Skip to main content

துருவிப் பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வுகொடுங்கள் சுகுமாரன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்



 நகுலன் மது குடிப்பார். ஆனால் அவரது கவிதைகளில் மது போதை சார்ந்த அனுபவமே இல்லையென்று தமிழின் பெருங்கவிஞர்களான சுகுமாரனும், எம்.யுவனும் நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதியின் பின்பகுதியில் வெளியாகியிருக்கும் உரையாடலில் கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்திருக்கின்றனர். 


(குடித்த மனத்திலிருந்து ஒரு வரிகூட எழுதப்படவேயில்லை. அல்லது குடித்த அவஸ்தையைக் கூட அவர் எழுதியதேயில்லை-சுகுமாரன் சொல்கிறார். இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும் எனக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையெனக் கொள்ளலாமா?- யுவன் கேட்கிறார். சுகுமாரன் கடைசியாக ஒரு போடு போடுகிறார்:  ஆமாம்! அப்படித்தான்.நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்- பக்கம் 90- காலச்சுவடு பதிப்பகம்) 

மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து,  லேசாக அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை.

 தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்கான இடமாக மதுவையும், அதுதரும் தற்காலிக விடுபடுதலையும் தன் கவிதைகளில் அடிநிலைக்குச் சென்று வெளிப்படுத்தியவர் நகுலன். பாதலேரின் ‘நன்றாகக் குடி’ கவிதையையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். உலக அழுத்தங்கள் என்னும் கனத்தச் சட்டையைக் கழற்றுவது போன்ற உணர்வுநிலையை பிராந்தியும், இலக்கிய நட்புகளும் தருவதை அவர் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்.

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை

வந்தது zack
எப்பொழுதும் போல்
துயிலிலிருந்து எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்பொழுதும் அப்படித்தான்
தோல்பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாராளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிக்கொண்டிருந்தோம்
அப்பொழுது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில்
சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
0000
சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
(சுருதி கவிதைத் தொகுப்பு)




  
நகுலனின் படைப்புகள் மீதான இவர்களின் இந்த ஒழுக்கவாத இடையீடு எதைக் காப்பாற்றுவதற்காக? நகுலனின் எழுத்துகளில் சாதாரண வாசகர்கள் கூட உணரக்கூடிய மாயத்தன்மையையும் மயக்கநிலையையும், அர்த்தம் கரையும் அனுபவத்தையும் போதை நிலை தரும் அனுகூலம் என்ற உண்மையையும் இந்தப் பெருங்கவிகள் எதற்கு வலுக்கட்டாயமாக மறுக்கவேண்டும். நகுலனின் ஆதார சௌந்தர்யங்களில் ஒன்றைப் பறிமுதல் செய்து, சுந்தர ராமசாமியின் சிறுவர் சீர்திருத்த சிறைக்கு நகுலனைக் கொண்டு சென்று சிகைதிருத்தம் செய்யவேண்டிய அவசியம் என்ன? நகுலனுக்கு இத்தனை வயதான பிறகு அவரது பௌதீக உடல் மறைந்து போனபின்னரும் அதற்கான அவசியம் என்ன?  

நகுலனின் கற்பனைத் தோழியான சுசீலா கூட அறியாத விஷயத்தை நகுலனின் கூடவே வாழ்ந்தவர் போல சுகுமாரன் எப்படிச் சொல்கிறார். கவிதையில் உள்ள ஆல்கஹாலை அளவுபார்க்கும் அளவுமானி எதையாவது சுகுமாரன் கண்டுபிடித்திருக்கிறாரா? 

''நகுலனைப் பொறுத்தவரை குடிப்பது என்பது தண்ணீர் குடிப்பதைப் போன்றது" என்ற மகா புத்திசாலித்தனமான வாசகத்தையும் சுகு சொல்லியிருக்கிறார். இவர்தான் தமிழின் முக்கியக் கவிஞரும் உலகக் கவிதைகளையெல்லாம் மொழிபெயர்த்தவரும், கவிதை விமர்சகரும்.. செல்வாக்குள்ள மேடையும், பிரசுர சாதனங்களும் இருந்துவிட்டால் எந்தப் பொறுப்புமின்றி, குடிக்காமலேயே உளறு உளறு என்று உளறலாம் என்பதற்கு இதுபோன்ற கூற்றுகள் தான் உதாரணம்.   

 உங்களுடைய ஃபோபியாவையெல்லாம் மூத்த எழுத்தாளர்கள் மேல்  ஏனய்யா ஏற்றுகிறீர்கள்? 

 அப்புறம் பிரமிளுக்கும் நகுலனுக்கும் இங்கே பிம்பங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் யுவனும், சுகுமாரனும் பிரலாபித்துள்ளனர். பிம்பம் கட்டுவதற்கு வாய்ப்புள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு பிம்பம் உருவாகவே செய்யும். கேரளத்தில் பஷீருக்கு பிம்பம் இருக்கலாம். தமிழில் சுந்தர ராமசாமிக்கு இருக்கலாம். நகுலன் மற்றும் பிரமிளுக்கு  இருக்கக் கூடாதா? 

 குடித்த நிலையிலிருந்தோ, குடித்த அவஸ்தையையோ நான் எழுதியதேயில்லையென்று நகுலன் மட்டுமே சொல்வதற்கு சாத்தியமானதை சுகுமாரன் எப்படிச் சொல்ல முடிகிறது? இப்படியான அதிகாரத்தை இவர்களுக்கெல்லாம் யார் வழங்கியது?  


 திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்நாள் முழுக்க வாழ்ந்த நகுலனின் கவிதைகளில் கலவி சார்ந்த அனுபவ நிலைகளும் குறிப்புகளும் கூட உண்டு. அதற்கும்  புலனாய்வைத் தொடங்கி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாமா சுகுமாரன் அவர்களே. 

இப்பொழுது இங்கு
யாருமில்லை
அவள் கூட
அவள் 
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு 
கொடுங்கள்
உங்களுக்கு இதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
(நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்-1)

(பின்குறிப்பு: இந்த எதிர்வினையின் நோக்கம் நகுலன் குடித்தார், குடித்த பிறகோ, ஹேங்க்ஓவர் அவஸ்தையிலோ எழுதினார் என்பதை நிரூபிப்பதல்ல..நகுலன் கவிதைகளில் ஒரு போதை நிலை இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மூத்த 'குடிமகனும்' எனது அருமை நண்பருமான விக்ரமாதித்யன் தன் வாழ்நாள் முழுக்க ஒரு டாஸ்மாக் கடை மதுவை காலி செய்தவர். குடித்துவிட்டு நண்பர்களை கவிதைகளை டிக்டேட் செய்பவரும் கூட. ஆனால் அவர் கவிதைகளில் ஒன்றில் கூட நகுலன் படைப்புகளில் காணும் போதை நிலை இல்லையென்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்ரமாதித்யன் கவிதைகள், அவரைப் போலவே தடுமாறுகின்றன. அவ்வளவுதான். 

பசுவய்யா என்ற புனைபெயரில் எழுதிய சுந்தர ராமசாமியின் கவிதையையும் நகுலன் கவிதையையும் அருகருகே வைத்துப் பார்த்தால் நகுலனின் கவிதைகளில் இயங்கும் போதைமை தெரியும். நகுலன் குடித்திருக்கலாம். குடிக்காமல் இருந்திருக்கலாம். அதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை வைத்து கவிதை என்னும் வெளியீட்டை அணுகமுடியாது என்பதற்காகவே இந்த எதிர்வினை) 


Comments

M. Md. Hushain said…
ஒழுக்கவாதம் மூலம் சகமனிதனிடமிருந்து பறித்து எட்டா உயரத்திற்கு ஏற்றி, மகானாகவோ அல்லது கடவுளாகவோ மாற்றுவதும் ஒரு போதை தான்.. தீராத போதை..
Pradhaba Rudhran Munirasu said…
Well written response
Unknown said…
Well written response.
Unknown said…
Well written response.