கவிதை என்பது அறிவு, விமோசனம், ஆற்றல், கைவிடுதல், உலகத்தை மாற்றுவதற்கான வலுவுள்ள நடவடிக்கை, தன் இயல்பில் கவித்துவச் செயல்பாடு புரட்சிகரமானது, கவிதை என்பது ஒரு ஆன்மிகப் பயிற்சி, அக விடுதலைக்கான வழி.
இந்த உலகை, கவிதை வெளிப்படுத்துகிறது, இன்னொரு உலகத்தை உருவாக்குகிறது. கவிதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான ரொட்டி, சபிக்கப்பட்ட உணவு. கவிதை தனிமைப்படுத்துவது, அது ஒன்றிணைப்பது.
கவிதை என்பது பயணத்துக்கான அழைப்பு, தாயகத்துக்கான திரும்புதல். கவிதை என்பது தூண்டுதல், சுவாசித்தல், தசைப் பயிற்சி. கவிதை என்பது பாழுக்குச் செய்யும் பிரார்த்தனை, கவிதை என்பது இல்லாததுடன் நடத்தும் உரையாடல்.
கவிதை என்பது சோர்வு, வேதனை மற்றும் விரக்தியால் போஷிக்கப்படுவது. கவிதை என்பது பிரார்த்தனை, கவிதை என்பது இறைஞ்சல், கவிதை என்பது புலப்பாடு, கவிதை என்பது தோன்றுதல். கவிதை என்பது மாந்திரீகம், கவிதை என்பது மந்திரித்தல், கவிதை என்பது மாயம். கவிதை என்பது உன்னதமாக்கல், கவிதை என்பது இழப்பீடு, கவிதை என்பது நனவிலியைக் கெட்டிப்படுத்துதல்.
இனங்கள், தேசங்கள், வர்க்கங்களின் வரலாற்று வெளிப்பாடு. கவிதை என்பது வரலாறை மறுப்பது : கவிதை என்பதன் சாரத்தில் அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்படுகின்றன. நிலையற்ற ஒன்று என்பதிலிருந்து மேம்பட்ட ஓர் இருப்புநிலை என்ற பிரக்ஞையை கடைசியில் மனிதன் அடைவதற்கு உதவும் சாதனம் கவிதை.
கவிதை என்பது அனுபவம், கவிதை என்பது உணர்வு, கவிதை என்பது உணர்ச்சி, கவிதை என்பது உள்ளுணர்வு, கவிதை என்பது இலக்கில்லாத சிந்தனை. கவிதை என்பது நிகழ்தகவு; கணக்கிடுதலின் பலன்.
கவிதை என்பது மேலான வழியில் பேசும் கலை; கவிதை என்பது ஆதி மொழி. கவிதை என்பது விதிகளுக்கு அடங்கிய ஒழுங்கு; கவிதை என்பது மற்றதை மற்றவர்களைப் படைப்பது. கவிதை என்பது புராதன மனிதர்களை நகல் செய்வது, கவிதை என்பது உண்மையைப் பிரதியெடுப்பது, கவிதை என்பது கருத்தின் பிரதிக்குப் பிரதியெடுப்பது.
கவிதையென்பது பைத்தியம், கவிதை என்பது பரவசம், கவிதை என்பது திருவாய்மொழி. கவிதை என்பது குழந்தைப்பருவத்துக்குத் திரும்புவது. கவிதை என்பது மைதுனம். கவிதை என்பது சொர்க்கத்துக்கான நல்நினைவு, கவிதை என்பது நரகத்துக்கான ஏக்கம், கவிதை என்பது திரிசங்கு நிலை. கவிதை என்பது விளையாட்டு, கவிதை என்பது பணி, கவிதை என்பது துறவுச் செயல்பாடு. கவிதை என்பது பாவமன்னிப்பு. கவிதை என்பது பிறவி அனுபவம். கவிதை என்பது தரிசனம், இசை, குறிப்பு. கவிதை என்பது ஒப்புமை : உலகின் இசையை எதிரொலிக்கும் கிளிஞ்சல். உலகளாவிய சீர்மையின் எதிரொலிகளும் தொடர்புறுத்தல்களுமே கவிதை. அளவைகள் ஒலி இயைபு எல்லாம் அதற்குத்தான்.
கவிதை என்பது போதனை, கவிதை என்பது ஒழுக்கம், கவிதை என்பது உதாரணம், கவிதை என்பது வெளிப்பாடு, கவிதை என்பது நடனம், கவிதை என்பது வசனம், கவிதை என்பது புலம்பல். கவிதை என்பது மக்களின் குரல், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மொழி, தனிமையின் வார்த்தை. கவிதை என்பது தூய்மையானது, கவிதை என்பது அழுக்கானது, கவிதை என்பது புனிதமானது, கவிதை என்பது வெறுப்புக்குரியது, கவிதை என்பது பிரபலமானது. அத்துடன் கவிதை என்பது சிறுபான்மையினருக்கானது, கவிதை என்பது கூட்டு வெளிப்பாடு. அதேவேளையில் அந்தரங்கமானதும். கவிதை என்பது நிர்வாணி, கவிதை என்பது உடை அணிந்தது, கவிதை என்பது சொல்லப்பட்டது, கவிதை என்பது வரையப்பட்டது, கவிதை என்பது எழுதப்பட்டது.
கவிதை, எல்லா முகத்தையும் காண்பிக்கிறது. ஆனால், அதற்கு முகமே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். பாழை மறைக்கும் முகமூடி கவிதை. ஒவ்வொரு மனித முயற்சியின் மிதமிஞ்சிய ஆடம்பரத்துக்கு அழகிய சாட்சியாக கவிதை உள்ளது.
(ஆக்டோவியா பாஸின் The Bow and the Lyre நூலில் உள்ள Poetry and Poem கட்டுரையின் ஒரு பகுதி)
Comments