட்டியக்கமாகச் சாத்தியமாக்கி விடுகிறார்.  

இதற்கு சிறந்த உதாரணமாக ஆத்மாநாமின் ‘என் ரோஜாப் பதியன்கள் என்ற கவிதையைச் சுட்டிக்காட்ட முடியும். கவிதை சொல்லி, தன்வீட்டில் வளர்க்கும் இரண்டு ரோஜாப் பதியன்களை அலுவலகத்திலிருந்தபடி நினைத்துப் பார்க்கத் தொடங்குகிறார். ஒரு உறவைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியை அந்த எண்ணம் தருகிறது. அந்த ரோஜாப் பதியன்கள் தன்னைப் பரபரத்து எப்படி வரவேற்கத் தயாராகும் என்று கற்பனை செய்கிறார். அந்த செடிகளுக்கு வியப்பை அளிக்கும் வண்ணம் மெதுவாகப் படியேறப் போவதையும், தோழமையுடன் அவை எப்படி கவிதை சொல்லியை வரவேற்கும் என்பதையும் கற்பனை செய்கிறது அந்தக் கவிதை. தான் ஊற்றும் நீரைவிட தானே அவற்றுக்கு முக்கியம் என்று இறும்பூதெய்கிறான் கவிதை சொல்லி.  

அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கும், குழப்படியிலிருந்து  ஆசுவாசத்துக்கும்,  இரைச்சலிருந்து அமைதிக்கும்,  வன்முறையிலிருந்து ஆழ்ந்த நேசத்துக்கும் அவர் கவிதைகள் ஆற்றொழுக்காகப் பயணிக்கின்றன.  உலகவாழ்வில் பகுத்தறிய இயலாத நிகழ்வுகளை அதன் துண்டுபட்ட நேர்கோடில்லாத தன்மையிலேயே படிமக்கோலங்களாகவும், வார்த்தைக்கூட்டங்களாகவும் கவிதைகளை எழுதிப் பரிசோதித்துள்ளார்தன்னைச் சூழ நிகழும் மானுட அழிவுமூர்க்கத்தை அதன் வேகத்துடனேயே பிரதிபலித்துளார் அவர். அதேவேளையில் இயற்கையில், உறவுகளில்  தென்படும் அபூர்வமான அழகையும், ஒழுங்கையும் அமைதியையும், இசையையும்  தன் கவிதைகளில் சேகரித்துள்ளார்.
 ‘வயலினில் ஒரு நாணாய் எனைப் போடுங்கள்/ அப்பொழுதேனும் ஒலிக்கிறேனா எனப் பார்ப்போம்/ அவ்வளவு துல்லியமாக அவ்வளவு மெல்லியதாக/ அவ்வளவு கூர்மையாக  என்று எழுதிச் செல்லும் அவர் ‘எல்லா
நாண்களுடனும் ஒன்று சேர்ந்து ஒலித்தபடி என்றும் சவால் விடுகிறார். அனைவரையும் உள்ளடக்கிய சேர்ந்திசையிலும் தனது தனித்துவத்தை ஒலிக்கவிட முடியும் என்ற நம்பிக்கையை சவாலாகச் சொல்லமுடிகிறது அவருக்கு.
அதே துல்லியம்/ அதே மென்மை/ அதே கூர்மையுடன்.


ஆத்மாநாம் கவிதைகள் ஒரு ஸ்படிகத்தைப் போன்ற தோற்றத்தை தருபவை. வாசிப்பவரைப் பிரதிபலிப்பவை, வாசிப்பவருடன் உரையாடுபவை, வாசிப்பவருடன் மோதுபவை; ஆத்மாநாமின் வேரற்ற லட்சியத்தன்மையே அவர் கவிதைகளில் ‘முதிராக்குழந்தைப் பண்பாக’, வெளிப்படுகிறது. அந்தக் களங்கமற்ற தன்மையிலிருந்தே அணில் குறித்த ‘கேள்வி கவிதையை எழுதுகிறது. ‘இவ்வணில்கள்/ ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்/ சிறுபிள்ளைக் கைகளுடன்/ அனுபவித்து உண்ணும்/ இவை/ தங்களைப் பற்றி என்ன கனவு காணும்/ உணவையும் உறக்கத்தையும் தவிர என்று விசாரிக்கிறது. அந்தக் களங்கமின்மை அளிக்கும் ஞானத்திலிருந்து தான், கடவுளைக் கண்டேன்எதையும் கேட்கவே தோன்றவில்லைஅவரும் புன்னகைத்துப் போய்விட்டார்/ ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி என்ற தரிசன அமைதியைக் கொண்ட வெளியீடைச் சாத்தியப்படுத்துகிறது.
அந்த விடுபட்ட உணர்விலிருந்துதான்,

இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு..


நம்மில் ஒவ்வொருவரும் மிக மோசமாகத் துயருற்று எழுந்து நிற்கும்போதோ,   பெரும் இக்கட்டிலிருந்து தப்பித்து வரும்போதோ இத்துடனாவது விட்டதற்கு உங்களுக்கு நன்றி என்று தோன்றக்கூடிய ஒரு ஆசுவாச உணர்வை அடைந்திருப்போம் . குடும்பம்சமூகம் , மதம், அரசு, நிறுவனம் என்று மனிதனை ஒடுக்கும் எல்லா  அமைப்புகளிலிருந்தும் இப்படித்தானே நாம் விடுதலை பெறநினைக்கிறோம் . அந்தப் பொதுவான பெருமூச்சுணர்வை  ஏற்ற மானுடப் பொதுக்குரலாக  இக்கவிதை மாற்றப்படுகிறது.

நால்திசையிலும் சூரிய ஒளியில் சுடர்ந்தபடி, காற்றில் பறக்கும் பட்டத்தைப் போல புன்னகைத்தபடி இருக்கின்றன அவரது கவிதைகள்.  உலகியலின் ஈர்ப்பை எதிர்கொள்ள முடியாத பட்டம் அது. அவரது முடிவும் ஒரு லட்சியப் படைப்புமனத்தின்  தன்முறிவுதான்.   அதனால் ஆத்மாவையே பெயராக கொண்ட ஆத்மாநாமின் பெயரும், அவரது தற்கொலையும், அவர் கவிதைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவையே. அவற்றைத் தனிமைப்படுத்திப் பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை.
‘பூச்சுகள் கவிதையில் அவர்,
…… 
என்னுடைய வாகனம் வந்துவிட்டது
இடிபாடுகளுக்கிடையே
நானும்
ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்
எங்கோ ஒரு இடத்தில்
நிலம் தகர்ந்து
கடல் கொந்தளித்தது
ஒரு பூ கீழே தவழ்ந்தது

  இந்தக் கவிதையில் பெரும் அமைதியும், அழகும் நம்மில் ஒருசேரத் தோற்றம் கொள்கிறது. அதனால்தான் அவரால் ஒரே நேரத்தில் உரத்தும் அமைதியாகவும் கவிதையில் பேசமுடிந்துள்ளது.
ஆத்மாநாமின் கவிதைகளுக்கு இன்றைய நவீனகவிதைகளில்  தொடர்ச்சி உண்டா? சுகுமாரன், சமயவேல், பெருந்தேவி, ஆதவன் தீட்சண்யா, லிபி ஆரண்யா கவிதைகளைப் படித்துப்பார்க்கலாம்.  




Comments

kattiyakkaran said…
ந்ன்றி.ஆழமும் அடர்த்தியும் கொண்ட கட்டுரை.ஆத்மாநாம் தமிழ் மொழியைக் கவித்துவத்தின் மிகச்செழுமையான பரப்புகளுக்கு நகர்த்தியவர்.
-கே. எஸ். ராஜேந்திரன்.