Skip to main content

சொற்புணர்ச்சி



நான் ஏற்கனவே

உலகுக்கு வந்திருக்கும் ஞாபகத்தின்

ஒரு எச்சம்

மரத்தின் பழுத்த உலர்கிளை

முதிய காகம்

நெடுங்காலம் பயன்படாதிருக்கும்

விருந்துமேஜை

அதன் மீது படரும் துயர ஒளி

என் காதலைப் போன்றது

காலடிகளின் ஓசைக்காக

என் வாசல்கதவு தட்டப்படுவதற்காக

நள்ளிரவிலும் காத்திருப்பவன்

என் சிரிப்பில் சதா ஒளிந்திருக்கும்

அழுகை

என் நண்பன்

என் வீட்டிலிருந்து

தெருவைக் கடக்கும் பாதசாரிகளை

மணிக்கணக்காய்ப் பார்ப்பதில்

ஒரு திருப்தியும் ஏக்கமும்

அவர்களோடு அவளும் போனாள்

அவர்கள் யாரும் என்னை

உடன் அழைக்கவில்லை

அவளும் கூட

000

அப்பாவையும் அம்மாவையும்

எண்ணுகையில்

மணற்கடிகாரம்தான்

என் நினைவுக்கு வருகிறது

அப்பா செயலால் நிரம்பி

மணலைச் சலித்த

மேற்குடுவை

அம்மா அவர் சலித்த மணல் நிரம்பிய

பைத்தியம் படர்ந்த

கீழ்க்குடுவை

இப்போதெனக்கு

இருவர் மீதும்

சமமான அனுதாபமே

இருப்பினும்

என்மீது

அம்மா அதீதமாய் தன்னை விட்டுச்சென்றுள்ளதை

என்னால் மறுக்கவியலாது

தன் புகார்களையும்

நோய் என்றும்

ஞாபகம் என்றும்

அனுதினமும்

பைத்தியம் துடிக்கும்

இந்தக் காயத்தையும்

000

நான் காத்திருந்ததெல்லாம்

மரணத்தின் புணர்ச்சிக்காக

மதுபருக அபூர்வமாய்

வரும் நண்பன் அல்ல

மரணம்

மாறும் ஒரு பருவமும் அல்ல

பிரயாணத்தை

யாரிடமும் பகிர இயலாமல் ஆக்கும்

ஒரு மாயநகரம்

என் தனிமையைப் போல

000

அழகைக் காணும்போதெல்லாம்

பூரித்து அவளாய் நிற்கும்

மலரைக் காணும் கணம்தோறும்

என் தோல்வியில் சுருண்டு

சாவு என்று

என்னை நான் பலமுறை சபித்துள்ளேன்

000

மரணம்

என்னை நெருங்கி

ஸ்பரிசிக்கும் போது

நான் என்ன உரைப்பேன்

கனத்த சம்பவங்களற்ற

ஒரு காதை என்று.



(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பிலிருந்து)


Comments