Skip to main content

வினோராவின் நறுமண பீரோ



தினசரி மரணங்கள் நேரும் ஊர் அது. பற்றாக்குறையும் அஞ்ஞானமும் ஜனங்களாக வாழும் தெருவில் துக்கமும் சலிப்பும் நித்தியமாக வசித்த வீடு வினோராவுடையது. அந்த வீட்டின் கடைசியில் படுக்கையறையின் மூலையில் ஒரு பீரோ இருந்தது. வினோராவின் அப்பா அந்த பீரோவைத் திறக்கும்போதெல்லாம் சிறுவன் வினோரா எட்டிப் பார்ப்பான். அவனுடைய அப்பா அவனை அறையிலிருந்து வெளியே விரட்டி விடுவார். பீரோவிலிருந்து வரும் நறுமணத்தை மட்டும் வினோரா குழந்தையாக உணர்ந்திருக்கிறார். பெரியவராகி விட்ட வினோராவும் படுக்கையறைக்குள் புகுந்து பீரோவைத் திறக்கும் போது குழந்தைகளை அனுமதிப்பதில்லை. அப்போது வரும் உலகில் இல்லாத குணம் கொண்ட கணநேர நறுமணத்தை மட்டும் வீட்டார் அறிவார்கள்.

வினோரா, பீரோவைத் திறப்பார். உள் அறைச் சாவியை மேல்தட்டிலிருந்து எடுத்துச் சிறிய கதவைத் திறப்பார். மென்பட்டில் செய்யப்பட்ட பூக்கள் வரையப்பட்ட தேனிலவு உள்ளாடை, வேதாந்தத்தின் அத்தனை ரகசியமும் குளிகையாக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு தாள் இருக்கும் சிறு பேழை, ரத்தினக் கற்கள் பதுக்கப்பட்ட குழந்தைகளின் கொலுசு ஜோடி, ஒரு சொட்டு பருகினால் போதும், இறவாமையைத் தரும் ஒரு குட்டி நீர்ச்சுனை எல்லாம் இருந்தது.

எதையும் தொடாமல் வினோரா பீரோவைப் பூட்டுவார். நறுமணமும் அரிதும் உள்ளேயே தங்கிவிடும்.

வீட்டுக்குள் தெருவுக்குள் ஊருக்குள் மறுபடியும் உலவத் தொடங்கிவிடுவார் வினோரா.

Comments