Skip to main content

திருமிகு. காக்கையாரே


ஒரு முரட்டு ஓட்டத்துக்குப் பிறகு

மனமே உடலாகி

வீட்டின் இரும்புக் கேட்டுக்கு முன்னால் வந்து

முட்டிகளைப் பிடித்து இரைத்து நின்றேன்

அதிகாலை இருட்டில் நடைக்கு

கிளம்பியபோது இருந்த

தெருவும் வேம்பும்

சற்று நெருக்கத்தில் துலங்கியதை

விரியப் பார்த்தேன்

தெருவின் நடுவே எறியப்பட்டிருந்த

இறந்த எலியின் வயிற்றில்

உறிஞ்சியைப் போல்

கூர் அலகைச் செலுத்திக் கொத்தி

சிவந்த குடலை உருவியிழுத்தது கருப்புக் காகம்

திருமிகு. காக்கையாரே

உங்களுக்கு இது நற்கணம்

எனக்கு இதுவோ திங்கள்

இந்த வாரம் மகத்தான நல்வாரமாக அமைய

வாழ்த்துகிறேன்

காக்கையாரே.  

Comments