Skip to main content

குடியானவனின் ஜென்மகாயான பெளத்தத்தின் பிரிவான ஜென் தத்துவம், சீனாவில் பிறந்த காலகட்டத்திலிருந்த தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எழுதிய நூறு கவிதைகள்தான் 'குளிர்மலை' என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. ஹான்ஷான் என்ற பெயரின் அர்த்தம் குளிர்மலை என்று பொருள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஜென் துறவியும் கவிஞருமான ஹான்ஷானின் கவிதைகளைப் படிக்கும்போது, வழக்கமாக நாம் படிக்கும் தாவோயிய, ஜென் கவிதைகளிலிருந்து ஒரு வித்தியாசம் துலக்கமாக உள்ளது.

இயற்கையோடு பேதப்படாத மனத்தின் ஏகாந்தம், வாழ்க்கை குறித்த பூரண ஞானம், தெளிவு, சலனமின்மை போன்ற குணங்கள் ஹான்ஷானிடம் இல்லை. ஹான்ஷானின் கவிதைகளில் ஒரு அறிவாளியும் ஏழைக் குடியானவனும் சேர்ந்த ஒரு ஆளுமை தென்படுகிறான். அவன் முகமிலி அல்ல. புறவாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மை சார்ந்து அனுபவிக்கும் பாகுபாடுகள் விரக்தியுடனும் சஞ்சலத்துடனும் இந்தக் கவிதைகளில் பதிவாகின்றன. ஹான்ஷான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கங்கள், மனிதர்கள், உயர்குடிகள், புழங்குபொருட்கள், நம்பிக்கைகள், பழங்கதைகள் எல்லாம் இந்தக் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அதனால்தான், ஹான்ஷானை நவீனத்தோடு அடையாளம் காண முடிகிறது. அதே வேளையில் இல்லாமை, பேதங்கள், நிராசை எல்லாவற்றையும் தாண்டி அனுபவங்களை ஒரு தொலைவிலிருந்து பார்க்கும் ஒரு குரல் தணிந்த அமைதி உணர்வை இந்தக் கவிதைகள் எழுப்புகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லாப் பின்னணிகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் மனிதர்களைப் பிணைக்கும் மாறாத அம்சத்தைத் தொட்டு மீள்வதால் இதைப் பழங்கவிதை என்ற அந்தஸ்துடன் படிக்கத் தேவையில்லை.

மகிழ்ச்சி, இளமை, புகழின் நிலையாமை, அதிருப்தி, தாபம், அங்கீகாரமின்மை, பொருளில்லாதவருக்கு இந்த உலகம் இல்லை என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகள், திரும்பத் திரும்ப இந்தக் கவிதைகளில் வேறு வேறு பின்னணிகளில் இடம்பிடிக்கின்றன. விளக்குகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றப்பட்ட விருந்தில் இருட்டான பகுதிக்குத் தள்ளப்படும் ஏழை ஒருவன், அதிகப்படியான ஒளிக்கீற்றைப் பெற்றுக்கொள்ளக்கூட சினம் கொள்கிறீரே என்று கேட்கிறான்.

இத்தனை சங்கடங்களையும் மீறி, கவிஞனும் கவிதைகளும் தேவதாரு மரங்களில், ஓடைகளில், மலர்களில், ஒளிரும் செர்ரிப் பழங்களில் மாண்டரின் வாத்துகளில் ஞானமென்றும் மோனமென்றும் விளக்க இயலக்கூடிய குளிர்மலையில் இளைப்பாறுகின்றன. இவ்வுலகம் அளிக்கும் வேதனைகளைத் துளையிட்டுப் பிளக்கும் சிட்டுக்குருவியின் கொம்பைப் போல ஹான்ஷானின் கவிதைகள் விடுதலையைச் சில தருணங்களில் கெக்கலிக்கின்றன. ஒரு தூர தேசத்தையும், தியான்-டாய் என்னும் பெயரையும், அங்கே ஒரு கனவு வீட்டையும் அமைக்கிறார் கவிஞர். அந்த வீடோ, தேவதாரு மரத்தின் இலைகளால் கட்டப்பட்ட வீடு என்கிறார். தற்போது உலகின் உதவியுடன் அவர் வாழக் கற்றுக்கொண்டேன் என்கிறார். அந்த இலைகளால் ஆன வீடு எதுவென ஹான்ஷானின் கவிதைகளை முழுக்கப் படிக்கும் வாசகர் தெரிந்துகொள்வார்.

மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள்தான் அதிகபட்சம்; ஆனால், அவன் ஆயிரமாண்டு இன்னல்களைச் சுமக்கிறான் என்னும் கவிஞர், வண்டிச் சக்கரம் உண்டாக்கிய தடத்தில் சிக்கிய மீனைக் காப்பாற்றுவதற்கு ஒரு அகப்பை நீரை ஊற்ற நாதியில்லை என்கிறார். மனித உயிரின் வேதனையும்தான் அது. இவ்வுலகம் தரும் இன்னல்களிலிருந்து தற்காலிகமாகவேனும் இளைப்பாறுவதற்கு அடைக்கலம் கொள்வதற்கு உலகியற்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவு அவருக்குக் குளிர்மலையாகத் தென்படுகிறது.

புத்தப் பிரபஞ்சத்தின் நடுவில் ஓங்கியுயர்ந்து நிற்கும் மாபெரும் மலையாக சுமேரு மலை இந்தக் கவிதைகளில் ஒன்றில் குறிப்பிடப்படுகிறது. அதைத் தூரத்திலிருந்து ஒரு சிறிய கவண் கல்லைப் போலப் பார்ப்பதாகச் சொல்லும் குடியானவன் ஹான்ஷான் ஆக இருக்கக்கூடும். அந்தக் கவிதை கொள்ளும் அடக்கத்தில்தான் ‘குளிர்மலை’ கவிதைகள் இப்போது, இங்கு நமது கவிதைகளாகவும் மாறுகின்றன. மொழிபெயர்ப்பாளர் சசிகலா பாபு அந்த த்வனியை தமிழில் பெயர்க்க முயன்றிருக்கிறார். தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள போகன் சங்கர், பாஷோ போன்ற ஓரிரண்டு பெயர்களே தமிழில் ஜென் கவிதைகள் சார்ந்து அறிமுகமாகியுள்ளன என்று போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார். எனது ஞாபகத்திலிருந்தே, எம்.யுவன் பெருந்தொகையாக ‘பெயரற்ற யாத்ரீகன்’ என்ற பெயரில் குறிப்பிடத்தக்க அளவில் ஜென் கவிதைகளை இதற்கு முன்னர் மொழிபெயர்த்திருக்கிறார். சீனா சார்ந்து ‘தாவோ தேஜிங்’ என்ற மூலப்படைப்பை சி.மணியும், சீனக் கவிதைகளை சுந்தர ராமசாமியும், கொரியக் கவிதைகளை ப.கல்பனாவும்,

பா.இரவிக்குமார் போன்றோரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் தமிழில் நிகழ்ந்துவருகின்றன.


Comments

Popular posts from this blog

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்? உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும்.  அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்? நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்