Skip to main content

எனக்கு சொல்



தேவாலயத்து வளாகத்துக்குள்
பிறந்து
அதற்குள்ளேயே சுற்றிவரும்
குட்டி நாய் அது
வேறு விசேஷமொன்றும் அதற்கு  இல்லை
தாய்ப்பால் இன்னும் கிடைப்பதால்
கொளுகொளுப்பு
கோலிக்குண்டு கண்களில் சுடரும் உயிர்ப்பு
மடிந்த ஒரு காது
கூடுதல் வசீகரம்.

நாக்கை வெளியே நீட்டியபடி
சுற்றிச் சுற்றி வருகிறது
அதன் நாக்கு அதன் வாலை விட
மற்ற நாய்களின் நாக்கை விட
பெரியது இல்லை
ஆனால்
குட்டிநாயின் கம்பீரம் குறும்பு
அதன் வெளியே தொங்கும் நாக்கு
என்று சொல்லமுடியும்.

நாள்கள் சென்றன
பிஸ்கெட் நிறம் கொண்ட
மிருதுவான கம்பளியொத்த அதன் சருமத்தில்
தூசி படரத் தொடங்கிவிட்டது
உண்ணிகளும் ஏறியிருக்க வேண்டும்.

சாயங்காலச் சூரியனின் கிரணங்கள்
அந்த மைதானத்தில் அனைத்தையும்
பொன்னாக்கும் போது
ஏதோ ஒரு தருணத்தில்
இந்தக் குட்டிநாய்
துள்ளும் குதிரையாகிறது
வளாகத்துக்குள்ளும் வாயிலுக்கும்
பெரும் கடமையை முடிக்கும் போர்வீரனாய்
அரக்கப் பரக்கப்
பாய்ந்து ஓடிவிட்டுத் திரும்பும்
இரண்டு மடங்கு உயரமுள்ள
பெரிய நாய்களையும்
சேனாதிபதி போல அப்போது மேய்த்து
நிர்வகிக்கும் அதிகாரம் அதனிடம் துலங்கும்
அப்போது
அதன் வெளித்தொங்கும் சிறிய நாக்கைத்தான் மகிழ்ச்சி
என்று மொழிபெயர்க்கிறேன்
குட்டி நாய்க்கு நாக்கு.

Comments