Skip to main content

காப்ரியேல் கார்சியா மார்க்வேஸின் அம்மா


காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் படைப்புலகத்துக்குள் அறிமுகமாக விரும்பும் ஒரு தமிழ் வாசகனுக்கு சரியான நுழைவாயிலென அவர் எழுதிய ‘செவ்வாய்கிழமை மதியத் தூக்கம்’ கதையைச் சொல்வேன். அதனால்தான் போலும், அக்கதை தமிழில் நிறைய பேரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆளையே கிறங்கடித்து மயங்க வைக்கும் தென்தமிழகத்து வேனல் பிரதேசத்தின் சுடும் வெக்கை, மனிதர்களின் அகத்திலும் ஆளுமையிலும் பரவியிருக்கும் தன்மையோடு அடையாளம் காணக்கூடிய கதை அது. 

வறுமை காரணமாக ஊருக்குள் திருடவந்து, ஒரு விதவையின் வீட்டுக்கதவை இரவில் திறக்க முயலும்போது, தற்காப்புக்காக அந்த விதவையால் சுடப்பட்டு இறந்துபோய், புதைக்கப்பட்ட திருடனைத் தேடி அவனது தாயும் தங்கையும் அந்த ஊருக்கு அடுத்த வாரம் வருவதுதான் கதை. அவர்கள் கையில் புதைக்கப்பட்ட மகனுக்கும், அண்ணனுக்கும் வைப்பதற்கு தண்ணீர் தெளிக்கப்பட்ட மலர்க்கொத்து இருக்கிறது. அடுமனை அடுப்புகள் போல வீடுகள் கொதித்துக் கொண்டிருக்கும் செவ்வாய்கிழமை மதியநேரத்தில் அவர்கள் அந்த ஊருக்கு ரயிலில் வருகிறார்கள். ரயில் பயணம் சிறுகதையின் முன்பகுதியில் விவரிக்கப்படுகிறது. இறங்கவேண்டிய ரயில் நிலையத்தில் அம்மா தனது மகளான சிறுமியிடம், ஊருக்குள் போய் அழக்கூடாது, இப்போதே அழவேண்டுமானால் அழுதுகொள் என்று சொல்லிவிடுகிறாள். துக்கத்துக்கான கருப்பு முக்காட்டுடன் அவர்கள் ஊருக்குள் நுழைந்து கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பாதிரியார் வீட்டை விசாரித்து அடைகிறார்கள்.

அந்த அம்மாவிடம் பாதிரியார், ஏன் அவனை நல்லபடியாக வளர்த்திருக்கலாமே என்று கேட்கிறார். அம்மா திடமாக, அவன் நல்லவன்தான் என்று சொல்லி, உணவுக்காக யார் வைத்திருக்கும் பொருளையும் திருடக்கூடாது என்று அவனை வலியுறுத்தியிருப்பதாகவும் அதன்படியே அவன் நடந்துகொண்டான் என்றும் சொல்கிறாள். திருடாவிட்டால், குத்துச்சண்டையில் ஈடுபட்டுத்தான் பணம் சேர்த்து தங்களைக் காப்பாற்ற வேண்டியிருந்ததாகவும் குத்துச்சண்டைக்குப் போய் அவனது பற்கள் முழுவதும் விழுந்துவிட்டதென்றும் சொல்கிறாள். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் குத்துச்சண்டையில் ஈடுபட்டு காயத்துடன் அவன் கொண்டுவரும் காசிலேயே இரவு உணவைச் சாப்பிட்டோம் என்று சொல்கிறாள்.

கடவுளின் விருப்பம் யாராலும் விளக்க முடியாதது என்று பாதிரியார் சொல்கிறார். அவநம்பிக்கை, தாங்க முடியாத மதிய வெம்மை இரண்டுமே சேர்ந்துதான் அவரை இப்படிச் சொல்ல வைக்கிறது. 

சர்வாதிகார ஆட்சியில், பெருநிறுவனங்களால் நிலமும் வளங்களும் முற்றிலும் சுரண்டப்பட்ட ஒரு கண்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் அவலத்தை அவள் சில வரிகளில் விளக்கி விடுகிறாள். வெயில் வீழ்ந்தபிறகு செல்லலாம் என்று பாதிரியார் சொல்லியும் பிடிவாதத்துடன் அதேவேளையில் கண்ணியத்துடன் மறுத்து, மகன் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறைத் தோட்டத்தை நோக்கி சாவியை வாங்கி ஊரார் அனைவரும் வேடிக்கை பார்க்க மகளுடன் போகிறாள் தாய். 

காப்ரியேல் கார்சியா மார்க்வெசின் ஏழு வயதில், அவரது பூர்விக ஊரான அராகடாகாவில் நிகழ்ந்த சம்பவத்தைத் தான் ‘செவ்வாய்கிழமை மதியத் தூக்கம்’ சிறுகதையில் எழுதியுள்ளார். தனது சுயசரிதையான ‘லிவிங் டு டெல் தி டேல்’-ல் தனது அம்மாவுடன் பூர்விக வீட்டை விற்பதற்காக அராகடாகாவுக்குப் போகும்போது, ‘செவ்வாய்கிழமை மதியத் தூக்கம்’ சம்பவத்தை நினைவுகூர்கிறார். 

உண்மைச் சம்பவத்தில் திருடனைச் சுட்டவளின் பெயர் மரியா கான்சுகெரா. சிறுகதையில் அவள் விதவை ரெபாக்கா. இரண்டு பேரும் முன்பொரு காலத்தில் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டு அதற்குப்பின்னர் உபயோகிக்கப்படாத புராதன ரிவால்வரால் கதவின் பூட்டுப்பகுதியை நோக்கி அச்சம் காரணமாகச் சுடுகின்றனர். சிறுகதையில் கர்னல் புயண்டியா பயன்படுத்திய துப்பாக்கி என்ற குறிப்பு வருகிறது. இரண்டு பேருமே அதுவரை துப்பாக்கியைப் பயன்படுத்தி அறியாதவர்கள். சரியாக திருடனின் நெஞ்சில் கதவைத் துளைத்து குண்டு பாய்ந்துவிடுகிறது. குண்டு பாய்ந்தவுடன் அம்மா என்று அலறியதாக மரியா கான்சுகெரா தன்னை விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லி ஓவென்று அழுகிறாள். ஆனால், சிறுகதையில் அந்த விவரங்கள் எதுவுமே இல்லை. ஒரு திருடன் அம்மா என்று சொல்லி வீழும்போது அந்தக் குரல் அந்தப் பெண்ணைத் தாங்க இயலாத ஒன்றாக மாற்றுகிறது. அந்தத் திருடன் புதைக்கப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு கருப்புக் குடையுடன் அவனுக்கு அஞ்சலி செலுத்த அம்மாவும், 12 வயது தங்கையும் வந்ததையும் மார்க்வெஸ் பார்த்துள்ளார். 

 தனது ஏழு வயதில் பார்த்த சம்பவத்தை கதையின் மையத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார். திருடனென்று ஊர் சொன்னாலும், அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மகனைப் பார்க்க வரும் தாய்மையின் கம்பீரத்தோடும் உரிமையோடும் அடையாளம் கண்டே  மார்க்வெஸ் இந்தக் கதையை எழுதுகிறார். அந்தத் தாயின் மகனான திருடனின் இடத்தில் தன்னை இருத்திப் பார்க்கிறேன் என்றும் சொல்கிறார். வீட்டை விற்க அதேபோல ஒரு வெயில் மதியத்தில் பூர்விக ஊருக்குள் அம்மாவுடன் நுழையும்போது மரியா கான்சுகெராவின் வீட்டுக் கதவில் இன்னமும் துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட பொத்தலின் தடையத்தைப் பார்த்தபடி கடக்கிறார் மார்க்வெஸ். 

அம்மா என்று அலறி விழுந்ததைத் தான் மரியா கான்சுகெராவால் பொறுக்கவே முடியவில்லை. 



ஒரு ஏழை, திருடனாவதற்கு வரலாற்றில் பல நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், அவன் இறப்பதற்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் திருடனாவதற்கான நியாயங்கள் அவனது அம்மாவுக்கும் சகோதரிக்கும் தெரிந்திருப்பதனாலேயே, வெயிலில் காயத் தொடங்கும் பூக்களை ரயில் நிலையத்தில் கிடைக்கும் தண்ணீரைத் தெளித்து ஈரப்படுத்தி செய்தித்தாளில் சுற்றி, ஈரமே இல்லாத ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் மகனை சகோதரனைக் கடைசியாகக் கண்டு வழியனுப்ப வருகிறார்கள். 

செவ்வாய்கிழமை மதியத்தூக்கம் சிறுகதை எந்த நாட்டு வாசகரும் எந்தப் பண்பாட்டைச் சேர்ந்தவரும் அடையாளம் காணக்கூடிய கதை. தாய் என்ற படிமம் தொடர்பிலான துடிப்பு நம்மில் இருக்கும் வரை நிலைத்திருக்கும் படைப்பு அது.   


மார்க்வெஸ், இளைஞனான பிறகு, தாயுடன் அரகாடகாவுக்கு வரும் ரயில் பயண அனுபவத்தைத் தான், ‘செவ்வாய்கிழமை மதியத்தூக்கம்’ சிறுகதையில் அம்மா, மகளின் ரயில் பயணமாக மாற்றியிருக்கிறார். அம்மாவும் மகளும் வரும் ரயிலில் மூன்றாவது வகுப்பு இருக்கிறது.

மார்க்வெஸின் 23 வயதில், அவரது அம்மாவுடன் பூர்விக ஊருக்கு ரயிலில் பயணிக்கும்போது, மூன்றாவது வகுப்பு முற்றிலும் இல்லாமலாக்கப்பட்டு விட்டது. அவர்கள் பயணிப்பது இரண்டாம் வகுப்புப் பெட்டியில்.   

Comments