Skip to main content

நான் வெளியேற முடியாத கதை


வீடு திறந்திருந்தது. அம்மா வேலையிலிருந்து வரும் நேரம் அல்ல இது. அதிசயமாக அப்பா வீட்டில் இருந்தார். சைக்கிள் தார்சாவில் நின்றிருந்தது. யூனிபார்மை மாற்றிவிட்டு உடனடியாகக் கிளம்பச் சொன்னார். ஏதோ சரியில்லை என்பது மட்டும் அப்போதைக்கு தெரிந்தது. சைக்கிளில் பார்வதி தியேட்டர் ஆர்ச்சைக் கடக்கும்போதுதான், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். வயிற்றுவலியாகத் தான் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அம்மா இந்த வயிற்றுவலியுடன் சிரமப்பட்டாள். ஆசையாக ரவை உப்புமாவை கூடுதலாக ஒரு பங்கு சாப்பிட்டுவிட்டாலும் துடித்துப் போய்விடுவாள். என்.ஜி.ஓ காலனி மாமா வீட்டிலிருந்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுத் திரும்பும்போது கோவில் வாசலில் வண்டி நிற்கும்போது மயங்கி தெருவிலேயே விழுந்து விட்டாள். அங்குள்ள கடைக்காரர்கள் தான் முதலுதவி செய்து அனுப்பிவைத்தார்கள். அம்மாவுக்கு எப்போது வயிற்றுவலி வருமோ என்று எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கும். இரண்டு மாதத்திற்கு முன்புகூட ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்தாள். ஒரு நாள் இரவு நானும் அப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவளுக்கு டிரசும் பிளாஸ்கும் கொடுத்துவிட்டு வந்தோம். அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் அம்மாவை தனியே விட்டுவிட்டு வரவே பிடிக்கவில்லை. ஆனால் அப்பாவிடம் பிடிவாதம் பிடிக்கமுடியாது. அழுதால் அடிப்பார்.  அம்மா நர்சாக வேலை பார்க்கும் டிஸ்பன்சரி காம்பவுண்டுக்குள் அப்பா சைக்கிளில் நுழைந்தார். மரங்கள் அடர்ந்த பாதை. எப்போதும் அமைதியாக இருக்கும். சைக்கிளை நிறுத்தியவுடன் இறங்கி நர்ஸ் ரூமுக்கு சென்றேன். பிலோமினா அத்தை தான் முதலில் வரவேற்றார். அம்மா அந்த அறையின் மூலையில் பச்சை துணியால் பிரிக்கப்பட்ட இடத்தில் கட்டிலில் படுத்திருந்தாள். குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அம்மா என்னைப் பார்த்து ஏதாவது சாப்பிட்டியா என்றாள். இல்லை ஸ்கூல் விட்டதும் அப்படியே வந்துட்டேன் என்றேன். அம்மா கையில் நிறைய கலரில் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். காலையில் சுப்புலட்சுமி சித்தியின் வளைகாப்புக்குப் போயிருந்தாளாம். நான் இதுவரை அம்மா கண்ணாடி வளையல் அணிந்து பார்த்ததில்லை.நான் வந்து முன்புறம் உட்கார்ந்து கொண்டேன். என் அப்பா அமைதியாக குனிந்தபடி உள்ளே நுழைந்தார். அப்பா பெண்களிடம் நிமிர்ந்து பேசமாட்டார். என்ன சிஸ்டர் மறுபடியுமா என்று கேட்டபடி,  என் அம்மா படுத்திருந்த இடத்துக்குப் போனார். நான் மருந்து மணம் வீசும் அந்த அறையில் வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது உள்ளே அப்பாவும் அம்மாவும் பேசும் சத்தம் கேட்டது. பிலோமினா அத்தை சட்டென்று உள்ளே போனாள். கண்ணாடித்துண்டு உடைக்கும் சத்தம் உள்ளிருந்து கேட்டது. அதைப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தார் பிலோமினா அத்தை. மிகுந்த சங்கடத்துடன் பக்கத்திலிருந்து ஆயா வசந்தியிடம் அபார்ஷன் ஆயிருக்கு அவளுக்கு. அப்பப்போய் அவளை இப்படி பாடாய் படுத்தறாரே என்றாள்.அப்பா, அம்மாவை அடிப்பது எனக்கு தினசரி வழக்கம்தான். ஆனால் படுக்கையில் இருக்கும் அம்மாவை, ஏன் அடிக்கவேண்டும் என்று தெரியவில்லை. அப்பா வெளியே போய்விட்டார்.நான் மிகவும் தயங்கி அம்மாவின் கட்டிலுக்கு அருகே போனேன். அம்மாவின் கைகளில் சின்ன சின்ன ரத்தத் துளிகள். என்னைப் பார்த்தபடி அழுதுகொண்டேயிருந்தாள். கண்ணாடி வளையல்கள் அப்பாவுக்குப் பிடிக்காது.


நன்றி: நீட்சி, ஆசிரியர் - பாலை நிலவன்


Comments