மாடி வீட்டுத் திண்ணையில் அம்மா
லட்சுமி அக்காவை
கால்களுக்கிடையே உட்காரவைத்து
அவள் கூந்தலைப் பரப்பிச் சிக்கெடுத்து
பேன்பார்த்துக் கொண்டிருந்தாள்
பின்கட்டிலிருந்த திறந்தவெளியில் கைப்பிடிச்சுவரின்
அருகே நின்று
அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
கோடையின் இறுதியில் வரும்
மேல்காற்று தென்காசியில் தொடங்கிய நாட்கள் அவை
இருபது அடி கீழே
கீழ்வீட்டின் வானவெளி முற்றத்தில்
ஆற்றுமணலை ஈரத்தோடு குவித்திருந்தார்கள்
ராணி மேரி வீடென்று அதற்குப் பெயர்
அந்த வீட்டின் நடுவேயிருந்த
வானவெளி முற்றத்தில்
முக்கோணமாய் குவிந்திருந்த மணல் அவனைக்
கூப்பிட்டது
யாரும் அங்கே இல்லை
முதல்முறையாக
கைப்பிடிச்சுவரில் ஏறிக் குதித்தான்
கால்கள் நீண்டன
காரையில் பூஞ்சைபடர்ந்து கருப்பேறியிருந்த புராதனக்
கட்டிடச் சுவர்கள்
எல்லாம் துல்லியமாக அவனை விழுங்கத் தொடங்க
வயிறு குழைய
மணலில் செருகி விழுந்தான்
யாருமே பார்க்கவில்லை
மணலை உதறி எழுந்தான்
ராணி மேரி வீட்டிலிருந்த
குகையிருட்டில்
சுவரில் மாட்டியிருந்த இயேசு
ஜீரோ வாட்ஸ் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தார்
கல் முற்றத்தில் இறங்கி மாடிப்படியேறி
வீட்டுக்கு வந்தான்
அவன் உடலில் புதிதாக அரும்பியிருந்த
சாகசத்தை
அம்மா பார்க்கவே இல்லை
அம்மாவைக் கடந்து திரும்ப
பின்கட்டுக்குப் போனான்
ஹோவென்று மனம் சத்தம்போடத்
திரும்பக் குதித்தான்
ராணி மேரி வீட்டில் இப்போதும்
யாரும் பார்க்கவில்லை
மறுபடி மாடியேறி
பின்கட்டுக்குப் போனான்
மூன்றாம் முறையும்
ராணியையும் மேரியையும் தேடிப் பார்த்தான்
யாரும் இல்லை
அவர்களது அப்பாவையும் காணவேயில்லை
பின்மதியத்தில்
மிக உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்த
அந்தச் சிறுவனின்
சர்க்கஸை
அவனைத் தவிர
இதுவரை யாருமே பார்க்கவில்லை.
Comments