Skip to main content

ஆர்தர் ரைம்போவின் நரகம்
பதினாறு வயதுப் பருவத்தில் கவிதைகளில் மேதமை துலங்க எழுதத் தொடங்கியவன்; 21 வயதில் கவிதை எழுதுவதையும் துறந்தவன். கண்டங்கள் தாண்டிய பயணம், உறவுகள், வர்த்தகம் என்று தான் ஈடுபட்ட எல்லாவற்றிலும் சாகசத்தை நாடி, 37 வயதில் எரிநட்சத்திரம்போல இந்த உலகத்தை நீத்த அந்த பிரெஞ்சுக் கவிஞனின் பெயர் ஆர்தர் ரைம்போ. நரக வாழ்க்கையை நோக்கிய ஏக்கம் என்று சொல்லக்கூடிய படைப்பு ரைம்போவின் வசன கவிதை நூலான ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’.

உறவுகள், அன்றாட அனுபவங்களில் மனம் உணரும் வலி, வன்முறை, கசப்பு, துயரம் ஆகியவற்றை வெகுளித்தனம், களங்கமின்மையோடு வெளிப்படையாகச் சொல்லும் படைப்பு இது. சமூக நெறிகளும் சமய நெறிகளும் இருளென்று கருதும், தீமை என்று மூடி வைத்திருக்கும் உணர்ச்சிகளை அதன் மூர்க்கத்தோடு வெளிப்படுத்தியிருக்கும் படைப்பு இது. வலி, வேதனை, ஏக்கங்கள் நொதித்த மதுக்குடுவைகள்தான் ரைம்போவின் படைப்புகள். மனிதனின் இயல்புணர்ச்சிகள் அத்தனையும் திறக்கப்படும் இடமாக அவரது உலகம் உள்ளது. அதற்கு நரகம் என்று இங்கே பெயரிடப்பட்டுள்ளது.

நேசம், சகோதரத்துவம், மனிதாபிமானம், மன்னிக்கும் இயல்பு, சேவை ஆகியவற்றால் கட்டப்பட்ட ஒரு நாகரிகத்துக்கு, அந்த நாகரிகத்தின் அடையாளமாக உருவான கிறிஸ்துவை இன்றுவரை பரிசீலிக்கும் கலைஞர்கள் உண்டு. லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி முதல் நிகோலஸ் கஸாண்டாசாகி வரை சொல்லலாம். ஆனால், கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவ நெறிமுறைகளுக்கும் முன்னரான மனித இயல்பைத் தங்கள் வாழ்க்கை வழியாகவும், படைப்புகள் வழியாகவும் கிழித்துப் பரிசீலிக்கும் கலைஞர்களின் வரிசையும் வரலாற்றில் நீளமானது. சார்லஸ் போதலேர், லெர்மந்தேவ் முதல் ழான் ஜெனே வரை ஞாபகத்துக்கு வருகிறார்கள். இந்த மரபில் வருபவர் ஆர்தர் ரைம்போ. கிறிஸ்துவத்துக்கும் கிறிஸ்துவ நெறிமுறைகளுக்கும் முன்னால் என்று சொல்லும் போது இவர்கள் நவீனத்துவத்துக்கு முன்னரான பூர்வகுடிகளின் ஆற்றல், வேட்கை, அழகியல் ஆகியவற்றை இவர்கள் படைப்பிலும் தங்கள் சொந்த வாழ்விலும் சேர்த்துப் பரிசீலித்தவர்கள். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானிய எழுத்தாளர் யூகியோ மிஷிமாவையும் இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்ல முடியும். ஜப்பான் நவீனமடைந்ததை ஏற்காது, அங்கிருந்த பழைய சாமுராய் வாழ்க்கை முறையில் உள்ள ஆண்மை, வீரம் ஆகிய பண்புகளிலிருந்து அகற்றம் செய்யப்பட்ட மலட்டு தேசமாக நவீன ஜப்பானைப் பார்த்தார்.

ஆர்தர் ரைம்போவின் உலகில் கடவுள் இல்லை. நரகமும் சைத்தானும் அவரது இடமாகவும் உடனிருப்பாகவும் உள்ளனர். ரைம்போ அங்கேயிருந்து கிறிஸ்துவுடனான யுத்தத்தை நடத்துகிறார். யுத்தம் புரிபவர் கிறிஸ்து என்பதால் ரைம்போவின் மொழியும் வேதாகமம்போல தெய்வீகத்தன்மையையும் இசைமையையும் அடைந்துவிடுகிறது. அந்த இசைமை தமிழிலும் கூடியுள்ளது. அவரது கவிதை உள்ளடக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள அவற்றின் தலைப்புகளே போதுமானவை. தீய ரத்தம், நரகத்தின் இரவு, முட்டாள் கன்னிப்பெண், நரகத்தின் மணமகன்...

“சமய குருக்களே, பேராசிரியர்களே, எசமானர்களே, நீதியின் முன்னால் என்னைக் கொண்டு வந்ததன் மூலமாக நீங்கள் தவறிழைக்கிறீர்கள். நான் ஒருபோதும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை. நான் ஒருபோதும் கிறிஸ்தவனாக இருந்ததில்லை. சித்திரவதையின் காலத்தில் பாடிக்கொண்டிருந்த இனத்தினன் நான். உங்களுடைய விதிகள் எனக்குப் புரிவதில்லை. நீதியும் நியாயமும் என்னிடமில்லை, நானொரு விலங்கு. நீங்கள் தவறிழைக்கிறீர்கள்.” என்று எழுதுகிறார் ஆர்தர் ரைம்போ.

ஆர்தர் ரைம்போ தனது 19 வயதில், அன்றைய பிரெஞ்சு சமூகம் தடைவிதித்திருந்த ஒரு வாழ்க்கைமுறையிலிருந்து, போதையின் பிடியில் இந்தப் படைப்பை எழுதியிருக்கிறார். 1873-ல் இந்தக் கவிதைகள் புத்தகமாக வெளியான போது பாரிஸ் கலைஞர்கள் வட்டாரத்தில் எந்த மதிப்பையும் பெறவில்லை. அச்சான புத்தகங்களில் பெரும்பாலானவை ரைம்போவாலேயே கொளுத்தப்பட்டன. கவிதையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் அவர் வெளியேறிய பின்னர் 1901-ல் இந்த நூல் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டது. ஆர்தர் ரைம்போவை மகத்தான கவிஞன் என்று உலகத்துக்கு அடையாளப்படுத்திய இந்தக் கவிதைத் தொகுதி, மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடு கார்த்திகைப் பாண்டியனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழுக்கு அதிகம் தெரியவராத படைப்பாளியான ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை பற்றியும், அவரது கட்டற்ற ஆளுமை குறித்த தெளிவான குறிப்புகளும் இந்நூலில் உண்டு. அளவில் சிறிய நூல்; நம்முடன் வெகுகாலம் இதயத்தில் தங்கப்போகும் நிறையுடையது.

நரகமும் நரகம் சார்ந்த உணர்வுகளும் நரகங்களை அனுபவிக்கும் தொடர்ந்து அனுபவிக்க ஏங்கும் வரலாறும் கொண்டது நம் உடல். சொர்க்கத்தை விட அதிகம் உயிர்ப்பையும் துடிப்பையும் தருவது நரகம் தான். உயிர்ப்பும் துடிப்பும் தான் வாழ்வதற்கான சக்தியைத் தூண்டுவதால்  ஆர்தர் ரைம்போ போன்றவர்களின் படைப்புகள் கூடுதல் ஒளியுடையதாக மாறுகின்றன. 

Comments

Reiko said…
வினோதமான தீவிர மனக்கொந்தளிப்பு கொண்ட கவிஞர்