ரெய்னர் மரியா ரில்கேயின் தி டூயினோ எலிஜீஸ் காவியத்தின் ஏழாம் பகுதியில் இருந்து சி. மோகனுக்கான இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
உங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளி உள்ளது
அது
ஒருமணித்துளியாகக் கூட இல்லாமல் இருக்கலாம்,
காலத்தின்
விதிகளால் அளக்கப்படாத ஒருவெளி அது
இரண்டு
தருணங்களுக்கு இடைப்பட்டது- அங்கேதான் நீ இருந்தாய்.
முழுமையாக.
இருப்பால் நிறைந்திருக்கிறது ரத்தநாளங்கள்.
சி.
மோகனின் உலகநோக்கு, இலக்கியப் பார்வை, விமர்சனங்கள், படைப்புகளுடன் ஓரளவு நெருங்கிய
பரிச்சயமுள்ளவன் என்ற வகையில் அவரது ஒட்டுமொத்த ஆளுமையையும் அதலபாதாளத்தில் வீழ்தலின்
வசீகரத்தால் தாக்கமுற்றது என்று வரையறுக்க முயல்கிறேன்.
அவரைச்
சிறுவயதில் பாதித்த இலக்கிய ஆளுமையான ஜிநாகராஜன், பின்னர் தாக்கமுற்று நாவலாக எழுதிப்
பார்த்த ஓவிய மேதை ராமானுஜம் ஆகியோரைப் பரிசீலிக்கும்போது, அவர்களது கலைப்படைப்புகள்
மட்டுமின்றி பின்விளைவுகளோ பலன்களோ கருதாத அவர்களது சாகசமும், பித்தும் சி. மோகனைப்
பெரிதாக ஈர்த்துள்ளது.
சி. மோகன் தனக்காகத் தேர்ந்து கொண்ட வாழ்க்கையிலும்
நாகராஜன் போன்ற கலைஞர்களின் சாயல்களை தன்மேல் படரவிட்டுள்ளார்.
வாழ்க்கையின்
ஒவ்வொரு எட்டையும் யோசித்து தந்திரோபாயங்களுடன் திட்டமிட்டுச் சூழல்கள், சந்தர்ப்பங்கள்,
வரம்புகள் என நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குள் வாழும் வாழ்க்கை அவரது ஈடுபாட்டுக்குரியதல்ல
என்பது அவரது விமர்சனங்களையும் படைப்புகளையும் வாசிக்கும் போது தெரிவது.
விதிவகையில்
அல்லது விதியின் கையில் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்காமல் சுதந்திரவிருப்பில், அது கொடுக்கக்கூடிய
அபாயத்தைப் பற்றிக் கவலையின்றி அவரது மொழியிலேயே சொல்லவேண்டுமானால் சல்லென்று இயல்புணர்ச்சியில்
பறப்பது அல்லது சரிவதை அல்லது அப்படிப் பறக்கும் சரியும் ஆளுமைகள் மீது அவர் ஈடுபாடு
கொண்டிருக்கிறார் என்பது அவர் தொடர்பில் நான் வந்துசேர்ந்திருக்கும் கணிப்பு.
சுதந்திர
விருப்பின் அடிப்படையிலான வாழ்க்கை, விதியின் வரம்புக்குள் வாழும் வாழ்க்கை என்பதைப்
பரிசீலிக்கும்போது எதிரெதிரான இரண்டு நிலைகளாக முதலில் தோன்றுகிறது.
ஆனால்
சுதந்திர விருப்பு அல்லது சுதந்திரத்தேர்வு என்பதின் சாத்தியத்தையும் வரம்பையும் பரிசீலிக்கும்போது
சுதந்திரத்தேர்வு, விதிவழிவாழ்வு என்ற இரண்டு புள்ளிகளும் கொஞ்சம் குழம்பி நடுங்கத்
தொடங்குகின்றன.
சி. மோகனின் சிறுகதைகளைத் திரும்பவாசிக்கும் இந்நாட்களில்
தற்செயலாக ஓவியன் வான்கோவின் விரிவான வாழ்க்கை சரிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வான்கோவின் மூதாதையர், வான்கோவின் குழந்தைப்பருவம், இளம்பருவம் எல்லாம் துல்லியமாக எழுதப்பட்ட அவனது வாழ்க்கையின்
செய்திகளைப் படிக்கும்போது ஒருவிஷயம் எனக்குத் தெளிவானது.
வின்சென்ட்
வான்கோ பிறந்த வருடத்துக்கு ஒருவருடம்முன்பு, பிறந்தநாளுக்கு முந்தைய நாளில் அவர் அம்மாவுக்கு
பிரசவத்திலேயே ஒரு குழந்தை இறந்து பிறந்துள்ளது. இறந்து பிறந்த அந்தக் குழந்தையின்
பெயரும் வின்சென்ட் வான்கோ தான். அந்தப் பெயர் கொண்ட கல்லறையில் தன் பெயர் உள்ளதை வின்சென்ட்
வான்கோ பார்த்திருக்கிறார். ஐரோப்பாவில் மரித்த குழந்தையின் பெயரை அடுத்த குழந்தைக்கு
வைப்பது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது.
வின்சென்ட் வான்கோவின் குழந்தைப் பிராய்த்தைப் பார்க்கும்போது,
மற்ற குழந்தைகளைவிட அவர் அம்மாவால் கூடுதல் பிரயாசையுடனேயே அவர் வளர்க்கப்பட்டிருக்கிறார்.
ஆனால்
அவர் சிறுவயதிலிருந்து தனிமை உணர்வுடனேயே இருந்திருக்கிறார். பாலியல் ரீதியான உடல்
உந்துதலின் தீவிரத்தை விட தனிமையைத் தீர்க்கத்தான் விலைமாதுக்களை அவர் நாடுவதாகத் தம்பியிடம்
பகிர்ந்துகொண்டிருக்கிறார். உடல் ரீதியான விருப்பு என்பது மிகப் பலவீனமானது என்கிறார்.
அவனது தனிமை, அவன் எதிர்கொண்ட புறக்கணிப்புகள், அவனது
ஏக்கம், நட்பு, மன உற்பாதங்கள், பரிதவிப்பு, துரதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்துதான் அவனை
மரணத்தை நோக்கியும் அமரத்தன்மை கொண்ட படைப்புகளை நோக்கியும் இழுத்துச் சென்றதென்று
தோன்றுகிறது;
கரமசோவ்
சகோதரர்களில் டிமிட்ரியை அந்த இரவில் இழுத்துச் செல்லும் குதிரைவண்டியைப் போல. அவன்தான் தந்தை கரமசோவைக் கொன்றிப்பான் என்று தோன்றும்படி
,எத்தனை தடயங்களை அவன் அந்த இரவில் விட்டுச் செல்கிறான்? அவன் தன்னைச் சூழவிருக்கும் துரதிர்ஷ்டத்திலிருந்து
தப்பிக்க நினைத்துதான் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறான் என்பதுதான் அதில் முரண்நகை. டிமிட்ரி
தப்பித்தானா என்ன?
வான்கோவின்
வாழ்க்கையும் அவருக்கு நிகழ்ந்த அகால முடிவும் அப்படித்தான் இருக்கிறது; அப்படித்தான்
ஜி. நாகராஜனின் வாழ்க்கை இருக்கிறது; ஆர்தர் ரைம்போவின் வாழ்வைப் படிக்கும்போது அதேபோலத்
தான் உள்ளது. அப்படித்தான் ராமானுஜத்தின் வாழ்க்கையும் ஆத்மாநாமின் வாழ்க்கையும் இருக்கிறது.
வான்கோவின் ஓவியங்களைப் பார்க்கும்போது ராமானுஜத்தின் படைப்புகளையும் நாகராஜனின் படைப்புகளையும்
பார்க்கும்போது அவர்கள் வாழ்வில் நடந்ததை துரதிர்ஷ்டங்கள் என்று துல்லியமாக வரையறுத்துவிடவோ
மொழிபெயர்க்கவோ முடியாமல் உள்ளதோ, அதேபோலவே அது அவர்களது சுதந்திர விருப்பு அல்லது
தேர்உ என்றும் துல்லியமாகச் சொல்லிவிடமுடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
சி.
மோகனின் ஓடிய கால்கள் சிறுகதையில் வரும் ராஜன், முள்ளாலான வாழ்வின் மேல் விழுந்துவிட்டேன்,
ரத்தம் சிந்துகிறேன் என்று ஷெல்லியின் கவிதை வரிகளைத் தனது இறுதிநாளில் ஏன் சொல்லவேண்டும்?
வான்கோ
என்ற மாபெரும் கலைஞனும் அவனது துயர வீழ்ச்சியும் ஒவ்வொரு முனையிலும் சரியானபடி பூட்டப்பட்ட
இரண்டு குதிரைகள் போலத்தான் அவன் உயிர் பூட்டப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது எனக்கு.
வான்கோ என்ற ஓவியனின் வாழ்க்கை அவனது சுதந்திர விருப்பா?
வான்கோ
என்ற கலைமேதையும் பித்தும் இணைந்த வண்டியில் பூட்டப்பட்டது அவன் விதியா?
ஆமாம்,
ரில்கே சொல்வது போல, சுதந்திரமோ விருப்பத் தேர்வோ, அடிமைத்தனமோ, ஒப்புக்கொடுத்தலோ,
துயரமோ, சிறையிருப்போ எதுவாக இருந்தால்தான் என்ன?
இருப்பின்
பூரண உணர்வால் நிறைந்திருக்கிறது நமது ரத்த நாளங்கள் என்றுதானே நமது இருப்பை நாம் கருத்தளவில்
ஏற்றாலும் மறுத்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வளவு கீழ்மை நிலையிலும்
இடர்பட்ட நிலையிலும் சீரழிக்கப்பட்ட வேளைகளிலும் வாழ்க்கை அந்தத் தருணத்தின் மதுரத்தைக்
கொடுத்துக்கொண்டு தானே இருக்கிறது.
அதனால்தான்
அது மாயாஜால நிகராகத் தோன்றி சாமானியர்களையும் மகாகலைஞர்களையும் மயக்கிக் கொண்டே இருக்கிறது.
இதில்
எதன், யாரின் தரப்பில் நாம் கருப்பு அங்கி அணிந்து வாதாடமுடியும்?
சுதந்திரவிருப்பு,
மடத்தனமான ஒப்புக்கொடுத்தல், லட்சியத்துக்கும் அ-லட்சியத்துக்கும், விதிக்குக் கட்டுப்பட்ட
சாமான்யமென்று கருதப்படும் வாழ்வுக்கும் இடையில் அல்லாடும் இருப்பின் ரகசிய வேட்கையாகத்
தான் சி. மோகனின் கதைகளாகப் பார்க்கிறேன். அவரது கதையில் வரும் நாகத்தைப் போல அது வேட்கை,
லட்சியம் என்ற பிளவுண்ட நாக்கை வசீகரமாகச் சுழற்றிக் கொண்டே இருக்கிறது. நம்பிக்கை
– அவநம்பிக்கை, ஒப்புக்கொடுத்தல் – தப்பித்தல், வளமை - வறட்சி என இரண்டிரண்டாக பிளந்த
நாக்குகளாக சி. மோகனின் கதைகள் எனக்கு முன்னால் தன்னை அவிழ்த்துக் காட்டுகின்றன.
நிலவெளி
அச்சத்தில் வரும் அந்த இடதுசாரி, சாபத்துக்கும் அதை மறுக்கும் பகுத்தறிவுக்கும் இடையே
சிறுவயதிலிருந்து அல்லாடி சாபத்துக்குள்ளேயே மீட்சியின் பாதையைக் கண்டடைகிறான். இந்தக்
கதையில் இயற்கையாக அந்த முரண் ஒரு நாடகமாக உருவாக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கண்ணாடி
அறையில் அதே முயற்சி, கதைத் திட்டமாகச் சரிந்துவிடுகிறது.
சி.
மோகனின் கதைகள் பெரும்பாலானவற்றின் மையம் கனவுகளில் சூல் கொண்டிருக்கிறது. வலுவான கனவுகளில்
ஆழ்மனத்தின் சமிக்ஞைகளை, நடமாட்டங்களை, செய்திகளைப் பார்க்கமுடியும். கண்ணாடி அறை,
மஞ்சள் மோகினி போன்ற கதைகளில் பகல் கனவுகளாகச் சரிந்து விடும் அபாயமும் நேர்கிறது.
ரகசிய வேட்கை முதல்பதிப்பாக வெளிவந்த காலத்தில் என்னை வசீகரித்த கண்ணாடி அறை இப்போது
மங்கலாகியிருக்கிறது. நிலவெளி வேட்கை முன்னால் நகர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
நிலவெளி வேட்கையையும் கடல் மனிதனின் வருகையையும் ஒரு இடத்தின் இரண்டு வாசல்களாகப் படிக்க
முடியும். அப்படி வேறு வேறு சூழல்களில் எழுதிய கதைகளை எனக்கு பருவங்களைப் போலக் கோர்ப்பது
சுவாரசியமாக இருந்தது. ஒரு சுயசரிதைத் தன்மையுடன் ஒரே தொனியில் பேசும் கலைஞன் தான்
பெரும்பாலான கதைகளின் மையம். அந்தக் கலைஞன் என்ற சுயபிம்பத்தை உருவாக்கும் முனைப்பில்
சரிந்த கதைகள் என்று கண்ணாடி அறையையும், உயிர்மீட்கும் தருணத்தையும் சொல்வேன். சிதைவு,
ஓடிய கால்கள் போன்ற ஒரு சிறுகதையாக ஆகியிருக்க வேண்டியது. சுருண்டு கிடக்கிறது.
மரணம்,
லட்சியம், வளமையுடன் பெண் உடனான இணைவும் மீட்சியின் தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஓடிய
கால்கள், நிலவெளி வேட்கை, நாகம், கடல் மனிதனின் வருகை போன்ற சிறந்த கதைகளின் மையமாக
உள்ள கனவுகள் அடர்த்தி கொண்டு சிறுகதையின் முழுமையைச் சூடிவிடுகின்றன. நிலவெளி வேட்கை
ஒரு நாவலுக்கான நிறை கொண்டது. பொன் வைக்க வேண்டிய இடத்தில் சிறுகதை என்னும் பூவை வைத்தாலும்
மினுங்கும் சிறுகதை தான் அது. துவக்க காலக் கதைகளில் மருதாயிக் கிழவியின் பைகள் நல்ல
சிறுகதை. மரணவாடை, அம்மாவின் மரணம் கதையிலும் அந்தச் சிறுவனின் பகல்கனவை மரணம் ஆட்கொள்கிறது.
அந்த மரணத்தைத்தான் அடுத்து வரும் லட்சியமும், பெண்களும் வந்து நிரப்புகிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக்
கதைகளைப் படிக்கும்போது, கதைமொழி ஒரே குரலில், வகைமையையோ, விதவிதமான மொழிபுகளையோ முயற்சிக்காமல்,
பண்புப் பெயரடைகளால் சூழப்பட்ட விவரணையாக கொஞ்சம் சோர்வை ஊட்டுகிறது. சிறுகதையின் வடிவம் சார்ந்து தேர்ந்த பிரக்ஞை செயல்படும்
சி. மோகன் அதிகம் கதைகளை எழுதாததற்கு காரணம் அவரது சொல்களஞ்சியத்தின் வரையறையும், உள்ளடக்கம்
சார்ந்த வளமையின்மையும் என்று தோன்றுகிறது.
சி.
மோகன் எழுதிய சிறுகதையான ஓடிய கால்கள், அவர் செரித்த அனுபவத்தின், தாக்கமுற்ற ஆளுமையின்
திரட்சியான சாட்சியாக, தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிலைபேற்றுடன்
திகழக்கூடியது. ஜி நாகராஜனைப் பற்றி அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, திலீப்குமார்,
பிரபஞ்சன் ஆகியோர் எழுதிய சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவை. அந்த வரிசையில் அவர்கள்
எல்லாரும் அடித்தது பவுண்டரி என்றால், சி. மோகனுக்கு ஜி நாகராஜனின் வாழ்க்கைக்களன்
ஒரு சிக்சரை வழங்கியிருக்கிறது.
ஓடிய
கால்கள் சிறுகதையின் துவக்கத்தில் வரும் காகங்கள் தொடர்பிலான கனவே தனியான காஃப்காவியக்
கதையாக உருக்கொள்வது. மொழியும் லயமும் கூடி எல்லா முனைகளிலிருந்தும் மைய இரையை நோக்கிக்
குவியும் கவனம் எல்லாம் அமர்ந்திருக்கும் கதை.
யோகம்
என்பது எல்லாம் சரியாக அமர்வதுதான்.
இன்று
காணும் பரட்டைத்தலை சிறுகதைகளுக்கு மத்தியில் ஓடிய கால்கள் கதை, பாடமாகப் படிக்கப்பட
வேண்டிய கதை ஆகும்.
சி.
மோகனின் ஆளுமையில் ஒதுங்கிவிட்ட அவரது இளம்வயதின் களங்கமின்மையையும் லட்சியத்தையும்
ஓடிய கால்கள் கதையில் எனக்குப் பார்க்க முடிவது பிரத்யேகமான அனுபவம்.
அந்தக்
களங்கமின்மைக்கும் அந்த லட்சியத்துக்கும் எனது பணிவான சலாம் சி. மோகன்.
எனது
19 வயதில் சி. மோகனின் நடைவழிக் குறிப்புகள் கட்டுரைத் தொடர் வழியாக ஒரு லட்சிய ஆளுமையாக
அறிமுகமாகி, மிக வாத்சல்யத்துடனும் காதலுடனும் விமர்சனங்களுடனும் தொலைவுடனும் தொடரும்
உறவாக இருக்கிறது. என்னிடம் ஏதாவது நல்லது என்ற ஒன்றை அடையாளம் காணமுடிந்தால் அது லக்ஷ்மி
மணிவண்ணனும், சுந்தர ராமசாமியும், சி. மோகனும், விக்ரமாதித்யன் போன்றவர்களும் அளித்த
பிச்சை. பழைய தமிழ்ப் பாடல்களை எல்லாம் கேட்கும்போது எனது அம்மாவின் ஞாபகமும் சி.
மோகனின் ஞாபகமும் இல்லாமல் என்னால் கேட்கமுடியாது. நான் இப்போது கடக்கும் வயதில் சி.
மோகனைப் பார்த்தேன். அந்த சி. மோகன் என்னிடம் இன்னமும் வசீகரமாக இருக்கிறார்.
அதை
இந்தத் தருணத்தில் நினைவுகூராமல் நான் வீடுதிரும்ப முடியாது.
Comments