இந்தக் கோடை
எந்த நினைவுகளின் மேலும் சாய்ந்து
இளைப்பாறவோ
துக்கப்படவோ
அனுமதிக்கப் போவதில்லை
பழுத்து உதிர்ந்து
வேனலின் நீராவிக் கலத்தில்
அவியும் இலைகளின்
மணத்தை நான் அப்படியே
முகரவேண்டும்
அதிகாலையில் ஆறுதலாகப் பெய்யும்
பின்பனிக்கு
என் உடலை
எந்த முன்ஞாபகங்களுமின்றி
சுத்தமாகத் துடைத்துத் தர வேண்டும்
ஒரு பறவையை அதன் வாலின்
துடிப்போடு
நிகழ்கணத்தில் அப்படியே பார்க்கவேண்டும்
கடக்கும் பெண்ணின் உடல் எழிலை
குட்டிக் குழந்தைகளை
தன்னிரக்கமின்றி ரசிக்க வேண்டும்
சென்றவளின் சுவடின்றி
இந்தக் கோடை தரும் காதலுணர்வை
என் உதடுகளை நானே தடவி
ருசிப்பதைப் போல
நான் தனியே சுவைக்க வேண்டும்
இந்தக் கோடையில் பெருகி
என்னைக் கொல்லும்
ஒவ்வொன்றையும்
தொட்டுத் தொட்டு அழித்து
மீண்டும் ஏகாந்தத் தனியனாக வேண்டும்.
தெரியாதா பேரன்பே
தெரியாததன் பெருந்துளையிலிருந்து தானே
அவள் வந்தாள்
வந்த துளைக்குள்ளேயே
அவளும் மறைந்து போனாள்
காதலும் மறைந்தது
தெரியாததற்குள்
நீ
இதுவரை எதையெல்லாம் தவறவிட்டிருக்கிறாய்
சங்கரா
சிறுபையனாய்
எத்தனை நாணயங்களை
தெரியாமல் தெரியாமல்
அதற்கெல்லாம் காரணம்
தெரிந்ததா தெரியுமா
சங்கரா
தெரியாததை நோண்டாதே
சங்கரா
தெரியாததற்கு முன் தண்டனிடு சங்கரா
தெரியாததற்குள்
உன் ஆசைகளையும் நினைவுகளையும்
அள்ளியள்ளி இடு
அப்போது
தகிக்கும் வெயிலில்
எரியும் உன் சடலத்தின் புகை
உனக்குச் சுகந்தமாகும் சங்கரா
ஜங்கோ ஜாங்கோ
காலை முதல்
வெப்பம் முறுகும் பாலையில்
புல்வெளிகளில்
நிறுத்தங்களில் ஓய்வறைகளில்
நினைவுகள் கொள்ளாது
கடக்க வேண்டிய கௌபாய் வீரன்
நீ
ஷங்கர்
சில நேரங்களில் அடிமைகளை விடுவிக்கும் போர்வீரன்
சில நேரங்களில் அடிமைகளோடு அடிமைகளாக வரிசையில் செல்பவன்
நீ எப்போதும் தனியாக இருந்ததும் இல்லை
நீ எப்போதும் காதலிக்கப்பட்டதும் இல்லை
மரணமும் வன்மமும் காதலும் பிரிவும்
வந்து வந்து போகும் நிலையங்கள் தான்
ஷங்கர்
நித்தம் நித்தம் நித்தியமாகக்
கடக்க வேண்டும்
தண்ணீர் மட்டுமே மெய்
உன் குதிரை
தத்துவம் சொல்வதைக் கேள்
உனது துயரம்
சற்றுப் புதிராக இருக்கிறது என்கிறாய்
எல்லாருக்கும் எல்லாமும் அப்படித்தானே இருக்கிறது
ஷங்கர்
இதுவரை படைக்கப்பட்ட அத்தனை இசையும்
பிரிவையும் விரகத்தையும் தானே பேசுகிறது
ஷங்கர்
இந்த வெயில் மிகவும் கொடூரமானது என்கிறாய்
எப்போதும் இந்த வெயில் இப்படித்தானே இருக்கிறது
ஷங்கர்
இப்போது அவள் இல்லை
நீ மறுபடியும் காதலிக்கப்பட்டதேயில்லையா
நீ அடுத்த நாளை எதிர்கொண்டே ஆகவேண்டும்
ஷங்கர்
உனது காதல் கடந்துபோய் விட்டது
நீ ஒருபொழுதில் காதலிக்கப்பட்டாய்
அவ்வளவுதான்
ஷங்கர்
இதமான பட்டாணி சூப்பை அருந்தும்போது
ஒரு நிலப்பரப்பைக் கடக்கும்போது
நீ சோகமாய் உணரலாம்
ஷங்கர்
மழை பெய்யும்
சூரியன் ஒளிரும்
நமது மரணத்திற்குப் பிறகு
நமது குழந்தைகளுக்கும் ஒளிரும்
ஷங்கர்
ஒரு பொழுதில் நீ காதலித்தாய்
எப்போதைக்குமாய்
நீ கடந்து செல்லத்தான் வேண்டும்
ஷங்கர்
(ஜாங்கோ அன்செய்ன்ட் படத்தின் பிரதான
தாக்கத்திலிருந்து எழுதப்பட்ட கவிதை இது. சில வரிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன அந்தப் பாடலைக் காண
https://www.youtube.com/watch?v=OhlVBpEnjig&list=PLcpBBg8UA1Oxz7973OVcCzyBR-caH7hCQ)
இப்படித்தான்
அந்த தென்னைமரத்தினடியில் தான்
அன்று
நீயும் நானும்
பேசி முயங்கி
விருத்தி செய்த
புறாக்களும்
நம் காதலும் நடைபயின்றது.
இன்று அந்தத் தென்னையிலிருந்து
ஒரு பழுத்த மட்டை
இற்று வீழ்ந்தது.
எங்கள் ஊரில் ஒவ்வொரு மரணம்
நிகழும்போதும்
புழக்கடைத் தோட்டத்து தென்னை மரத்திலிருந்து
இப்படித்தான்
ஒரு பச்சை மட்டை சரிக்கப்படும்.
Comments