நாம் வெகுகாலத்துக்குப் பிறகு வீடுகளுக்குள் நீண்ட நாட்கள் வெளியே செல்ல முடியாமல் அடைகாக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான மனிதர்கள் தொலைத்த அவகாசத்தின் கருவூலம் நம் முன்னர் எல்லையற்று இப்போது திறந்து கிடக்கிறது. துரத்தும் நோய் பயம், பொருளாதார நிச்சயமின்மை, மனித துயரங்களுக்கு மத்தியில் இந்த அவகாசம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சற்றுக் கூர்ந்து பார்த்தால் இங்கே நமக்குக் கற்பதற்கான, படிப்பினைக்கான, சுய பரிசீலனைக்கான இடம் இருக்கிறது. ஏனெனில் ஒரு தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி ஒரு நெருக்கடியில், ஒரு பேரிடரில், ஒரு துயரத்தில் தான் தன்னைத் திரும்பிப் பார்த்து ஆழமான பரிசீலனையைச் செய்கிறது. எளிமையானதும் சௌகரியமானதுமான இறந்த காலத்தைக் கொண்டவன் ஒரு தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஒரு சமூகமாக இருந்தாலும் சரி, வலுநிறைந்தது அல்ல. துயரங்கள், தழும்புகளிலிலிருந்தே சமூகம், தனிமனிதரின் தசைகளும் எலும்புகளும் வலுவடைகின்றன. சக மனிதர், சக சமூகங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்தி நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு இலக்கியங்கள் உதவுகின்றன. வாழ்க்கை நமக்கு முன்னால் வீசும் இடர்களையும் ஏற்ற இறக்கங்களையும் சந்திப்பதற்கான கலாசார பலத்தைத் தருவதற்கு இலக்கிய ஆக்கங்களை வாசிப்பது முக்கியமான பயிற்சியாகக் கருதப்படுகிறது. அதனால்தான், நெடிய நேரத்தையும் அவகாசத்தையும் கோரும் கலைவடிவங்களான நாவல்கள் இந்த நாட்களில் அதிகம் வாசிக்கப்படுகின்றன.
சமூகமாக, பண்பாடாக, வரலாறாக, மனித குலமாக நாம் பெற்ற அனுபவங்கள், படிப்பினைகள், வளர்ச்சிகளைப் பரந்துபட்ட வகையில் தெரிந்துகொள்வதற்கான ஊடகங்களில் ஒன்றாக நாவல்கள் விளங்குகின்றன. அதனால் தான் கொரோனா காலத்தில், உலகெங்கும் ஆல்பெர் காம்யூவின் ப்ளேக் திரும்பத் தேடிப் படிக்கப்படுகிறது. ப்ளேக் தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பத்தைக் குலைத்துப் போடும் கதையைச் சொல்லும் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுக்குத் திரும்ப மவுசு ஏற்பட்டுள்ளது.
தன்னை மறக்கச் செய்யும் பொழுதுபோக்குகளுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாத நிலை, நமது தனிமையையும் நாம் உணரும் வெற்றிடத்தையும் நிரப்பிய ஷாப்பிங், உணவகம், சினிமா போன்ற நுகர்வுகளும் மறுக்கப்பட்டுள்ளன. தன்னை விட்டு ஓடுவதற்கு துணியும் பயணங்களை மேற்கொள்ளவே முடியாது. இசை கேட்பதற்கும் சினிமா பார்ப்பதற்கும் கூட வசதியும் வெளியும் தேவை. இந்த நாட்களில் ஒரு செவ்வியல் படைப்பை நாம் வாசித்து முடித்தால், துப்பாக்கியை நெற்றியில் வைத்து அச்சுறுத்தி, நமக்கு அவகாசத்தை நாம் விரும்பாமலேயே அளித்த கொரோனா நாட்களுக்கு நாம் எதிர்காலத்தில் நன்றிசொல்வோம்.
எனது நண்பரும் எழுத்தாளருமான சாம்ராஜ், கரமசோவ் சகோதரர்கள் நாவல் வாசிப்பில் 1200 பக்கங்களைத் தாண்டியுள்ளார். இன்னொரு நண்பரான விஜயராகவன், அன்னா கரீனினாவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாவலைப் படிப்பது பிடித்த பாடல் ஒன்று இதயத்தில் அலையடித்துக் கொண்டே இருப்பதைப் போன்றது; நேசத்துக்குரிய நபரின், குழந்தையின், பிராணியின் முகம் ஞாபகத்தில் எழுந்து கொண்டே இருப்பது போன்றது. மிகப் பெரிய நாவல்கள் அனைத்தும் முதல் 200 பக்கங்களுக்கு கூடுதல் சிரத்தையையும் கவனத்தையும் கோரவே செய்யும். அதற்குப் பின்னால் பெரும்பாலும் நாம் அமிழ்ந்துவிடுவோம். வாசிக்காத வேளையிலும் நடுவில் வேறு வேலைகளுக்காகப் பிரிந்திருக்கிற போதும் நாவல் நம்மை அழைத்துக் கொண்டே இருக்கும்.
ஒரு அன்னா கரீனினாவையோ, ஒரு மோக முள்ளையோ, ஒரு நீலகண்ட பறவையைத் தேடி நாவலையோ படிப்பதற்கு ஒருவனுக்குச் சிறந்த வயதென்றால் நான் 20 வயதுகளைச் சொல்வேன். வேலைகள், பொறுப்புகள், அலைக்கழிக்கும் விழைவுகள் அதிகம் ஏறாத அந்த சாவகாசமான பருவத்திலும் காலத்திலும் தான், ஒரு பெரும் கற்பனை உலகத்துக்குள் ஒருவன் தடையேயின்றி சஞ்சரிக்க முடியும். பல்வேறு விதமான கதாபாத்திரங்கள், குணங்கள், வாழ்க்கை நோக்குகளை ஏற்றுக் கொண்டு இதயம் அகலும் வாய்ப்பை அன்னா கரீனினா போன்ற செவ்வியல் ஆக்கங்களே தருகிறது. எனது கல்லூரி நண்பன் தளவாய் சுந்தரம், தனது செமஸ்டர் விடுமுறையில் தங்கள் வீட்டு மாடுகளை மேயவிட்ட வெளியில் கோடைகாலப் பாலத்தின் நிழலில் படுத்தபடிதான் மோகமுள் நாவலை முடித்தான். இப்படியான ஒரு அவகாசமான சூழல் சென்ற நூற்றாண்டில் இருந்தது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்க வீடுகளில் சாதாரண இல்லத்தரசிகளும் ஜெயகாந்தனுக்கும், லா. ச. ராவுக்கும் அபிமான வாசகிகளாக இருந்து அவர்கள் எழுதிய கதைகளை வீடுகளில் விவாதித்த காலம் அது. தென்காசிக்கு வங்கி வேலைக்கு மாற்றலாகியிருந்த லா. ச. ராவைப் போய் எனது தந்தையின் அத்தையும் அவரது தோழிகளும் வங்கியில் சென்று பார்த்திருக்கிறார்கள். எழுத்தாளர் சுரேஷ் குமார் இந்திரஜித், தனது அண்ணியார் வழியாக கதைகளை வீட்டில் படிக்கக் கேட்டு ஜெயக்காந்தனிடம் அறிமுகம் ஆனதாகச் சொல்லியிருக்கிறார்.
அப்படி கதைகள் படித்து விவாதிக்கும் அவகாசம் இல்லாமல் தவறவிட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அரிய வாய்ப்பு இது.
கரமசோவ் சகோதர்கள் நாவலை எடுத்துக் கொண்டால் தந்தை கரமசோவ், பொதுவாக நாம் வெறுக்கும் பண்புகள் அனைத்தையும் கொண்டவர். ஆனால், அவர் தனது தரப்பை ஒரு அத்தியாயத்தில் பேசத் தொடங்கும்போது அவரும் நமது நேசத்துக்குரியவராக மாறிவிடுவார். மேன்மையும் கீழ்மையும் ஒரு நபரிடமே இருக்க முடியும்; அந்த இரண்டு நிலைகளையும் பாகுபாடு இல்லாமல் அங்கீகரித்து ஏற்றுக் கடப்பதன் வழியாகவே மனிதனுக்கு மீட்சி சாத்தியம் என்பதை கரமசோவ் சகோதரர்கள் போலக் காட்டும் படைப்பு வேறொன்றில்லை.
நீலகண்ட பறவையைத் தேடி நாவல், கிழக்கு வங்கத்தின் இயற்கை அழகு கொழிக்கும் நிலத்தில் நிகழும் கதை. சூழ உள்ள இயற்கையில் தனது இழந்த காதலைத் தேடும் மணீந்திர நாத் தாகூரையும், ஓவியம் போல விவரிக்கப்படும் சோனாலி பாலி ஆறும் அதில் செறிந்திருக்கும் நாணல்களும் நம்முடன் இறுதி வரைக்கும் தங்கியிருக்கும் சித்திரங்கள். மரத்தில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு ‘கேத்சாரத் சலோ’ என்று அவர் சொல்வது எனக்கு இன்றும் மறக்க முடியாதது
ஒரு நாவல் வாசிப்பவனுக்கு, அவனுக்கு வெளியே ஒரு உலகத்தைச் சிருஷ்டிக்கிறது. ஒரு சிம்பனி இசை நாடகத்தைப் பார்ப்பதும் கேட்பதும் போல, அந்த உலகத்துக்குள் சென்று மற்றவர்களின் வாழ்க்கைகளை, நோக்குகளை வாழ்வதற்கும் பிரதிபலிப்பதற்கான மெய்நிகர் அனுபவத்தையும் தருகிறது. வெற்றி, தோல்வி, அகந்தை, வீழ்ச்சி, பெருமிதம், ஆசை, தேடல், அறிவு, அதிகாரம், சபலம் என நமது உலகத்தின் அத்தனை நிறங்களும் பிரஜைகளும் நாவலிலும் உண்டு. மனிதனின் சாதனைகள், முன்னேற்றங்களோடு அவற்றின் வரையறைகளையும் சில தருணங்களில் அவற்றின் பயனற்ற தன்மையையும் ஒரு நாவல் நமக்குக் காட்டுகிறது.
ஒரு நாவலைப் படிக்கும்போது, நம்மைச் சுற்றி நிகழும் உலகத்தை இன்னும் கூர்ந்து பார்க்கவும் கேட்கவும் செய்கிறோம். நமக்கு பழையது போன்று தோற்றம் தரும் உலகம் புதிதாகவும் ஸ்படிகம் போலும் தோன்றுகிறது.
தொழில்நுட்பம், பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் என எத்தனையோ சாதனைகளைத் தாண்டிய அமெரிக்கா போன்ற நாட்டைக் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத வைரஸ் திகைக்க வைத்துள்ளது. மரணம் என்பது மிக அரிதாக தூரத்தில் அவ்வப்போது தெரிந்துகொண்டிருந்த வஸ்துவாக இருந்தது. இப்போது, நாம் ஒவ்வொரு கணமும் அதன்மீது தான் தியானித்துக் கொண்டிருக்கிறோம்.
வெளியில் மனித நடமாட்டம் குறைந்து இயற்கை நம்மை நோக்கி நெருங்கியிருக்கிறது. இமயமலையிலிருந்து நம் வீட்டுக்கு வரும் அணில்கள் வரை நமது கண்களுக்குத் துல்லியமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நாம் இதுவரை பாதுகாத்து வந்த சில்லறை அகந்தைகள், போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள், கோபதாபங்களுக்கு மேல் உயர்வதற்கும் அவற்றைக் கடப்பதற்கும் நாவல்கள் சிறந்த படிப்பினையாக இருக்கும்.
Comments