புதுமைப்பித்தனுக்கு பத்தாண்டுகள் முன்னர் பிறந்து புதுமைப்பித்தனைப் போல இளம்வயதில் மறைந்தவர் ஜப்பானிய சிறுகதைக் கலைஞர் ரியுனொசுகே அகுதாகவா. இவரது ஆறு கதைகளை கே. கணேஷ்ராமின் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது, எரியும் ஆன்மாவிலிருந்து உருவான படைப்புகள் என்று விவரிக்கத் தோன்றுகிறது. காஃப்கா, சாதத் ஹசன் மண்டோவின் கதையுலகத்துக்கு நெருக்கமான உலகம் அகுதாகவாவினுடையது. தீமை, அச்சம், துயரம், சோர்வு, மரணம் என்ற நரகமாகத் வாழ்வைக் காணும் கண்கள் வழியாக விவரங்களோடும் அடர்த்தியோடும் வசீகரத்தோடும் தீட்டப்பட்ட கோரச் சித்திரங்கள்.
‘சுழலும் சக்கரங்கள்’ தொகுப்பில் உள்ள முதல் கதையும், இத்தொகுதியில் மற்ற கதைகளை ஒப்பிடும் போது எதார்த்தமாக எழுதப்பட்ட கதையுமான ‘ராஷோமான்’ கதையிலேயே அகுதாகவாவின் படைப்பாளுமை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.
ஜப்பானின் தொன்மையும் அதனுடன் மோதும் நவீனமும் மோதிப் பிளக்கும் சுயம் தான் அகுதாகவா. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரமான கியோட்டோவின் கோட்டை நுழைவுவாயில், சிதிலமாகி திருடர்களும் நரிகளும் அனாதைப் பிணங்களும் அடைக்கலம் கொள்ளும் காட்சி சித்தரிக்கப்படுகிறது. அகுதாகவா, கியோட்டோ நகரத்தை சமீபகாலமாகப் பலவீனப்படுத்தி வருவதாகச் சொல்லும் பூகம்பங்கள், பஞ்சம், தீ விபத்துகளோடு நவீனத்தையும் சேர்த்தே சொல்லாமல் சொல்கிறார். ஒரு காலத்தில் சிகப்பு நிற வண்ணத்தால் குழைத்துப் பூசப்பட்ட வண்ணத்தூணில் வண்ணம் உதிர, ஒரு வெட்டுக்கிளி மட்டும் அதைப் பற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கனத்த சித்திரத்தை எழுதும்போது, வெளித் தெரியாத எதார்த்தத்தையும் காட்சியையும் கண்டுவிடுகிற வான்கோ போன்ற ஓவியனை அகுதாகவாவில் காண்கிறோம். மகத்துவம் பலவீனப்பட்டு நோயுற்று மரணத்தின் வாயிலில் நிற்கும் நுழைவாயில் வழியாக அகுதாகவாவின் படைப்புலகில் நுழைகிறோம்.
இந்த நூலில் சிறந்த படைப்பான ‘சுழலும் சக்கரங்கள்’ சிறுகதை, ரியுனொசுகே அகுதாகவாவின் மேதமையையும் அவரது ஆளுமையையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் கதையாகும். சிறுவயதில் தாயின் மனநோயைப் பார்த்த கதைசொல்லி, தானும் அதேபோல மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோவோம் என்ற அச்சத்தால் துரத்தப்படும் கதை. அகுதாகவாவும் மனநலம் பாதித்து மருள்காட்சிகளுக்கு ஆட்பட்டு மருந்துகளுடனேயே நாட்களை கழித்து 35 வயதில் தற்கொலை செய்துகொண்டவர்தான்.
இந்தக் கதைக்கு இணையான, இதைவிட சற்று உயரமான ஒரு கதை தமிழில் எழுதப்பட்ட ‘வெள்ளைப்பல்லி விவகாரம்’. லக்ஷ்மி மணிவண்ணன் என்ற அரிய படைப்பாளி தமிழில் நிகழ்த்திய சாதனை அந்தச் சிறுகதை. நமது அதிநவீனத்துவர்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்காமலேயே, அலட்சிய மௌன இருட்டுக்குள் வீற்றிருக்கும் கதை. தீமையின் ஆற்றலும், மினுமினுப்பும் கொண்ட கதை அது. அறிவின் இடையறாத விழிப்பும் பித்துநிலையும் பிரக்ஞையின் எல்லைகளை மோதிக் கிழிக்கும் விபரீதத்தில் அபத்தம், அதீதம், பைத்தியம் என்னும் உயிர்கள் மொழிக்குள் ஏவிவிடப்பட்ட கதை அது. பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த ‘வெள்ளைப் பல்லி விவகாரம்’ கதை இன்னும் கடக்கப்படாதது. ஆர்தர் ரைம்போ, பாதலேர், லெர்மந்தேவ், அகுதாகவாவுடன் லக்ஷ்மி மணிவண்ணனை இணைக்கும் சரடு ஒன்றுண்டு. கிறிஸ்துவத்துக்கு முன்னர் இருந்த பூர்வ மனித இயல்பு, மனித அம்சம் தொலைந்து விட்டதான உத்தேசம் தான் இவர்களது படைப்புகளின் விசையாகவும் அதில் தொழில்படும் வாதையாகவும் உள்ளது. சமகாலத்தை பிசாசாக உருவகித்துத்தான் தங்களது பூர்வ மூர்க்கங்களை இவர்கள் மீட்டு படைப்புக்குள் தக்கவைத்துக் கொள்கின்றனர்.
வரலாறு, கலாசாரம், அமைப்புகள், பார்வைகள், விழுமியங்களில் மாற்றங்கள் ஏற்படும் போது அது ஒவ்வொரு சமூகத்திலும் வலிகளை, சுமைகளை, பைத்திய நிலையை ஏற்படுத்துகின்றன. இந்தியா பிரிவினை செய்யப்பட்ட போது நடந்த அவலங்களின் அத்தனை சுமைகளையும் தனது சுயத்தில் இறக்கி பிரிவினை மானுடத்தில் ஏற்படுத்திய பைத்திய நிலையை படைப்புகளாக்கியவர் சாதத் ஹசன் மண்டோ. அவன் கதைகளில் நகரங்கள் எரிவதைச் சித்திரமாகப் பார்க்கிறோம்.
பௌத்தம் சார்ந்த பண்பாட்டையும் விழுமியங்களையும் கொண்ட ஜப்பானிய வாழ்க்கையில் நவீனத்துவமும் கிறிஸ்தவமும் சேர்ந்து ஏற்படுத்தும் தாக்கத்தை அந்த மாற்றங்கள் உருவாக்கும் அச்சுறுத்தலும் பைத்தியமும் தான் அகுதாகவாவைப் பிளக்கிறது. பிளந்த ஒரு சுயத்தைத் தான், இரண்டாவது சுயம் இரண்டாவது சுயம் என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார். ‘சுழலும் சக்கரங்கள்’ கதையில் மழைக்கோட்டு அணிந்து மரணம் வரை துரத்தும் பேயை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு திரில்லர் திரைப்படத்தைப் பார்ப்பது போல, பயம் பார்க்கும் அனைத்தையும் கடக்கும் அனைவர் வழியாகவும் அனைத்தின் வழியாகவும் வெளிப்படுகிறது. தாந்தேயின் நரகத்திலுள்ள மரங்கள் அவனுக்கு எதிர்படுகின்றன. படிக்கும் கதைகளிலுள்ள கதாபாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாம் ஊசிகளைப் போல அவனைக் குத்துகின்றன. குற்றமும் தண்டனையும் நூலுக்குள் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் பக்கங்கள் இருக்கின்றன. சாத்தான் இவானைத் துன்புறுத்தும் பகுதிகளைக் காண்கிறார். கோரத்தின், மரணத்தின், தீங்கின் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கதை எதார்த்தத்திலிருந்து மேலெழுந்து முற்றிலும் புனைவு உருவமாக ஆகிறது. ஒளி அல்ல, கடவுள் அல்ல, ஒளி அற்ற இருட்டு தான், சாத்தான் தான் சாசுவதம் என்று அகுதாகவா கூறும்போது வசீகரமாகவே உள்ளது. “எதுவும் எல்லாமும் பொய்யே என்று உணரத் தலைப்பட்டேன். அரசியல், வணிகம், கலை, விஞ்ஞானம் இப்பீதி பீடித்த பயங்கரமான உலகின் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும் பொய்கள் இவை.” என்ற கூற்றைப் பார்க்க முடியும் இந்தக் கதையின் கதைசொல்லியும் ஒரு எழுத்தாளனாகவே வருகிறான்.
வாழ்க்கை முழுவதும் உலோபியாய் வாழ்ந்து அதனால் நரகத்துக்குச் செல்லும் கிழவியை, அவள் வாழ்நாளில் ஒரே ஒரு ஏழைக்குக் கொடுத்த வெங்காயத்தின் மூலம் காப்பாற்ற நினைத்த கடவுளின் கதை,‘சிலந்தி இழை’யில் புத்தரின் கதையாக மாற்றம் பெற்றிருக்கிறது. நரகத்தின் ரத்த ஆற்றில் துடித்துக் கொண்டிருக்கும் கந்தாதனை, அவன் சிலந்தி ஒன்றுக்குச் செய்த நற்செயலின் பெயரால் காப்பாற்ற நினைக்கிறார். சொர்க்கத்தில் சிலந்தி ஒன்று பின்னிய இழையை நரகத்தில் விட்டு அவனைச் சொர்க்கத்துக்குத் தூக்க நினைக்கிறார் புத்தர். ஆனால், கந்தாதன், தனது துர்குணத்தால் நரகத்துக்குள்ளேயே விழுகிறான். நமக்குத் தெரிந்த நீதிக்கதையின் தன்மையிலேயே முடிவு அமைந்திருந்தாலும் புத்தரின் மனத்தை, கந்தாதனுக்கு மீட்சி அளிக்க முடியாத நிலை பாதிக்கிறது; அவமானமாக உணர்கிறார். கந்தாதனின் சுமையை புத்தரின் தோள்களிலும் ஏற்றிவிடுகிறார் ஆசிரியர்.
இக்கதைத் தொகுப்பில் உள்ள ஆறாவது கதையான ‘ஒரு மூடனின் வாழ்க்கைக் குறிப்புகள்’, காஃப்காவின் குட்டிக்கதைகளை நினைவுபடுத்துபவை. கிட்டத்தட்ட 120 பக்கத்தில் ஆறு கதைகளில் ஒரு வலுவான வேற்று மொழி ஆளுமையை அறிமுகப்படுத்தும் சத்தான நூல் இது.
உலகத்தின் பைத்தியத்தை விட, மனிதனின் பைத்தியம் சமமாகவோ சற்று குறைந்தோ இருக்கும்போது எல்லாம் ‘இயல்பில்’ இருக்கிறது. உலகத்தின் பைத்தியத்தை விட, மனிதனின் பைத்தியம் சற்று அதிகரிக்கும்போது, அவன், உலகத்து எதார்த்தத்துடன் தன் மோதலையும் தாக்குதலையும் தீவிரமாக்கத் தொடங்குகிறான். அவன்/ள் கலைஞனாக இருக்கும் போது அந்த மோதலை, அந்தத் தாக்குதலை தமக்கேயுரிய ஊடகங்களில் செய்கிறான்/ள். அந்த மோதல் வழியாக, அந்தத் தாக்குதல் வழியாக அவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் யாராலும் கண்டுகொள்ளப்படாத காணாத எதார்த்தங்களைப் பார்ப்பவர்களாகவும் கண்டு சொல்பவர்களாகவும் அந்த எதார்த்தத்தைப் படைப்பவர்களாகவும் ஆகின்றனர். அவர்கள் படைக்கும் எதார்த்தம் கொடூரமானதாக, பயங்கரமானதாக இருக்கலாம். ஆனால், அந்த எதார்த்தம் நம்முடனேயே இருக்கிறது. அதைத்தான் மண்டோவும், காஃப்காவும் அகுதாகவாவும் நமக்குச் சொல்கிறார்கள். நாம் பார்க்காத மெய்மையைப் பார்க்க விரும்பாத எதார்த்தத்தைச் சொன்னவர்கள் அவர்கள். வெற்றி, மகிழ்ச்சி என்று கடைவீதிகளில் உரத்துக் கூவப்படும் வாழ்க்கையைக் கொள்முதல் செய்யாமல் எதார்த்தத்தின் விளக்கில்லாத தெருக்களில் அலைபவர்கள் இவர்கள். ‘ஒரு மூடனின் வாழ்க்கைக் குறிப்புகள்’-ல் வரும் ஒரு நண்பனைப் போல மகிழ்ச்சியின் முகமூடிக்குள் பரவியிருந்த தனிமையை அடையாளம் காணமுடிந்த நண்பர்கள் அவர்கள்.
இவரது ‘மூங்கில் காட்டினுள்ளே’ கதைதான் அகிரா குரசவாவின் ‘ரஷோமான்’ திரைப்படமாக மாற்றம் பெற்றது. சினிமாவை கலை சாதனமாக உணரும் எந்தப் பார்வையாளனுக்கும் இன்றும் ஆழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் அந்தச் சினிமாவின் த்வனியும், கதாபாத்திரங்களின் நாடகியமான அசைவுகளும் சினிமா முழுவதும் உணரக்கிடைக்கும் மோனமும் வேர்கொண்டிருப்பதின் தடையங்களை ‘மூங்கில் காட்டினுள்ளே’ சிறுகதையின் வழியாகப் பார்ப்பது சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
"கட்டுக்கடங்காத களிப்பில் அப்போது எனக்குப் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் யாருமே இல்லை என்றும் இந்தப் பேனாவிலிருந்து வழிந்தோடும் வாழ்க்கை மட்டுமே சாசுவதம் என்ற வெறி பிடித்தது" என்று எழுதுகிறார் அகுதாகவா ‘சுழலும் சக்கரங்கள்’ கதையில். அது நித்தியத்துக்கான வேட்கை. அந்த வேட்கையோடு இனம் காணமுடிந்த எல்லாருக்கும் நிலைத்த வசீகரத்தை கொடுப்பவராக ரியுனொசுகே அகுதாகவா இருப்பார். இத்தனை அடர்த்தியாக, கோரங்களைப் படைக்கும் எழுத்துக்குள் மறைந்திருக்கும் சித்திரக் கலைஞனை முதல் முறையாகப் பார்க்கிறேன். சீன எழுத்தாளர் மா ஜியானின் ‘நாக்கை நீட்டு’ நூலைப் படித்தபோது, இந்த உணர்வை அடைந்திருக்கிறேன். உடலின் உள்ளுறுப்புகளுக்குள் கைகள் நுழையும் உணர்வு.
ஹாருகி முராகமி முன்னுரையில் சொல்வது போன்றே, தனித்தன்மை வாய்ந்த ஒரு கலாசாரத்தின் நல்ல அம்சங்களைப் பாதுகாத்துக் கொண்டே பிற கலாசாரங்களின் அதிர்வலைகளையும் வாங்கிக் கொண்டிருக்கும் நமது காலத்தில் அகுதாகவா போன்றவர்கள் நாம் எப்படி நவீனமடைகிறோம் என்பதை ஞாபகப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
படைப்பின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நூல் தயாரிப்பைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட காலத்தில், இந்த நூல் ஒரு அழகிய பரிசென்ற உணர்வை அளிக்கிறது.
Comments