குப்பைகளிலிருந்து
கவிதைகளைச் சேகரிக்கும்
சிறுவன் நான்.
எரியும் சூரியனுக்குக் கீழே
நான் வெயிலின் மகன்
தனிமையான இரவு வானத்தின் கீழே
நான் நட்சத்திரத்தின் பிள்ளை.
மழையில் என் வசிப்பிடம்
மூழ்கும்போது
தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில்
ஒரு சிசு நான்.
ஈரக்குப்பை
உலர்குப்பை
மக்காத குப்பை அனைத்தும்
எனது கைகளுக்குத் தெரியும்
கண்ணாடிப் பொருள்களால்
ஊறுபட்ட காயங்களும் தழும்புகளும்
எனக்கு உண்டு.
நட்சத்திரங்களின் உயரத்திலிருந்து
குப்பைத்தொட்டிகளைப் பார்த்தால்
இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால்
ஆனதாய் நீங்கள் சொல்லக்கூடும்
ஆனால் உண்மையில்
இவை ஆழமற்றவை..
நான் நடக்கும் நிலத்திற்கு
அடியில்
கடல் கொண்ட நகரங்களும்
மூதாதையரும்
அவர்தம் மந்திரமொழியும் புதைந்துள்ளன
எனக்குத் தெரியும்.
ஆனாலும்
ஒரு ஆணுறையை
எறியப்படும் உலர்ந்த
மலர்ச்சரங்களை
குழந்தைகளின் உடைகளை
தலை உடல்
தனியாகப் பிய்க்கப்பட்ட பொம்மைகளை
விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை
ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளை
சுமந்து செல்லும்போது
பூமியின் பாரத்தை
உடைந்த சிலம்புகளை
சுமக்கும்
புனிதத்துக்கம் எனக்கு.
Comments