வேதாகமம் தொடங்கி ஆட்டோவின் முதுகு வரை நுண்மொழிகளும் பொன்மொழிகளும் நமக்கு இன்றைக்கும் அன்றாடத் தேவையாகவே உள்ளது.
க்ஷணப் பொழுது உண்மைகள், நித்திய உண்மைகள், அவரவர் தொடர்புடைய, அவரவரின் அவ்வப்போதுடன் தொடர்புடைய அனுபவத்தைச் சார்ந்த உண்மைகளைப் பிரதிபலிப்பதாக இந்த நுண்மொழிகள் இயங்குகின்றன.
‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவருகளுககோ ஒரு நன்மையும் குறைவுபடாது.’
பாளையங்கோட்டைக்குள் நுழையும்போது, தேவாலயச் சுவரில் பேருந்து கடக்கும்போதெல்லாம், சிறுவயதில் என் மீது தாக்கம் செலுத்திய இந்த வரிகள் இப்போது ஒன்றும் செய்யாது. அப்படியா என்று கேட்டுவிட்டுக் கடந்துவிடுவேன்.
எனது கருத்துலகம், படைப்புலகத்தை வடிவமைத்த ஆசிரியர்களில் ஒருவரான காஃப்காவின் நுண்மொழிகள் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, பல நுண்மொழிகள் அந்தரங்கத் தன்மை கொண்டவை. எனக்கு அவை எதையும் தொடர்புறுத்தவில்லை. ஆனால், காஃப்காவின் உலகில் உள்ள வஸ்துகள், தொடர்ந்து அவரைப் பாதிக்கும் விஷயங்கள் உண்டு. காகம் தென்படுகிறது. காஃப்காவின் வாழ்க்கையிலேயே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிய காலத்தில் எழுதப்பட்டது என்ற குறிப்பு கே. கணேஷ்ராம் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
நுண்மொழிகளில் ஒருபகுதி முழுவதும் வேதாகமத்தோடு தொடர்பு கொண்டதாகவும், ஆதிபாவம் தொடர்பான கதைக்கான பதில்களாக இடையீடுமாக உள்ளது. அவரது குறுங்கதைகளின் சாயலையும் பார்க்க முடிகிறது.
உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடையும் போது மீளுதல் என்பது இராது. அந்தப் புள்ளியை அடைவதே லட்சியம் என்ற நுண்மொழி இருக்கிறது. பூனை துரத்தும் எலியை வைத்து இதை வேறுவிதமாக எழுதியிருக்கிறார் காஃப்கா. எலி பூனைக்குப் பயந்து ஓடிக்கொண்டேயிருக்கும். ஒரு மூலையென்று நினைத்து, நின்று இளைப்பாறப் போகும் தருணத்தில் பூனையின் வாய் ஆவென்று திறக்கும்.
காஃப்காவின் ஆளுமையாலும் தமது படைப்புகள் வழியாக கோடரி போல நமது கபாலத்தில் அவர் இறக்கும் உண்மைகளாலும் தீண்டப்பட்டவர்களுக்கு சில நுண்மொழிகள் தலையில் இறங்குபவையாகவே இருக்கும்.
இந்த நுண்மொழிகளிலேயே நெருக்கமான ஒன்றாக இருந்தவொன்றை இப்போதைக்குப் பகிர்கிறேன்.
தீமையின் வலிமைமிக்க கவர்ச்சிகளில் ஒன்று
போராட்டத்திற்கான அழைப்பு.
அது பெண்களுடன் நடக்கும் போராட்டத்தைப் போன்றது
இறுதியில் படுக்கையில் முடிவுறும்.
இங்கே, அது பெண்களுடன் நடக்கும் போராட்டத்தைப் போன்றது என்பதை, அது ஆண்களுடன் நடக்கும் போராட்டத்தைப் போன்றது என்று போட்டாலும் உண்மையில் எந்தப் பாதகமும் விளைவதில்லை. இரண்டு எதிரெதிர் பண்புகள் கொண்ட வஸ்துகள், கருத்தியல்களாகவும் நீட்டித்துப் பார்க்கலாம். கூடுவது தானே உச்சபட்ச மதிப்பைக் கொண்ட அம்சமாக உள்ளது.
ஆனால், இந்த நுண்மொழி மிக அதிர்ச்சியைத் தருகிறது. மிகக் குரூரமாக இருக்கிறது. அது உண்மையாகவும் இருப்பதால் கூடுதல் வேதனையையும் தருகிறது.
கவர்ச்சி இல்லையென்றால் அது தீமையாக இங்கே இருக்க முடியுமா? அப்படியென்றால் போராட்டம் என்பது என்ன? இங்கே தொடரும்
தீராத முரண்பாடுகளுக்கான நியாயமும் நிஜத்தன்மையும் பயனும்தான் என்ன? மாற்று என்ன?
தீமையுடனான போராட்டம் மட்டுமின்றி நாம் கொள்ளும் வன்மங்களையும் குரோதங்களையும் இதில் நீட்டித்துப் பார்க்கிறேன். கவராத எதனிடமும் எவரிடமும் வன்மமோ குரோதமோ கொள்ள முடிவது சாத்தியமே இல்லை. கடப்பதே சாத்தியம். காமுறுதலின் முகமூடிகள் தான் விலக்குவதும் அருவருப்பதும் எதிர்ப்பதுமா?
குஞ்சுண்ணி எழுதிய நான் அடிக்கடி நண்பர்களிடம் நினைவுகூரும் கவிதை ஒன்று இதுதொடர்பில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும்
அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் அலுவலகங்களிலும் சட்டம், நீதி, கருத்தியல், கலை, சமயம், அரசியல், கருத்தியல், லட்சியங்கள் எனச் செயல்படும் எல்லா கேந்திரங்களிலும் இந்த வாசகத்தை இன்று நாம் பொறித்துவிடலாம். அது நமக்கு நம்மைப் பற்றிய ஒரு மாபெரும் நினைவூட்டலாக இருக்கும்.
அனைவருக்கும் பொதுவான நுண்மொழிகள் என்பது குறைந்துவரும் காலத்தில், எல்லாருக்குமான நீதி என்பது கனவாகி விட்ட காலத்தில் இதில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. இந்தியர் நம் எல்லாரையும் பிணைக்கும் பொது அம்சம் அதுதான்.
காஃப்கா சொல்வதும் குஞ்சுண்ணி உரைப்பதும் சங்கடமானதுதான். குரூரமானதுதான். ஆனால், அதுதான் உண்மை.
இந்த உண்மையிலிருந்து இந்த உண்மையை முழுமையாக தனது உடம்புக்குள் இறக்கிய பின்னர் ஒருவன் அலுப்புற்று நிற்க வேண்டியதில்லை. முழுவிழிப்புடன் திரும்பத் தொடங்கவும் செய்யலாம். அதற்காகத் தான் குஞ்சுண்ணி மாஸ்டர், காஃப்கா போன்ற கோடரிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
Comments