ஷங்கர்ராமசுப்ரமணியன்
திருநெல்வேலிக்குப் போகும்போதும், தமிழகத்தின் சிற்றூர்களில் பயணம் செய்ய வாய்க்கும்போதும் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்களை ரொம்ப காலமாகவே கவனித்துவருகிறேன். பெருங்களத்தூர் தாண்டியவுடன் தேநீரின் ருசி மாறுவதைப் போலவே இளையராஜாவுக்குள் உருமாறிவிடுகிறது தமிழகம். இளையராஜாவைத் தவிர்த்து தேவா தொடங்கி இன்றைய இமான், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன என்றாலும் இளையராஜா காலத்திய உணர்வு மதிப்பீடுகளையே கொண்டிருக்கும் இசையே கேட்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் கிராமங்கள் வரை பரவிவிட்ட காலத்திலும் எண்பதுகள் காலகட்ட மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் காதல், காத்திருப்பு, ஏக்கம், தாபம், காதல் தோல்வி அளிக்கும் புலம்பல் மற்றும் சல்லாபப் பாடல்கள்தான் இன்றும் பேருந்துகளில் காலையிலும் மாலையிலும் ரசிக்கப்படுகின்றன. கிராமிய, வேளாண் கலாசாரப் பெருமிதங்கள், மண்ணின் பெருமை, தாய்மையின் மீதான புனிதம் ஆகியவை மதிய வேளைப் பயணங்களை நிறைக்கின்றன. இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவிட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், உலகமயமாதலின் அத்தனை சாதகங்களையும் சுகித்துவரும் ஒரு நிலத்தின் சிறுநகரங்களில், ஏன் பாடல்கள் வழியாக மட்டும் ஒரு இறந்த காலம் உறையவைக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது?
இளையராஜாவின் பொற்காலத்தை நினைவுறுத்தும் பாடல்களின் தொகுப்பை ஐம்பது நிமிடங்கள் கேட்டுவிட்டு, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்குப் போகும் பேருந்தில் வழியில் பாவூர்சத்திரம் தாண்டி ஒரு நிறுத்தத்தில் இன்றும் ஒரு கிராமவாசி கனத்து இறங்கிச் செல்கிறார். அவர் நெகிழ்ந்து இறங்கிச் செல்லும் நிலம் நிச்சயமாக அவர் கேட்ட பாடல்களின் காலத்தில் இல்லை. அவரது பூர்விக நிலமென்று சொல்லப்பட்ட இடத்தில் காற்றாலைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வயல்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வண்ணக்கொடிகள் அசைந்துகொண்டிருக்கின்றன. ‘ஊமை என்றால் ஒரு வகை அமைதி, பேதை என்றால் அதிலொரு அமைதி’, ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடியதே’ என்று அவர் நினைவைக் குதறிக்கொண்டிருக்கும் வரிகள் அவரை என்ன செய்துகொண்டிருக்கும்?
பகலில் அப்படி, இரவுகளில் இப்படி!
மனிதனின் இயல்பூக்கங்களில் ஒன்றான காமத்தையும் காதலையும் அதிகம் ஒடுக்கும் சமூகங்களில் ஒன்று நம்முடையது; இயல்பையும் விழைவுகளையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது; ஆனால் அதைக் கனவாகவும் ரகசியங்களாகவும் குற்றத்தன்மையுடனும் பராமரிக்கலாம்; இடையறாது காதலையும் பாலுறவையும் சல்லாபத்தையும் அனைத்து அலைவரிசைகளிலும் சிந்தித்துக்கொண்டிருப்பவர்தான் நாம். கழிப்பறைச் சுவர்கள், பேருந்தின் இருக்கைகள், ரயில்கள் என நமது ரகசிய ஆசை எழுத்துகளின் பரப்பளவு நெடியது. நள்ளிரவுப் பேருந்துகளில் பயணம் செய்ய நேரும்போது, நாம் பாலுறுப்பின் இடத்தில் மூளையை இடம்மாற்றி வைத்து எப்படித் தவிக்கத் தவிக்க முனகல் பாடல்களால் சிந்திக்கவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர முடியும்.
ஏன் ரஹ்மான் இல்லை?
எனது இருபதாண்டு கால பேருந்துப் பயணத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த படப் பாடல்களை மிகக் குறைவாகவே நான் பேருந்துகளில் கேட்டிருக்கிறேன். ரஹ்மான் என்ற முக்கியத்துவத்தைத் தவிர்த்த வேறு முக்கியத்துவங்களுக்காக அவர் இசையமைத்த சில பாடல்கள் கேட்கப்படுகின்றன. ‘ஜீன்ஸ்’, ‘எந்திரன்’ போன்ற படங்களின் பாடல்கள் பேருந்துகளில் ஒலித்துக் கேட்டுள்ளேன். ஆனால், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏழு அதிசயங்கள் என வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. ‘ரோஜா’ படத்தில் வரும் ‘சின்னச் சின்ன ஆசை’ அதிகமாக பேருந்துகளில் கேட்கப்பட்ட ரஹ்மானின் பாடலாக இருக்கலாம்.
ரஹ்மானும் தமிழ் வெகுஜன சினிமாவில்தான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுளுக்கும் மேலாக இசையமைத்துவருகிறார். அவரது பாடல்களும் தமிழ் வர்த்தக சினிமா மற்றும் இந்திய சினிமா திரைப்படப் பாடல்களின் வகைமைகளுக்கு உட்பட்டதுதான். ஏன் இன்னும் சிறுநகரப் பேருந்துகளில் எல்லாரும் கேட்கும், ரசிக்கும் பொது உணர்வாக அந்தப் பாடல்கள் மாறவேயில்லை.
காதல், விரகம், வெற்றி, நம்பிக்கை, சோகம் என எல்லா வகைமைகளிலும் இசைக்கும் பாடல்களில் ஒலிக்கோவைகள் மற்றும் சத்தங்கள் சார்ந்து முற்றிலும் புதிய தன்மையை உருவாக்கி விடுபவராகவே ரஹ்மான் இருக்கிறார். அது மாறிக்கொண்டிருக்கும் உலகின் வலியாக, சந்தோஷமாக, துக்க இரைச்சலையும் கொண்டிருக்கிறது. அது சத்தங்களின் புதிய கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது. மரபின் மதிப்பீடுகளையும் புதிய யுகத்தின் அபிலாஷைகளையும் சேர்த்துக் கொண்டதாக இருக்கிறது. அவரது ஆன்மிகம் வேறுபடும் இடம் அதுதான். காலம்காலமாக அரசியல் காரணங்களால், நம்பிக்கைகளின் பெயரால் மோதிக் கலவரங்கள் செய்துகொண்டிருந்த இரு சமயங்களைச் சேர்ந்த மக்கள் தமது காயங்களைக் குணப்படுத்தும் முகமாக, விடுதலைக்கான மருந்தாக உருவான சூஃபி மரபின் நவீன முகம் ரஹ்மான். ‘டில்லி 6’ -ல் ‘மசாகலி’ முதல் ‘மோலா மோலா’ பாடல்களை ரஹ்மான் சொல்லும் ஆன்மிகச் செய்தி என்றே நான் சொல்வேன். அதனால்தான் ஆஸ்கார் ஏற்புச் செய்தியில், “வெறுப்புக்குப் பதில் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் சொல்லும்போது அது அலங்காரமாக இல்லை. அதிலிருந்தே ‘வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலரவே’ என்று சமாதானத்துக்காக கசியும் இசை உருவாக முடியும்.
‘காதலன்’ படத்தில் வரும் ‘முகாபுலா’ பாடலிலிருந்து சிவாஜி படத்தின் ‘தீ, தீ, தீ’ வரை அந்த இரைச்சலான நவீன சத்தங்களுக்குள்ளிருக்கும் விடுபடுதல்களுக்கான தவிப்பைக் கேட்க முடியும். அதிகபட்ச தூரங்களுக்கு, வெவ்வேறு நிலப் பிரதேசங்களும், வேறு வேறு நினைவுகளுக்குத் தமிழ் இளைஞன் ஒருவன் பயணிக்கத் தொடங்கிய காலத்தை இந்தப் பாடல்களோடு நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஏ. ஆர். ரஹ்மான் இக்காலகட்டத்தில் தான் எண்ணற்ற நிலங்களையும் பல கலாசார இசைகளையும் நம் நினைவில் சேர்க்கிறார்.
எம்ஜிஆர் பாடல் போலத் தொனிக்கும் ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடலிலும் இந்த உற்சாகத்தை உணர முடியும். அவரது காதல், கேளிக்கை பாடல்களிலும் ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட துயர உணர்வு இல்லவே இல்லை. ‘பம்பாய்’ படத்தின் ‘கண்ணாளனே’ பாடல் தொடங்கி ‘ஐ’ படத்தின் ‘என்னோடு நீ இருந்தால்’ வரை அவை பிரிவுணர்ச்சியிலிருந்து நிறைவை நோக்கிய எத்தனம் கொண்டவையாகவே இருக்கின்றன. ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடலின் ‘ஹம்மா, ஹம்மா’ புது யுகத்தின் வேகத்துக்கு நம்மைத் தயார்படுத்துவது. வேகத்தோடேயே சேர்ந்து வரும் நிலையாமைக்கும், அநித்தியத்துக்கும் சேர்த்துதான் அவரது பாடல்கள் அறைகூவல் விடுக்கின்றன.
மாற்றத்துக்கும் பழைமைக்கும் இடையில்
பழைமை தக்கவைத்திருந்த கொஞ்சூண்டு மதிப்பீடுகளையும் கைவிட்டு, புதுமையின் விழுமியங்களையும் பரிசீலிக்காத, வெறும் நுகர்வாக மட்டுமே தொழில்நுட்பத்தையும் நவீன வாழ்க்கையையும் தக்கவைக்க விரும்பும் சமூகம் நாம். மொபைல் தொலைபேசி சாதனங்களும், கட்டற்ற தகவல் தொழில்நுட்பமும் நமது பழைய கட்டுப்பட்டித் தனங்களுக்கு சவால் விடுகின்றன. ஆனாலும் சாதிய இறுக்கங்களும், சாதியப் பிடிமானங்களும் கடைசி யுத்தமாக வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களிலும் குழுக்களாக முகவரி கொண்டு நீடிக்கின்றன. கௌரவக் கொலைகளும், பின்தொடர்தல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
புதிய யுகம், புதிய தொழில்நுட்பம், புதிய கலாசாரம், புதிய சந்தோஷங்கள், புதிய தனிமை, புதிய சுதந்திரம், புதிய பாலியல் மற்றும் புதிய துக்கங்களுக்கு நாம் முகம்காட்ட வேண்டிய காலம் இது. புதியது என்றால் நல்லதும் அல்லாததும் எல்லாமும்தான்.
நவீன காலத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறிவிட்டோம்; ஆனால் புதிய காலத்துக்கான புதிய மதிப்பீடுகளை நாம் உருவாக்கிக்கொண்டுவிட்டோமா? ரஹ்மான் பாடல்கள், தமிழகத்தின் சிறுநகரங்களில் கேட்கப்படாமல் இருப்பதற்கும் இந்தக் கேள்விக்கும் இடையே நுட்பமான தொடர்பிழைகள் உள்ளன.
‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில் வரும் ‘ஜெய்ஹோ’ பாடலில் ‘வந்தே மாதரம்’ இசைத்துணுக்கு இசைக்கப்படும். விடுதலை என்றால் அது எல்லா விடுதலையும்தான். இதுவரையிலான சரணாகதி போதும். இனி விடுதலைதான் தேவை. ரஹ்மானில் அதைப் பரிசீலிக்கலாம்!
( தி இந்து நாளிதழில் வெளியானது)
( தி இந்து நாளிதழில் வெளியானது)
Comments