Skip to main content

காத்திருக்க வேண்டும்



நிலத்தின் மீது உலோகம் அறையும் சத்தம் கேட்கும் இடத்தில் அங்கே ஏற்கெனவே இருந்த ஒரு வாழ்வு மாறுகிறது. அவன் வருகைதராத இடத்தில் அமைதியாக தெள்ளியதாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் மான் இறங்கித் தண்ணீர் பருகுகிறது. சற்றுத் தள்ளி இருக்கும் குன்றில் நிற்கும் மரத்தின் கிளையில் அமர்ந்து ஆந்தை தியானித்திருக்கிறது. மனிதன், தங்க வேட்டைக்காக பூமியின் கதையில் நடுவில் வருபவன்; நடுவிலேயே அந்த இடத்தை விட்டு நீங்கிவிடுபவனும் கூட. மீண்டும் அதே ஏகாந்தத்தில் நீரோடை தெள்ளியதாக ஓடும். ஆந்தையொன்று அந்தப் பள்ளத்தாக்கை அமைதியாகப் பார்த்து தியானத்தில் இருக்கும். இதுதான் கோயன் சகோதரர்கள் இயக்கிய The Ballad of Buster Scruggs திரைப்படத்தில் வரும் All Gold Canyon அத்தியாயம்.

செடியாக இருந்தபோது, பாதுகாப்புக்காக வேலியிடப்பட்ட இரும்புக்கம்பியைத் தன் உடலோடு சேர்த்துக் கொண்டு வளர்ந்திருக்கும் மரத்தை இன்றைய காலை நடையில் பார்த்தேன். The Ballad of Buster Scruggs  திரைப்படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. முதலில் அதைப் பார்த்தவுடன் பழக்கம் சார்ந்த மனம் திடுக்கிடலை அடைந்தது.  மரத்துக்குள் அத்துமீறி ஊடுருவித் துளைத்து நிற்கும் காயமாக, இரும்புக் கம்பியை, முதலில் நான் மரத்தின் எதிரியாகக் கொள்வதற்கு வகுத்தேன். இதுதான் என் பழக்கம்.

இயற்கையையும் இரும்பையும் இரட்டைகளாக்கி வலி என்னும் வரலாற்றுக் கதையில் மோதவிட்டேன். அமைதியான ஓடை சலனம் கொண்டது. ஆந்தை முகம் திருப்பியது.

மரத்தைத் திரும்பத் திரும்பச் சுற்றி வந்த போது, அங்கே எனக்குப் பரிச்சயமான முனகலோ, ரத்தத் தடையங்களோ, புகார்களோ இல்லை. எனது முதல் தகவல் அறிக்கையைக் கிழித்தேன்.

அந்த மரத்தைவிடத் தொன்மை கொண்ட, அது வேர் கொண்டிருக்கும் பூமியின் ஆழத்தில் பிறந்த குழந்தை இரும்பு.

பூமி, பிரசவித்த விதையொன்று தனக்கு முன்னால் பிறந்த இரும்பைச் செரித்து தன் உடலாக்கிக் கொள்கிறது. இது தொடர்பிலான எனது இடையீடுதான் எனது விளக்கம் தான் எனது அர்த்தம்தான் இயற்கைக்கு எதிரானது.



நான் காத்திருக்க வேண்டும். ஒரு விதை இரும்பை முழுமையாக விழுங்குவதைப் பார்க்க எனக்கு ஆயுள் இருக்க வேண்டும். அல்லது கற்பனையாவது வேண்டும். ஒரு வண்ணத்துப் பூச்சி சுமந்திருக்கும் மகரந்தத்தில் காடு அப்படித்தான் தேவதச்சனுக்குக் காணக் கிடைக்கிறது.

நான் காத்திருந்தாலோ கற்பனை செய்தாலோ எதுவுமே சேதாரம் இல்லை என்பதைப் பார்க்க முடியும். அதுவரை நான், அனைத்தையும் மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.

மனிதன் தங்கப் புதையலுக்காக இங்கே வருபவன். அவன் கிளம்பியும் விடுவான். மறுபடியும் அங்கே அமைதியாகவும் தெள்ளியதாகவும் ஓடை ஓடும். ஆந்தை, அந்த அமைதிப் பள்ளத்தாக்கில் ஒரு மரக் கிளையின் மீது அமர்ந்து தியானம் செய்யும்.
  

Comments