சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்கமுடியாத தனித்துவ எழுத்து ப. சிங்காரத்துடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை மற்றும் மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப. சிங்காரம். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். ‘புயலில் ஒரு தோணி’ நாவல், தமிழில் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்புகளுடன் ஒப்பிடமுடியாதது. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும்படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு அந்த நாவல்.
சரித்திரத்தின் கதியில் தோன்றி மறையும் சுடர்ந்து அவியும் கரைந்து தேயும் மானுடர் வாழ்வு தான் ப. சிங்காரத்தின் கவனம். அந்த வகையில் குடும்பம் என்ற மையத்திலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த தமிழ் நாவல்களின் மந்தைப் போக்கிலிருந்து விலகிய படைப்பு இது. வீடுகளின் தாழ்வாரத்துக்குள் கூட எட்டிப் பார்க்காத இந்த நாவலில் விதிவாதம், கடவுளின் கைகள் கட்டுப்படுத்தாத ஒரு அசலான நவீன தமிழ் தனிமனிதர்களின் வாழ்க்கைகளைப் பார்க்கிறோம்.
சுதந்திர விருப்பு, சாகசத்தின் வழியாக, தான் செய்யும் செயலுக்குப் பொறுப்பேற்றுத் தனது வாழ்வை நிர்ணயிக்க முயலும்போது அங்கே கடவுளின் இடம் இல்லாமலாகிறது. சாகசத்தின், சுதந்திர வேட்கையின் வேகப் பாய்ச்சலில் கடவுள் புழுதியாய் மறைந்துவிடுகிறார். அந்தச் சாகசப் பரிமாணத்தைத் தமிழ் நாவலுக்கும் அதன் வழியாக இன்னொரு அறிதலையும் நிகழ்த்துவதுதான் ‘புயலில் ஒரு தோணி’.
மதுரை என்னும் தொன்ம நிலத்தை, கடலுக்கு அப்பால் வெகு தொலைவிலிருந்து பார்க்கும் படைப்பு ‘புயலில் ஒரு தோணி’. இலக்கியம், பண்பாடு, அரசாட்சி சார்ந்து தமிழரிடம் நிலவும் பழம்பெருமைகளையும் பெருமிதங்களையும் இந்நாவலின் பிரதான பாத்திரமான பாண்டியனும் அவனது நண்பர்களும் முற்றிலுமாக விமர்சித்துக் கேள்விக்குள்ளாக்குகின்ற்னர். ஈசனின் முகத்திலும் நெஞ்சிலும் பொற்பிரம்பால் விளையாடிய அரிமர்த்தனப் பாண்டியனின் நவீன உருவாகவே பாண்டியனை ப. சிங்காரம் படைத்திருக்கிறார். இந்த நாவலைப் பாண்டியனை நிமித்தமாகக் கொண்டு பின்தொடரலாமே தவிர அவன் நாவலின் மையமும் அல்ல.
மதுரை என்று நாம் இன்றும், சிங்காரத்தின் நாவலிலும் பார்க்கும் மதுரை கடல்கொண்ட மதுரையின் நினைவாக நிழலாக எதிரொலியாகவே மிஞ்சியுள்ளது. கடல்கொண்டு அழிந்துபோனதாகக் கூறப்படும் மதுரையின் ஏக்க நினைவின் எச்சம் மீனாட்சியின் கண்களாக மட்டுமே இங்கேயுள்ளது. மதுரையை மையமாக வைத்துப் புனையப்பட்ட திருவிளையாடற் புராணமும், ஹாலாஸ்ய புராணத்தின் மொழிபெயர்ப்பே. எப்போதோ இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தின் நிழல்களாக நினைவுகளாக எதிரொலிகளாக மதுரை பழமையாகவும் புதுமையாகவும் இருந்துகொண்டிருக்கிறது. அவை எழுந்து நீண்டு மறையும் இடத்தில், பகலில் குதிரைகளாக இருந்தவை இரவில் நரிகளாக ஓலமிடும் விபரீதம் நடக்கிறது. உருவத்துக்கு உணர்வு உண்டு. நிழலுக்கு உணர்வு கிடையாது. குரலுக்கு உணர்வு உண்டு எதிரொலிக்கு உணர்வு கிடையாது. ஆனால் நனவுக்கும் நினைவுக்கும் உணர்வு உண்டு.
மெடானிலிருந்தாலும் பினாங்கிலிருந்தாலும் மதுரை சார்ந்து சின்னமங்கலம் சார்ந்து ஒலிக்கும் பல்வேறு குரல்கள் வழியாக கடைவீதிகளையும் பாலியல் தொழிலாளர்கள் குடியிருக்கும் சந்துகளையும் சிறுவர்கள் விளையாடும் மைதானங்களையும் ஊர் பொதுவிடங்களையும் குரல்கள் வழியாக, பேச்சுகள் வழியாக நினைவின் எதிரொலிகள் வழியாகவே ப. சிங்காரம் படைத்திருக்கிறார். காமமும் சல்லாபமும் போகமும் பெண்களும் மின்னும் விளக்குகளைப் போல மனிதர்களின் உயிரை ஒளிர்விக்கின்றனர். இந்த நாவலில் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் பெண்களின் சன்னிதானத்தை நோக்கியே செல்கின்றன. மதுரை, சின்னமங்கலம், மெடான், பினாங்கு ஊர்களை மையமாகக் கொண்டு, தமிழ் வெகுமக்களிடையே நிலவிய பல்வேறு விதமான பேச்சு வழக்குகளை பரந்த அளவில் ரசமாகப் பதிவு செய்திருக்கும் பிறிதொரு நாவல் தமிழில் இல்லை. அத்தனை மொழிகள், அத்தனை வழக்காறுகள், அத்தனை நையாண்டிகள், பகடிப்பாட்டுகளும், கதைகளும் கனவாய் பழங்கதையாய் வெறும் இரைச்சல்களாக மாறி மறைந்துவிடும் என்பதைச் சொல்வதற்குத்தான் இத்தனை உரையாடல்களை தன் நாவலில் மறுபடைப்பு செய்திருக்கிறார்.
தமிழ் மரபும், தமிழர் வரலாற்றுணர்வும், சமகால வாழ்க்கை நம் முன்னர் பரத்திய புதிய தெருக்காட்சிகளும் வழக்காறுகளும் சேர்ந்த மொழி அவருடையது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினத்தார், தாயுமானவர் தொடங்கி முத்துக்குட்டிப் புலவரின் தெம்மாங்கு, பெரிய எழுத்துக் கதை, தமிழ் சினிமாவின் ஆரம்ப கால சலனங்கள், மலேசிய, சீன, இஸ்லாமியப் பேச்சுவழக்குகள் எல்லாவற்றையும் கேட்கமுடியும் ஒரு பெருநகரத்தின் சந்தையைப் போல் உள்ளது.
பாண்டியனும் மாணிக்கமும் அடிகளும் ஆடிட்டரும் கல்யாண மண்டபமொன்றில் சந்தித்து இரவு முழுக்க நடத்தும் இலக்கிய, தத்துவ உரையாடல் நடக்கும் நிகழ்ச்சி, உலகத்தின் ஆதித் தொழில் நடக்கும் அறைகளுக்கு வெளியில் அந்தச் சத்தத்தோடு நிகழ்கிறது. தமிழ் அரசர்கள் அழிந்துபோனதற்குக் காரணம் மிதமிஞ்சிய போகமும் அதனால் விளையும் டம்பமும் தான் காரணம் என்கிறான் பாண்டியன். பாண்டியனை, ஆனால் ஆசிரியத் தன்னிலையாகக் கருத இடமில்லை. தாயுமானவரின் துறவு மனப்பான்மையும் அதேநேரத்தில் தன் சாகச வாழ்க்கைக்கு நடுவில் இளைப்பாறுதலாக பேரழகிகளுடனான போகத்தையுமே நாடும் இரட்டையாக இருக்கிறான்.
எத்தனையோ வீழ்ச்சிகளுக்குப் பின்னரும் தமிழ் சமூகத்தை நீடிக்கச் செய்யும் பண்பு குறித்த ஆழமான கேள்வியை நம்மிடம் நாவல் எழுப்புகிறது. உண்மையிலேயே பழையவை மகத்துவமாகவே இருந்தாலும் இப்போது நமது நிலை என்ன? என்றும் கேட்கிறது.
இந்த நாவலில் கொடிகட்டிப் பறந்த தமிழ் வியாபாரிகளின் வாழ்க்கை முதல் அவர்களது வீழ்ச்சி வரை பேசப்படுகின்றன. உலகம் முழுக்க பேரரசுகள் எழுந்து நிலைத்து மடிந்த கதை பேசப்படுகிறது. நகரங்களின் செழிப்பும் சிதைவும் விவரிக்கப்படுகிறது. மனிதன், கீர்த்தி என்று நம்பி அவன் அடைந்த அத்தனை வெற்றிகளுக்கும் பொருள் என்னவென்று பாண்டியன் விசாரிக்கிறான்.
அதே நேரத்தில் அத்தனை பயனின்மைக்கும் கசப்புக்கும் பரிகசிப்புக்கும் இடையில் மனிதனைப் பார்த்து, இப்போது இந்தக் கணத்தில் ஏதாவது செய், கடவுள் இல்லை, பழைய மகத்துவங்களுக்கும் பொருள் இல்லை. அதனால் வேறு வழியும் இல்லை என்றும் கிசுகிசுப்பது போல் உள்ளது. இது இன்றைய மனிதனுக்கும் முக்கியமான செய்திதான்.
தேய்ந்து கரைகிறது, கரைந்து தேய்கிறது, கரைந்து தேய்ந்து மறைகிறது என்பதுதான் ‘புயலில் ஒரு தோணி’ எனக்குத் தரும் சித்திரம். யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஏதும் உண்டென்றால் நல்லதோ தீயதோ, செயலைத் தவிர மனிதனுக்கு வேறு நிவர்த்தி இல்லை என்கிறாரோ சிங்காரம்?
Comments