Skip to main content

அம்மாவின் நிலவு


'எனக்கு ஞாபகமுள்ள பெளர்ணமிகள்' என்னும் தேவதச்சனின் கவிதையைப் படித்திருக்கிறீர்களா? வேறு வேறு சந்தர்ப்பங்களில் பார்த்த பௌர்ணமி நிலவுகளை, நினைவு கூரத்தக்க அந்த சந்தர்ப்பங்களோடு சேர்த்து எழுதியிருப்பார்.

இரவில் இந்த உலகின் மீது ஒளிபடர விடும் நிலவை, நமக்கு வழங்கப்பட்ட அரிதான பரிசு என்று எப்போதாவது நாம் உணர்ந்திருக்கிறோமா? அதேபோல்தான் அம்மாவும். அவள் இருக்கும் வரை அவளுடைய அபூர்வத்தன்மை நமக்குத் தெரிவதே இல்லை. ஏகபோக உரிமையுடன் மொத்தமாக அவளை உபயோகிக்கிறோம். அவள் நம் வாழ்க்கையை விட்டு நீங்கிய பிறகுதான் தெரிகிறது. அவள் நிலவைப்போல எவ்வளவு அபூர்வம் என்று. காலையில் வெளியே போய்விட்டு வருவதற்குள் பித்துப்பிடித்து, சாப்ளினை நீண்ட தனிமையின் பாதைக்குள் விடும் சாப்ளினின் அம்மாதானே அவருக்குப் பெரிய தூண்டுதல்.

நான், எட்டாவது படிக்கும் போது காலாண்டு விடுமுறையின் அக்குறிப்பிட்ட தினத்தின் இரவில், கடலின் மேல் நான் பார்த்த நிலவு ஞாபகம் வருகிறது. அன்று காலை அப்பா வுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்டை. இயல்பானதைவிட அன்று கூடுதல். அம்மா அப்பாவிடம் நிறைய அடிகள் வாங்கியிருந்தாள். இடையில் புகுந்த எனக்கும் அடிகள் விழுந்திருந்தன. இருவரும் வேலைக்குச் சென்றபிறகு அழுகை உலர்ந்த முகத்துடன் குளிக்காமலேயே சோர்வும், நடுக்கமும், இன்னும் உடலில் மிச்சமிருக்க, விளையாடிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக அம்மா மதியம் பன்னிரண்டு மணிக்கே அலுவலகத்திலிருந்து திரும்பிவந்தாள். புழுதி படிந்திருந்த என்னைப் பார்த்து, "கால் கையை கழுவிட்டு வா” என்றாள். ஏதோ பிரச்சினை, நமக்கு இதுவரை தெரியாத ஒரு முனையிலிருந்து உருவாகியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. நான் சோற்றை விழுங்க இயலாமல் விழுங்கிக் கொண்டிருந்தேன். அம்மா கனத்த முகத்துடன் என்னைப் பார்த்து விட்டு, விட்டத்தைப் பார்த்துக்கொண்டே உருண்டை உருண்டையாக சோற்றை கையில் உருட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள். கடைசி உருண்டை முடிந்ததும் தட்டில் கைகழுவியபடி, "திருச்செந்தூருக்குப் போகிறோம்” என்றாள்.

"ஒரு விசேஷமும் இல்லையே, திருச்செந்தூருக்கு எதற்கு?" காரணம் எதுவும் இல்லாமல் ஏன் என்று என் மனம் கேட்டது. ஆனால் அம்மாவிடம் கேட்கத் தோன்றவில்லை. "டிரஸ் எடுக்கணுமா," என்றேன். “வேண்டாம்” என்று உறுதியாகச் சொன்னாள்.

நயினார்குளம் பஸ் நிறுத்தத்தில் இரு கழுதைகள் வெயிலில் சமைந்து சிலைகள் போல் நின்று கொண்டிருந்தன. எங்களுக்கு ஜன்னலோர சீட் கிடைக்கவில்லை. புதுக்கோட்டைக்கு முன்னுள்ள பாலத்தைக் கடக்கும் போது அம்மாவிடம் கேட்டேன். “எதற்கு திருச்செந்தூர் போகிறோம்."
“எனக்கு இனி இருக்கப் பிடிக்கவில்லை . அந்த முருகன் சந்நிதியில்தான் எனக்கும், உங்கப்பாவுக்கும் கல்யாணம் ஆச்சு. அவனோட கோயிலுக்குப் பக்கத்திலேயே கடல்லயே மூழ்கி இறந்துடலாம்னு நினைக்கிறேன். உன்னைத் தனியாக என்னால விட்டுவிட்டுப்போக முடியாது. நீயும் வர்றியா?” என்றாள்.

எனக்கு சிறுவயதில் பார்த்த நல்லதங்காள் படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. எவ்வளவு பெரிய கடல்! நான் அம்மாவிடம் உறுதியாகச் சொல்லி விட்டேன், என்னால் முடியாதென்று. நான் வராவிட்டால் அவளும் போகமாட்டாள் என்று என் மனம் நம்பியது. திருச்செந்தூர் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். வெளியிலிருந்தே அம்மா தனக்குப் பிடித்த முருகனை தரிசித்தாள்.

"கந்தசஷ்டி கவசம் படிக்கிற பெண்கள் எல்லாருக்குமே இவன் கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் கொடுப்பதில்லை” என்றாள்.

அம்மாவும் நானும் பிரகாரக் கல்திண்ணையில் உட்கார்ந்து சமோசா சாப்பிட்டோம். சமோசா அன்று எனக்கு எளிதாக உள்ளிறங்கவில்லை. அப்பாவை மிரட்டி, திருத்த உரிமையுடைய அவருடைய மாமா தூத்துக்குடியில் இருந்தார்.

"ஆச்சியிடமும் தாத்தாவிடமும் பேசினால் அப்பா உன்னை அடிக்கமாட்டார்” என்றேன் அம்மாவிடம், “எத்தனை தடவை அவங்கிட்ட பேசினாலும் அவரு திருந்தமாட்டாரு” என்றாள் அம்மா.

கடைசியில், நான் தூத்துக்குடி தாத்தா வீட்டுக்குப் போய் எங்கள் நிலையைச் சொல்வது. சரிவராவிட்டால் திரும்ப வந்து அம்மாவுடன் சேர்ந்து கடலுக்குள் மூழ்கி விடுவது என ஒருவழியாக முடிவு செய்தோம். நான் திரும்பி வரும்வரை அம்மா இருப்பாள் என்ற தைரியம் இருந்தாலும் ஒரு சங்கடமும் நிச்சயமின்மையும் அவளை விட்டுச் செல்வதில் இருந்தது. யார் துணையும் இல்லாமல் தனியாகச் செய்த முதல் பிரயாணம் அது. மனக்குமைச்சல் கடை விரித்திருப்பது போல, தூத்துக்குடியின் தெருக்களில் குப்பை. வெயில் விடைபெறும் தருணத்தில் இருந்தது.

தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் இது சகஜமான விஷயம்தான். ஆனால் அம்மா திருச்செந்தூரில் உட்கார்ந்து என்னை அனுப்பியதுதான் வழக்கமற்றதாக இருந்திருக்க வேண்டும். “தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. உன்னுடன் அவர் வரமுடியாது. அப்பாவை நாங்கள் அழைத்துப் பேசுகிறோம். உடனே நீ போய் அம்மாவை சீக்கிரம் அழைத்து வந்துவிடு. நைட் அங்கு இருக்காதீங்க” என்றாள் ஆச்சி.

திரும்ப திருச்செந்தூர் கோயில் வாசலில் இறங்கும்போது நன்கு இருட்டியிருந்தது. வள்ளிக்குகை அருகிலுள்ள பிரகாரத்தில் நடக்கத் தொடங்கினேன். இறக்கத்தில் கடல் மினுமினுத்துக் கொண்டிருந்தது. திருப்பத்தில் திரும்பினால் போதும் அம்மா தெரிந்துவிடுவாள். "இனிமேல் எல்லாம் சரியாகிவிடும். தாத்தாவும், பாட்டியும் வீட்டில் நமக்காகக் காத்திருக்கிறார்கள். அம்மா உன் உருவம் எனக்குத் தெரியும் வரை அங்கேயே உட்கார்ந்திரு" என்று ஜெபித்தபடி கண்ணை மூடிக்கொண்டு பிரகாரத்தில் ஓடத் தொடங்கினேன். பாதிதூரம் ஓடிக் கண்ணைத் திறந்தேன். படிக்கட்டில் அம்மா அமர்ந்திருந்தாள். நாங்கள் இரண்டு பேருமே அப்போது பெருமூச்சு விட்டிருக்கவேண்டும்.

இந்நிகழ்ச்சியை நினைக்கும்போதெல்லாம் பிரகாரத்திலிருந்து பார்த்த கடலின் மேல் நிலவும் சேர்ந்து ஒரு சோபையைக் கொடுக்கிறது. ஆனால் நான் அன்று பார்த்த கடலில் நிலவு இருந்ததா? எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.

(தீராநதி, 2003)

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக