Skip to main content

தெரிந்த கடல் தெரியாத கடல்



வினோராவுக்கு நினைவில் தெரிந்த கடல் எல்லாம், அம்மாவுடனோ அப்பாவுடனோ பெரியம்மாவுடனோ அண்ணனுடனோ தொடர்புடையது. கடல் அலைகளின் சத்தத்துடன் தங்கைக்கு மொட்டை போட்ட கடலின் ஞாபகம் உண்டு. முழுக்க மனிதத் தலைகளே தெரியும் பண்டிகையோடு தொடர்புடைய கடலை அவனுக்குத் தெரியும். கடலோர விடுதியில் ஒரு விழாவுக்குப் போயிருந்த போது, எல்லாரும் மதிய உறக்கத்தில் இருக்க, அறையிலிருந்து நழுவி, மாமா மகனுடன் கடல்குச்சிகளும் சிப்பிகளும் பொறுக்கிவிட்டு கால்களில் உப்புநீர் எரியத் திரும்பிவந்த கடலைத் தெரியும்.

இப்படியாகத் தெரிந்த கடல்களின் நினைவுடன் வினோரா, தனது 17 வயதில், வீடு அவனைத் துரத்தத் தொடங்கியிருந்த போது, ஒருநாள், கடற்பகுதி இருக்கும் ஊருக்குப் பேருந்தேறினான். அந்தக் கடற்பகுதி ஊரின் பெயர் மட்டும் தெரியும். போய்த் திரும்புவதற்கான கட்டணம் அவனிடம் இருந்ததும் இன்னொரு காரணம்.

பேருந்துக்கும் அதுதான் கடைசி நிறுத்தம். வினோரா கடலைச் சந்திக்க விரைந்தோடினான். கடல் எங்கிருக்கிறது என்பதைக் கேட்க வேண்டியதில்லை.

ஒரு முட்டையில் இருப்பதைப் போலக் குழிந்து இருந்த கடலைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. இறங்கி கடலை நோக்கி நடக்கத் தொடங்கினான். சரிந்து விரிந்த மணல் பரப்பும் மணலில் மேலோங்கியிருக்கும் கருநிறமும் அலைகளோடு சேர்ந்தே அவனிடம் ஓலமிட்டன. வேறு சீதோஷ்ணத்துக்குள் அவன் உடல் நுழைந்துவிட்டது. பேருந்திருக்கும் ஊர் தொலைவில், மிகத் தொலைவில் என்று கடல் சொல்லியது. ஒரு சிறு பறவை கூட இல்லை. அலைகளைக் கால்கள் தொடப்போகும் தூரம் வருவதற்கு முன்பே வினோரா நின்றுவிட்டான். அங்கே ஆழத்தில் வனத்தில் வசிக்கும் பேருயிர்கள் எல்லாம் வினோராவை வா வா என்று அழைத்தன.

குழிந்து தன்னை வாங்கிக் கொண்ட கடல், சீக்கிரத்தில் மேல் ஓட்டால் தன்னை மூடிவிடும் என்று நினைத்தான். தனிமை மூச்சு முட்டத் தொடங்கியது. நொடி நீளத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினான்.

அவன் வந்து இறங்கிய பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. பேருந்து நிற்பதற்கான அனைத்து வஸ்துகளோடும் ஊர் காட்சியளித்தது. ஆட்கள் இருந்தனர். ஆனால், சத்தமே இல்லை. அவன் யாரையும் பார்க்கவில்லை.

தற்போது பார்த்த கடல் வேறு என்று அவனுக்குத் தெரிந்தது. தெரியாத கடல் ஒன்றுக்குள் இப்படித்தான் கால்பதித்தான் வினோரா.

வினோராவின் பயணம் தெரிந்த கடலிலிருந்து தெரியாத கடலுக்குத் தொடங்கியது.

Comments