'அரோரா' என்றால் வைகறை என்று அர்த்தம் சொல்கிறது. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்திலிருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப்பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு அரோரா என்று அழைக்கப்படுகிறது.
இயற்கையும், அதன் நெறியும் தன்னிடமுள்ள புதிரை அதிசயத்தை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகிறது. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாமென்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதன் மாறுதல்களை, தனிச்சுயத்தின் கண்கள் வழி, விளக்கங்கள் வழிப் பகுக்காமல் இயற்கை, வெளி, காலத்தின் நீண்ட வெளியில் வைத்துக் காணும் பார்வை, விளையாட்டு அல்லது ஞானம் இவரது கவிதைகளில் நிகழ்கிறது. அப்படி நிகழும்போது தெரியும் விடியல் அல்லது துருவமுனை சோதியைத் தான் சாகிப்கிரான் அரோரா என்கிறாரோ?
சாகிப்கிரான் கவிதையில் நிகழ்ச்சியும் அனுபவமும் தொடர்வதில்லை; கதையாவதற்கு முன்னரே துண்டிக்கப்படுகிறது. கவிதை என்பது சொல் ஆல் ஆனது; கவிதை என்பது வார்த்தை ஆல் ஆனது என்பதை சாகிப்கிரான் மறுபடியும் வெகுகாலத்துக்குப் பின்னர் நினைவூட்டுகிறார். சிறகிலிருந்து பிரிந்த இறகுதான் பறவையின் சரித்திரத்தைத் தீட்டுகிறது.
ஆற்றின் இயற்கையை கால்கள் உணர்வதற்கு பாறைகளைத் தான் தாண்ட வேண்டும். அதுவே மொழியின் சிறந்த அனுபவம். பாலம் கட்டப்படும் போது அது கருத்து அனுபவமாக மாறிவிடுகிறது. அந்தப் பாலத்தில் சமூகம் நடக்கட்டும். துடிக்கும் சின்னஞ்சிறு சொற்கள் தரும் அனுபவம் 'அரோரா'.
அன்பு
அமைதியோ பேரமைதியோ
ஒரு கடுகு இரைந்து ஓடிக் கொண்டேதானிருக்கும்
அன்போ பேரன்போ
ஒரு சொல் மிகச் சின்னஞ்சிறு
சொல் துடித்தபடியே தானிருக்கிறது.
ஒரு சின்னஞ்சிறு பறவை
கொத்தும் வரை
நிகழும் இரைச்சலில்
மெல்ல ஆடிக் கொண்டிருக்கிறது
பொறி..
000
மாநகரின் வீதி வழியே
நாய் ஓடிக்கொண்டிருக்கிறது
கொட்டி வழியும்
மழையை மீண்டும் மீண்டும்
சிலிர்த்தபடி விரைகிறது
சாலை
இருமருங்கிலும் ஆயிரம் கண்கள்.
இப்படித்தான்
மழையைக் கடந்துவிடும்போல
ஓடி.
000
‘அரோரா' தொகுப்பில் ஆரம்பத்தில் உள்ள இரண்டு கவிதைகள் இவை. இரைந்து ஓடிக் கொண்டிருக்கும் கடுகும், மழையை மீண்டும் மீண்டும் சிலிர்த்தபடி மழைக்கு ஊடாக மழையைக் கடக்கும் நாயும் வேறு வேறு இல்லை. நாம் வாழும் உலகத்தை நாசம் செய்யவல்ல, அனுபவம் என்று நாம் வைத்திருக்கும் கதை வரிசைகளைக் குலைத்துப் போடும், அணுகுண்டின் ஆற்றலுடன் கடுகும் நாயும் இரைந்தோடிக் கொண்டிருக்கிறது. நாயும் கடுகும் வைத்திருக்கும் வேலையோ கடமையோ நெறியோ இந்த உலகத்தால் ஏவப்பட்டது அல்ல.
நாய்க்கும் கடுகுக்கும் இந்த உலகத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?
இருமருங்கிலும் வரலாற்றின் ஆயிரம் கண்கள் வெறித்துப் பார்க்க தேசத்தின் குறுக்குவெட்டு நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்படித்தான் கடக்கின்றனர். நமக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டா?
கோடிக்கணக்கான மக்களின் பசிக்கு அரசு நிர்வகிக்கும் தானிய சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்படாத போது, நானூறு மடங்கு கூடுதலாக இந்த ஆண்டு மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகள் வட இந்திய வயல்களைத் தாக்கி நாசம் செய்கின்றன. வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கும் திறக்கப்படாத தானியக் கிடங்குகளுக்கும் தொடர்பு உண்டா?
வரலாறு என்றும் சமயம் என்றும் தத்துவம் என்றும் அறிவு என்றும் அரசு என்றும் காப்பியங்களென்றும் கொடுங்கோன்மையுடன் நீண்டிருக்கும் மாநகரின் வீதி வழியே, வரலாறு என்றும் சமயம் என்றும் தத்துவம் என்றும் அறிவு என்றும் அரசு என்றும் காப்பியங்களென்றும் கொடுங்கோன்மை படிந்திருக்கும் ஆயிரம் கண்கள் பார்க்க, மழையை அதன் ஒவ்வொரு துளியையும் சிலிர்த்தபடி விரைந்து மழையை நாய் ஓடிக் கடக்கும். கவிதையும் தான் அந்த நாய்.
000
இசையின் நிழல்
நெடிய
கடல் ஏழு
மலை ஏழு
கடந்தந்த
சமவெளியடைந்தேன்.
என் நுழைவை
வீழ்த்த முனைந்து
நகமுடைந்து வீழ்ந்த
அச்சிங்கம்
மிகப் பழகியதாகத் தோன்றியது.
பிறகு
மெல்ல நெகிழ்த்திக் கொள்கிறது
ஒரு பழுப்பு
இடையே
நெளிந்தது பேராறு.
தனித்த கரையில்
இளமர நிழலில்
பிடரி கோதும்
அவ்வெளியில் எப்போதும்
இருந்து கொண்டிருக்கிறது
ஒரு மிருகம்
கடிகையின் ஒவ்வொரு
மணலும்
ஒரு மானைக் கொல்கிறதா?
ஓர் அரசனைக் கொல்கிறதா?
அல்லது
தன்னை மேலும்
கீழும் இசைவாக்கிக் கொள்கிறதா?
மூங்கில் புதர்
காற்றை
உள் வாங்கிக் கொண்டந்த
இசை.
000
புதையல் பயணமெனத் திகழ்கிறது கவிதை. நெடிய கடல் ஏழு மழை ஏழு எது, சமவெளி எது, நகமுடைந்து வீழ்ந்த பழகிய சிங்கம் எது? பழுத்த இலை நெகிழத் தெளியும் பேராறு எது? மானும் அரசனும் கொல்லப்படும் போது இம்சை தெரியவில்லையே.
கவிதை தோற்றுவிக்கும் நிலவெளி பொன்னெனப் புதிதாக ஒளிர்கிறது. பரிச்சய உலகத்தின் சாயலே இல்லை. ஓவியமாக, இசையாக திரவ உருக்கொண்டு மாறி மாறிக் கோலங்கள் காண்பிக்கிறது கவிதை.
எங்கிருந்து இவையெல்லாம் அங்கே தோன்றுகின்றன? இதற்குப் பதில் அடுத்த கவிதையில் கிடைக்கிறது. அது இங்குள்ள வாழ்வின் ரகசியத்தையும் திறக்கிறது.
வானவில்
உணவு சுவைக்காக
உடை ரசனைக்காக
இப்படி
காதல் ஒரு ரகசியம்.
தருணம் கைக்கொள்ள
தவிப்பு கண்டடைய
எனவே
வாழ்வு ஒரு அதிசயம்.
எதிரி வெற்றி கொள்ள
உறவு பங்கிட்டுக் கொள்ள
அதனால்
பகை ஒரு நிரந்தரம்.
தத்துவம் ஒரு சமவெளி
குழப்பம் மலையுச்சி
இது
சிகரங்களை மெச்சுகிறது.
ஞானம் பகிர முடியாத வெளி
தீவிரம் எளிய தொற்று
படைப்பு
தீராத வெற்று.
என் புத்தகங்கள்
எரிந்த ஒளி
அழகு
உன் முகம் அவ்வளவு.
இது எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்
ஆனால்
ஒளியின் வேகம்
ஒரு
நிலை.
நிலைத்த நிலை.
000
இந்தக் கவிதை, அறிவு எரிந்த ஒளியில் தோன்றும் அழகை, தீர்ந்துவிடாத எப்போதுமிருக்கும் காலிக் கருப்பையை அங்கிருந்து பிறப்பெடுத்துக் கொண்டேயிருக்கும் உயிரின் துடிப்பை, வேகத்தைப் பார்த்துவிடுகிறது.
சாகிப்கிரானின் முந்தைய கவிதைத் தொகுதியைப் படிக்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அரோரா கவிதைத் தொகுப்பின் கவிதைகளில் புத்தர் நபராகவும் குணமாகவும் தென்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அன்பின் நிழல் கவிதையில் நீதிபதியாகவும் தீர்ப்பு சொல்லப்படும் அப்பாவியாகவும் நபராகத் தென்படுகிறார்.
‘அரோரா' கவிதைகளில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அடுத்தடுத்து மாறுதல், துண்டிப்பு மற்றும் புதுத்தன்மையைக் கொள்ளும்போது குணமாகவும் புத்தர் தோன்றிக் கொண்டிருக்கிறார்.
‘அரோரா' தொகுதியின் இரண்டு சிறந்த கவிதைகளில் புத்தர் குணப்பருண்மை கொள்கிறார். தருண புத்தர் என்று அவரை அழைக்கலாம்.
நற்குணம்
உனக்கு இது
எதுவும்
தெரிவதில்லை.
தெரிந்ததெல்லாம்
மரமும்
அதன் நிழலும்தான்.
நிழலைக் கொண்டாடுகின்றாய்
நிழலை ஆச்சரியப்படுகிறாய்
நிழலின் குரல் வழியே
அந்த மரத்தைத் தழுவிக் கொள்கிறாய்.
வெளியும் ஒளியும்
நீ கவனிக்கத் தவறியவை.
அந்த இரவு
நீ பதறிப் போனாய்
நிழலற்ற
அம்மரம் உனக்கு
அந்நியமாயிருந்தது.
பிரபஞ்ச நிழலை
உன்னால் கொண்டாட முடியாதுதான்
பரந்து விரிந்த
அதன் கரங்கள்
உன் கண்களிலிருந்து தொடங்குகிறது.
வெளிறிய பால்வெளி
கோடானு கோடி
சொற்களில் மிதங்குகிறது.
உன்னால் நம்ப முடியாதுதான்
நீ மீண்டும் மீண்டும்
அந்த மரத்தையே நம்புகிறாய்
அது இலைகளை உதிர்த்து
உன்னைச் சருகாக்குகிறது.
நீ நம்புகிறாய்
நம்பிக்கைதான் மரத்தின் வேராக
ஒரு விடியலுக்காகக் காத்திருக்கிறாய்.
வெள்ளி முளைத்துவிட்டது
இனி அற்புதம்தான்
அந்த இடுங்கிய செடியின் நிழலுக்காய்
ஓர் எறும்பு தன் கொம்புகளை நீட்டி
இந்தப் பிரபஞ்ச நிழலை
ஏந்தி தொலைவோ தொலைவில்
வீச எத்தனிக்கும் கணம்வரை
நானும் நம்புகிறேன்.
என்றாவது ஒருநாள்
குளிர்ந்த ஒரு இரவு
உன்னைப் புடம் பண்ணும்
அப்போது நான் நம்புவேன்.
கிழவன் சுமந்தலையும்
மணற்கடிகையில்
இன்னும் கொஞ்சந்தான்
நொடிகள் மீந்ததாக ஒரு
விண்மீன் எரிந்து வீழ்கிறது.
கடிகையின்
ஒற்றைச் சுழற்றலில்
கிழவன் குழந்தையாகிறான்.
ஆனால்
எல்லாவற்றையும் நம்பிவிடுகிறது
எறும்பு.
நீ
நிழல்
நான்
ஒரு மணற்கடிகை.
இப்படித்தான்
ஒரு நிகழ்வை
வெறித்துப் பார்க்கும்
அரூபச் சொல்லொன்றின்
நற்குணம்.
000
எனக்கு இந்தக் கவிதை முழுமையாகப் புரியவில்லை. ஆனால், முழுக்கப் புரியாமலேயே இந்தக் கவிதை ருசியாக உள்ளது. இதில் சொல்லப்படும் காட்சிகள் கண் முன்னர் விரியும்போது அமைதியும் பிரமாண்ட உணர்வும் ஏற்படுகிறது. கவிதை சொல்லி, எனக்குத் தெரியாததை அறிந்தவராக உள்ளார். அவர் பார்க்கும் விஸ்தீரணத்தில் உலகை, நிகழ்ச்சிகளை நான் பார்க்கவில்லை. ஆனால் பார்க்க முடியாத பிரபஞ்சத்தின் நிழலும் அதன் கரங்களும் வாசிப்பரின் கண்களிலிருந்துதான் தொடங்குகின்றன என்கிறார். மரம் எதைக் குறிக்கிறது. தனது கொம்புகளால் பிரபஞ்ச நிழலை வீச எத்தனிக்கும் அந்த எறும்பு என்ன? எல்லாவற்றையும் ஏன் அந்த எறும்பு நம்புகிறது?
சொற்களின் சம்பந்தத்தில் சொற்கள் மீதான நம்பிக்கையில் இருத்தல் கொள்ளும் பால்வெளி வெளிறத் தானே செய்யும். இப்படித்தான் சொல்லாகச் சொல்லப்படுவதற்கு முன்னர், வெறித்துப் பார்க்கும் அரூபச் சொல் நற்குணம் கொண்டதாக ஆகமுடியும்.
000
வலசை
காக்கையின் ஒடிந்த காலுக்கு
மருத்துவம் பார்க்கும்
தீனதயாளன்
புறக்கடையில் வைத்திருக்கும்
உண்டிவில்லை யாரும்
பார்த்ததில்லை.
எல்லோரும் நம்புவது
அது பறந்து போகும்போது
தங்கம் கனக்கு சுரை விதையுடன்
திரும்பும் என்பதே.
தயாளனும் இப்படித்தான்
காக்கையின் மறதியை
பெரிதும் நம்பியிருக்கிறார்.
ஆனால்
பறவை தன்கால்
நன்றாகட்டும் என்றிருக்கிறது.
ஏனென்றால்
பறவைக்கிருப்பது தனித்தியங்கும்
கூட்டுமனம்.
எனது இறக்கைகளை
தோலுக்கடியில்
மறைத்து வைத்திருப்பதை
சுண்டிவில்லைப் போலவே
யாரும் கண்டு கொள்ளவில்லை.
அடையாளமற்ற
பிரதேசங்களின் நெடிய
ரகசியங்களை மிகத்
தொலைவிலிருந்தே நான்
அறிவேன்.
நீங்கள் நினைப்பதுபோல இல்லை.
நானொரு
குருடன்
செவிடம்
ஊமை.
இதுவே
அதன் சாத்தியம்.
000
சாகிப்கிரானின் கவிதைகளில் தென்படும் புத்தர் வெளியே ஏற்கெனவே அறியப்பட்டிருக்கும் புத்தர் அல்ல. கவிதைக்கு அருகே இருக்கும் ஒரு தருண புத்தரை சாகிப்கிரான் படைத்திருக்கிறார். அங்கே எதுவும் தனியாக இல்லை. எல்லாம் எல்லாவற்றோடும் இணைந்திருக்கிறது. மரம் இலைகளை உதிர்க்கும்போது, அதை நம்பியிருந்தவன் அதனாலேயே சருகாகிறான். பறவைக்கு இருக்கும் தனித்தியங்கும் கூட்டுமனம் என்பதை அந்தப் புத்தரால் பார்க்க முடிகிறது.
கண்டங்களைத் தாண்டிப் பயணிக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் வெட்டுக்கிளிகளுக்கும் இருப்பது தனித்தியங்கும் கூட்டுமனம் தானே.
அடையாளமற்ற பிரதேசங்களின் நெடிய ரகசியங்களை மிகத் தொலைவிலிருந்தே கவிதைக்கு நெருங்கிய அந்தப் புத்தனால் அறிய முடியும். தொலைவில் நடப்பதை முகர முடிந்த, தொலைவில் இருப்பதைத் தொட முடிந்த கவிதைக்கு நெருக்கமான புத்தன், அதனாலேயே பார்க்காதவனாக கேட்காதவனாக பேசாதவனாக, குறைவாய் நுகரும் புத்தனாகத் தென்படுகிறான்.
ஆனால் அவன் இன்னொன்றைப் பார்க்கிறான்; வேறு ஒன்றைக் கேட்கிறான்; பேச முடியாததைப் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
000
புலன்களுக்கும் மனத்துக்கும் புலப்படாத, அப்பாற்பட்ட, ஆனால் நமது வாழ்க்கை இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள உலகங்கள் மற்றும் அவற்றின் இயக்கங்களையும் அங்ககமாக இணைத்துக் கொண்ட சாகிப்கிரானின் கவிதையுலகம் தமிழுக்குப் புதிது அல்ல. பிரமிள், அபி, தேவதச்சன், ஆனந்த், ஷா அ, எம். யுவன் என்று நீளும் மரபில் வருபவர் சாகிப்கிரான் என்று வகுக்க முடியும். அறிவியல் மற்றும் தத்துவத்தின் கரையில் நிற்கும் விந்தை இவர்கள் ஏற்படுத்தும் பொது அனுபவம். சி. மணியின் நேரடிப் பரிச்சயமும், அவர் மொழிபெயர்த்த தாவோ தேஜிங்கின் அடிப்படைகளும் சாகிப்கிரானின் மேல் தாக்கத்தைச் செலுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
அறிவின் பயனின்மையும், அறிவு எரிந்த பிறகே தோன்றும் அழகு குறித்த துக்கமும், எல்லையற்றதின் மீதான திகைப்பும் சாகிப்ரானின் கவிதையில் தென்படுகிறது. சில சமயங்களில் அனைத்தையும் உதறிவிட்டு இயற்கையின் நீதியுணர்வில் அழகில் உண்மையில் நம்பிக்கையுடன் அமர்கிறது. அங்கே அறிவது வேறு. அது அமைதி. கடுகு இரைவது போல, ஆயிரம் கண்களுக்கு இடையே நாய் ஓடுவது போல ஒரு அமைதி சாகிப்கிரானில் கவிதையில் சாதிக்கப்பட்டுள்ளது. இது சமீபகாலத்தில் சாத்தியப்படாத அமைதி.
அதியமான் என்றொரு இரவு
ஒரு கனி பங்கிடப்படும் போது
வழமையான கத்தியின் கூர்
பனியைப் போல் சிரிக்கிறது.
ஒரு துண்டாட்டத்தில்
பழம் மட்டுமல்ல கொட்டையும்
சிதைகிறது.
இரண்டு மூன்று நான்கு ஐந்து என
பனி வீசிச் சிரிக்கும் போது
நூற்றாண்டு மரமொன்றோ
சித்தன் போற்றும் செடியோ
ஒரு துளி மழையோ
அல்ல
பங்கு மிகச் சிறியதாகப்
பிரிக்கப்படுகிறது.
முழுமையான பங்கீடும் அதுதான்
பங்கிடுதல் மிக நுட்பமானது.
சாகிப்கிரானுக்கு எனது அன்பு.
Comments