ஷங்கர்ராமசுப்ரமணியன்
எங்கள் வீட்டுத்
தென்னை மரத்தின் மேல் ஒரு பாம்பு ஏறியுள்ளது அது சாரைப்பாம்பென்றார்கள்
கடந்துபோகிறவர்கள் சிலர் கொம்பேறி மூக்கன் என்றனர் சென்னையின் மழை ஈர நசநசப்பால் எரிச்சல்பட்டு சற்று வெயிலேறியவுடன் தென்னையில் ஏறியிருக்கலாம்
தலை சற்று சிறுத்து உடல் தடித்த நீளமான பாம்பு அது சற்று நேரம் பன்னாடையில்
சுருண்டு இளைப்பாறுகிறது சற்று நேரம் கழித்து தென்னை இலைகளில் நீண்டு நெளிந்து
சுற்றிப் தன் பராக்கிரமம் காட்டுகிறது தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை
தலையை மடக்கிக் கூர்மையாகப் பார்த்து உன்னை யுகம்தோறும் தொடர்வேன் என்பதாகப்
பயமுறுத்துகிறது வழக்கமாகத் தென்னைக்கு வரும் அணில் தனக்குப் பழக்கமான இடத்தில்
இன்னொருவர் இருப்பதைப் பார்த்து வாலைத் தூக்கி திரும்பத் திரும்ப நெருங்கி கீச்சிடுகிறது
பாம்பு பதுங்கியிருக்கும் போது அணிலின் வாலைப் பாம்பென்று கருதி பாம்பைப் பார்த்த
திருப்தியில் செல்கிறாள் ஒரு பாட்டி நான் பாட்டியிடம் அது அணில் என்று சொல்லவில்லை
மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பை எனது காமம் என்று பெயரிடலாமா?
Comments