Skip to main content

தூல சூட்சும சன்னிதி


கோயில் வாசல்களில்

உலர்ந்த புல்வெளித் திடல்களில்

பஜார் மைதானங்களில்

வந்து நிற்கிறது

ஈக்களை விரட்டச் சுழல்கிறது  

கம்பீரக் கூந்தல் வால்

குதிரையே குதிரையே

எழில் பொங்கிப் பிரவகிக்கும் குதிரையே

உயிர் சமைக்கப்படும் கருப்பைச் சட்டியில்

திரளும் உபரிதான்

உன் அழகா

கலையா

கடவுளா

சுட்டி பீலி குச்சம்

சூடாமணி சிக்குதாகு

சாமரை

வல்லிசை

பல்பிடிக் கண்டிகை

சுருள் திருகு

சேணப்பறி

அங்கவடி

நூபுரப்புட்டில்

பசும்பாழி

சிலம்பு 

தாழ்

தண்டை

தலைமுதல் கால்வரை

நெற்றி முதல் பிருஷ்டம்வரை 

நீ அணியும் அணிகள்

கோபுரங்களில் கோயில் சிலைகளில் 

இன்று

எச்சங்கள் ஒச்சங்கள்

குதிரையே குதிரையே

இத்தனை அணிகளையும் பூட்டிய பிறகு

குதிரை அங்கே இருந்ததா

குதிரை இல்லை 

குதிரை இல்லை

குதிரை இல்லை

000

கிழக்குக் கோபுரத்துக்குள்

நுழைந்து

நந்தியை

நினைவில் இப்போது

தாண்டினாலும்

தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறது

தவிலும் நாயனமும்

இசைப்பவர் வேண்டாம்

கருவியும் வேண்டாம்

இன்னும் வெளிச்சம் நுழையாத

இருள்மூலைகளில்

அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றன

ஒடுக்கிய குதிரைகள் போல்

கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்

செல்லும் நுழைவாயிலின்

பக்கவாட்டு மேடையின் மூலையில்

தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்

புழங்காத நாட்களில் அழுக்குத் துணிகள் சுற்றி

எண்ணெய் மக்கி நெடியடிக்கும் 

சுவரில் தொங்கும்.

உச்சிகால பூஜை வேளையில்

சந்தடி இல்லாத நேரத்தில்

கோயிலுக்குள் புகுவோம் சிறுவர்கள் நாங்கள்

தவிலும் பம்பையும் தொங்கும் மேடையில்

துள்ளி ஏறி

தவிலை தப்தப்பென்று அடித்துவிட்டு

அரவமில்லாத மண்டபத்தைத் துடித்தெழுப்பி

பறந்து ஓடுவோம்

ஆமாம்

இன்னமும்

கோயிலின் நடுவில் 

தன் ஆதங்கத்தை 

நூற்றாண்டுகள் அடக்கப்பட்ட பைத்தியத்தை 

ஒலிக்காமல்

இருக்கிறது அந்த வாத்தியம்

கைகளைக் கொண்டு விடுதலை செய்ய முடியாது. 

உள்ளே வா

சந்தடி இல்லாத உச்சிகால வேளையில்

விளையாட்டாக

நுழையும் சிறுவர்களைப் போல உள்ளே வா

உள் ஒடுக்கி

அமர்ந்திருக்கிறது 

தவிலும் பறையும் பம்பையும்

உள்ளே வா

கைகளைக் கொண்டு 

சிலைக்குள் இருக்கும்

 குதிரையை

விடுதலை செய்யமுடியுமா

உள்ளே வா. 

(பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு)

Comments